ஈச்சம்பாடி அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஜன.8:   

ஈச்சம்பாடி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்தங்கரை வட்டம் புதூர்புங்கனை மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு வந்தனர். பின்னர், குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று கோரிக்கை மனு அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: ஊத்தங்கரை அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள புதூர்புங்கனை ஊராட்சிக்குட்பட்ட ஒட்டம்பட்டி, புதூர், புங்கனை, தாமலேரிப்பட்டி, கொட்டாரப்பட்டி, பொன்னாகரப்பட்டி, புதுப்பட்டி, வேடப்பட்டி, அனுமன்தீர்த்தம், மெய்யாண்டப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்பெண்ணை ஆற்று நீரை நம்பி, நெல் சாகுபடி செய்துள்ளோம். மேலும், குடிநீராகவும் பயன்படுத்தி வருகிறோம்.

இந்நிலையில் தற்போது, நெல் கதிர்கள் நன்கு வளர்ந்து வரும் நிலையில், தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து முற்றிலும் குறைந்து வறண்டு காட்சியளிக்கிறது. இதனால், நெற்கதிர்கள் காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் அருகில் உள்ள ஈச்சம்பாடி அணையில் போதிய நீர் இருப்பு உள்ளது. இந்த அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட்டால், நெற்கதிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகும். எனவே, ஈச்சம்பாடி அணையில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories: