×

நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் தை திருவிழா தேரோட்டம்

நாகர்கோவில், ஜன. 22: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை பெருந்திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 13ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது. தினமும் நாகராஜா கோயில் திடலில் சமய சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9ம் திருவிழாவான நேற்று (21ம்தேதி) காலை நடைபெற்றது. காலை 9 மணிக்கு திருத்தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.  நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி கருப்பையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாத், குமரி மாவட்ட பால்வள தலைவர் அசோகன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, திருக்கோயில்கள் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோயில் மேலாளர்கள் ரமேஷ்குமார், சண்முகம், முன்னாள் நகராட்சி தலைவர் மீனாதேவ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள், அனந்தகிருஷ்ணன் பக்த சேவா அறக்கட்டளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என ஏராளமானவர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து, தேர் மதியம் 1.20 மணிக்கு நிலைக்கு வந்தது.

ரத வீதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நீர் மோர், குளிர்பானங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. ஏ.எஸ்.பி. ஜவகர் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். ேதரோட்டத்தையொட்டி குமரி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. காலையில் இருந்து அன்னதானமும் தொடர்ந்து வழங்கப்பட்டது. நேரம் செல்ல, செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்தது. ஓம் காளி, ஜெய் காளி என்ற கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலைக்கு வந்ததும் தீபாராதனை நடைபெற்றது.  இரவில் சப்தாவர்ணம் நடந்தது. இன்று (22ம் தேதி) 10ம் திருவிழா நடைபெறுகிறது. ஆயில்ய பூஜையும் நடக்கிறது. இரவு 9.30க்கு ஆறாட்டு துறையில் இருந்து சுவாமி கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்றுடன் 10 நாள் நடந்த திருவிழா நிறைவடைகிறது

தேரோட்ட துளிகள்
* தேரோட்டத்தையொட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால் குடும்பத்துடன் பலர் வந்து இருந்தனர்.
* நாகராஜா கோயில் திடலில் இலவசமாக     புகைப்படம் எடுக்கப்பட்டு உடனடியாக  பிரிண்ட் போட்டு கொடுக்கப்பட்டது. புகைப்படம் எடுத்துக் கொள்ள நீண்ட  வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
* இலவசமாக வினியோகம் செய்யப்பட்ட பலூன்களை வாங்கவும் மக்கள் முண்டியத்தனர்.
* தேரோட்டத்தையொட்டி நான்கு ரத வீதிகளிலும்போக்குவரத்துக்கு தடை  விதிக்கப்பட்டு இருந்தது. போலீசார் தடையை மீறியும் சிலர் பைக்குகளில்   நுழைந்ததால் பக்தர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
* போலீசாருடன், ஊர்க்காவல் படையினரும்  இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
* கோயிலில் அன்னதானம் சாப்பிடவும் ஏராளமானவர்கள்     நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
* தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியில் திமுக, அதிமுக, அமமுக, பா.ஜ.  உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஒரு சேர பங்கேற்று  இருந்தனர்.
* திமுக சார்பில் 3 இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த மோர் பந்தலை, சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
* காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கி சுமார் நான்கரை மணி நேரத்துக்கு பின் நிலைக்கு வந்தது.

Tags : festival ,Nagaraja Temple ,Nagercoil ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...