×

அரூர் வனப்பகுதியில் மான், முயல்களை வேட்டையாட மின்வேலி அமைத்தவருக்கு வலை

அரூர், டிச.11: அரூர் வனப்பகுதியில், மான், முயல்களை வேட்டையாட மின்வேலி அமைத்த ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடியவரை போலீசார் உதவியுடன் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.  தர்மபுரி மாவட்டம் அரூர் வனப்பகுதியில், மொரப்பூர் வனச்சரக அலுவலர் கிருஷ்ணன் தலைமையில், வனவர் வேடியப்பன், வனக்காப்பாளர்கள் செல்வராஜ், பிருத்விராஜ், திருப்பதி, பெரியண்ணன், காளியப்பன், வனக்காவலர் வெங்கட்ராமன், ஓட்டுநர் பாண்டியன் ஆகியோர் அரூர்-கடத்தூர் சாலையில் குரங்குப்பள்ளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 அப்போது மின்சார ஒயர் வனப்பகுதியில் செல்வதை பார்த்த அவர்கள் அதைதொடர்ந்து சென்றபோது வனப்பகுதியில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்ஒயர் இருப்பதை கண்டுபிடித்தனர். அங்கிருந்தவர்களை பிடிக்க முற்பட்டபோது ஒருவர் தப்பிவிட்டார். பிடிபட்டவரிடம் விசாரணை செய்ததில், அவர் சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்த முருகன் (31) என்பதும், தப்பியோடிய அவருடைய நண்பர் சக்திவேல் என்பதும் தெரியவந்தது. மான், முயல், காட்டுப்பன்றிகளை வேட்டையாட அப்பகுதியில் செல்லும் மெயின் லைனில் இருந்து மின்சாரம் எடுத்தது தெரியவந்தது.

பிடிப்பட்ட முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தப்பியோடிய சக்திவேலை, மொரப்பூர் போலீசார் உதவியுடன் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். குரங்குப்பள்ளம் வனப்பகுதியில் மனித நடமாட்டம் எப்போது இருக்கும். மின்சாரம் பாய்ச்சி இருந்தால் வனவிலங்குகளுடன் மனித உயிர்களும் பலியாயிருக்கும்.

Tags : forest ,Aroor ,eveleigh ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...