×

மாணவர்கள் பெயிலான பாடப்பிரிவுக்கு சிறப்பு வகுப்பு

விழுப்புரம், ஜன. 22: விழுப்புரம் மாவட்டத்தில் காலாண்டு, அரையாண்டுதேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதால் மாணவர்கள் பெயிலான பாடப்பிரிவுகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்த சிஇஓ அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேலும் தேர்ச்சி குறைய காரணமான தலைமை ஆசிரியர்களுக்கு டோஸ் விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் அதிக கிராமப்புறங்களைக்கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டம் கல்வியில் தொடர்ந்து பின்தங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் கடைசி இடத்திற்கு போட்டிபோடும் மாவட்டம் விழுப்புரம் தான். கடந்த ஆண்டில் கூட பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் கடைசி இடத்தை பிடித்தது விழுப்புரம் மாவட்டம். ெதாடர்ந்து கல்வியில் பின்தங்கும் விழுப்புரம் மாவட்டத்தை இந்தாண்டு முதல் 10 இடங்களுக்குள் கொண்டுவர மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் ஆகியோர் பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகளின் வருகைப்பதிவேடு ஆய்வு, ஆசிரியர்களின் பணிகள், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் என ஒவ்வொன்றும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கல்வி மாவட்ட அளவில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை ஆட்சியர் சுப்ரமணியன், சிஇஓ முனுசாமி ஆகியோர் நேரடியாக சென்று ஆலோசனைக்கூட்டங்களை நடத்தி வழங்கி வந்தனர்.

இதற்கு முழுபலன் கிடைத்ததா? என்றால் அரையாண்டு தேர்வு முடிவுகளை பார்க்கும்போது இல்லை என்று தான் நிரூபணமாகியுள்ளது. ஆம், விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் காலாண்டு தேர்வில் 100க்கு 36 சதவீதம் என்ற நிலை இருந்தது. தற்போது அரையாண்டு தேர்வில் இந்த தேர்ச்சி சதவீதம் 53ஐ தொட்டுள்ளது. இன்னும் பொதுத்தேர்வுக்கு இரண்டு மாதமே உள்ள நிலையில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலை இருந்தால் வரும் பொதுத்தேர்வில் முதல் பத்து இடங்களை பிடிப்பது சந்தேகம் என்ற மனநிலையை ஏற்படுத்தியுள்ளது.

இருக்கின்ற மிகக்குறுகிய நாட்களில் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சிபெற வைக்க ஆசிரியர்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், பணிகள் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அவசர ஆலோசனைக்கூட்டம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடந்தது.

காலையில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பிற்பகல் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் நடந்தது. 601 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் சிஇஓ முனுசாமி கலந்துகொண்டு பேசினார். தேர்ச்சி குறைய காரணம் என்ன? ஆசிரியர்கள் முறையாக படிப்பு சொல்லிக்கொடுக்கவில்லையா? என பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அப்போது ஒவ்வொரு பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காட்டினை சுட்டிகாண்பித்து செம டோஸ் விட்டார். இப்படியிருந்தால் முதல் 10 இடங்களுக்குள் எப்படி வருவோம். இனிமேல் தலைமை ஆசிரியர்கள் காலை 8.30 மணிக்குள் பள்ளிக்கு வர வேண்டும். அரையாண்டு தேர்வில் மாணவர்கள் பெயிலான பாடப்பிரிவுகளுக்கு கல்வி மாவட்ட அளவில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. அதில் அந்தந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்களை பங்கேற்க வைக்க வேண்டும். பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்.
எப்படியாவது இந்த ஆண்டு முதல் 10 இடங்களுக்குள் விழுப்புரம் மாவட்டம் தேர்ச்சி விழுக்காட்டில் இடம்பெற வேண்டும். இருக்கின்ற நாட்களில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றி தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்த பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதில் நேர்முக உதவியாளர் சேவியர்சந்திரகுமார் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை