×

துப்புரவு தொழிலாளர்களுக்கு 2022ம் ஆண்டுக்குள் சொந்த வீடு

சேலம், டிச. 11: துப்புரவு தொழிலாளர்களுக்கு 2022ம் ஆண்டுக்குள் சொந்த வீடு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.  துப்புரவு தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு திட்டம், நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மாணி தலைமை வகித்து பேசுகையில், ‘‘மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளின் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய வேறுபாடுகள் இல்லாமல் சமநிலைப்படுத்தி ஒரே ஊதிய விகிதம் வழங்க அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை கட்டாயமாக மருத்துவ முகாம் நடத்தி உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ஊதியம் நேரடியாக வங்கிக்கணக்கிற்கு வரவு வைக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு அரசு வழங்கும் ஊதியம் முழுமையாக சென்றடைகிறதா என்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்,’’ என்றார்.
 
பின்னர், மாநகராட்சி, சேலம் ரயில்வே கோட்டத்திலும் துப்புரவு தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு திட்டம், நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது ஜெகதீஷ் கிர்மாணி நிருபர்களிடம் கூறியதாவது: துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கோரிக்கையாக உள்ளது. தேசிய மறுவாழ்வு ஆணையம் சார்பில் தமிழக அரசிடம் மாநிலத்தில் துப்புரவு தொழிலாளர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்பது குறித்தும், அவர்களில் நிரந்தரமாக பணியாற்றுபவர்கள் எத்தனை பேர் மற்றும் தற்காலிக பணியாளர்கள் எத்தனை பேர் என்பது குறித்தும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் 2022ம் ஆண்டுக்குள் சொந்த வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் கட்டித்தரப்படும்.

துப்புரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கவும், சுய வேலை வாய்ப்பு கிடைக்க ₹25 ஆயிரம் முதல் ₹ 25 லட்சம் வரை வங்கிகளில் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிடித்தம் செய்யப்பட்ட தொழிலாளர் காப்பீட்டு நிதி, வருங்கால வைப்பு நிதியை, துப்புரவு பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் விரைந்து வழங்க  உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் வழங்காவிட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜெகதீஷ்கிர்மாணி தெரிவித்தார்.  கூட்டத்தில்  கலெக்டர் ரோகிணி, மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், மாவட்ட எஸ்பி ஜோர்ஜி ஜார்ஜி, மாநகராட்சி கமிஷனர் சதீஷ், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், எம்எல்ஏக்கள் சின்னதம்பி, மருதமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : house workers ,home ,
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு