×

குடிநீருக்கு தனி தொட்டி அமைக்க கேட்டு மனு கொடுக்க குடங்களோடு திரண்ட பருத்திப்பாடு மக்கள்

நெல்லை, டிச. 11: குடிநீருக்கு தனி தொட்டி அமைக்க வலியுறுத்தி காலிகுடங்களோடு வந்த பருத்திப்பாடு மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். பாஜ மாவட்ட பொதுச்செயலாளர் தாஸ், அமமுக நிர்வாகிகள் இசக்கி, மாரியப்பன், மாரி மற்றும் பருத்திப்பாடு நெல்லையப்பபுரம் ஊராட்சி மக்கள் காலி குடங்களோடு வந்து கலெக்டரிடம் அளித்த மனு: நெல்லையப்பபுரம் பகுதியில் நாங்கள் 60 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு வடக்கு நெல்லையப்பபுரம் அரசு வாட்டர் டேங்கில் இருந்து குடிநீர் வந்து கொண்டிருந்தது. சில சமூக விரோதிகள் பைப் லைனை துண்டித்துவிட்டனர். ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே எங்களுக்கு தற்காலிக பைப் லைனை சீர் செய்து தரவும், நிரந்தர தீர்வாக தனி வாட்டர் டேங்கும் அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் குறைதீர் கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் சங்கரன்கோவில் ஒன்றியச் செயலாளர் துரைசாமி தலைமையில் வீரசிகாமணி பேருந்து நிலையம் அருகேயுள்ள நெடுஞ்சாலை இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மனு அளித்தனர். நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் 60 கடைகள் அகற்றுமாறு அவர்கள் தெரிவித்தனர். மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் நிறுவனர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கூந்தன்குளம் சர்ச் தெரு காலனிப்பகுதிக்கு குடிநீர் வசதி கேட்டும், அப்பகுதி ஆதிதிராவிட மக்களுக்கு 100 நாள் வேலை கேட்டும் மனு அளித்தனர்.

Tags :
× RELATED டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது