×

குமரியில் நான்கு வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் இல்லை

நாகர்கோவில், டிச.12: குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகை அதிகரித்து, பாரபட்சம் இல்லாமல் வழங்கப்படுகிறது என அதிகாரிகள் கூறி உள்ளனர். குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. காரோடு முதல் வில்லுக்குறி வரை 27 கி.மீட்டர் தூரம், வில்லுக்குறி முதல் நாகர்கோவில் அப்டா சந்தை வரை 14, அப்டாசந்தை முதல் காவல்கிணறு பெருங்குடி வரை 16, அப்டா சந்தை முதல் முருகன்குன்றம்வரை 12 கி.மீ தொலைவிற்கும் சாலை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை என நிலம் கொடுத்தவர்கள் குற்றம் சாட்டினர். அரசு வழங்கும் தொகை குறைவாக இருப்பதால் கேரளாவில் வழங்குவது போல்  மதிப்பு நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்படி தற்போது கையப்படுத்தப்பட்ட நிலத்துக்கு, இழப்பீடு தொகை பகுதி, பகுதியாக வழங்கப்பட்டு வருகிறது.

அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், தோவாளை  ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு கூடுதல் தொகை வழங்குவது தொடர்பாக ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன. அதன்படி விண்ணப்பதாரர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களுக்கு இழப்பீடு தொகையை நிர்ணயம் செய்வதற்கான ஆலோசனை கூட்டம், நாகர்கோவில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் பிரசாந்த் எம் வடநேரே  தலைமை வகித்தார். நிலமெடுப்பு வருவாய் அதிகாரி மோகன் ஆகியோர் பேசினர். 35 பேருக்கும் உயர்த்தப்பட்டு உள்ள இழப்பீடு ெதாகை குறித்து வருவாய் அதிகாரி மோகன் வாசித்தார். புத்தேரி பகுதியில் ஒருவருக்கு ₹4 லட்சம் இழப்பீடு கிடைத்த நிலையில் , வட்டியுடன் சேர்த்து தற்போது ₹54 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதே போல் பலருக்கும் இழப்பீடு தொகை பல மடங்காக உயர்த்தப்பட்டு இருந்தது. கூட்டத்தில் பங்கேற்ற சிலர், தங்கள் நிலங்களுக்கு குறைவான மதிப்பீடு அதிகாரிகள் நிர்ணயம் செய்துள்ளனர். ஆனால் அருகில் உள்ள நிலத்துக்கு அதிகமாக மதிப்பீடு உள்ளது. எனவே பாரபட்சம் இல்லாமல் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றனர். அப்போது வருவாய் அதிகாரி மோகன் எந்த வித பாரபட்சமும் இல்லாமல் இழப்பீடு வழங்கப்படுகிறது என்றார். குறைகள் இருந்தால் விசாரித்து தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார்.

Tags : Kumari ,
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...