×

திருவண்ணாமலை மாவட்டத்தில் 454 விஏஓக்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் வருவாய்த்துறை பணிகள் பாதிப்பு

திருவண்ணாமலை, டிச.11: திருவண்ணாமலை மாவட்டத்தில் 454 விஏஓக்கள் காலைவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் வருவாய்த்துறை பணிகள் பாதிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் (விஏஓக்கள்) பணியாற்றி வருகிறார்கள். சாதிச்சான்று, வருமானச்சான்று, முதல்பட்டதாரி சான்று, பட்டா போன்றவற்றை வழங்குவதுடன், வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் விஏஓக்கள் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் விஏஓ அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் ஏதும் முறையாக இல்லை. இதனால் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், பணியிடங்கள் சீரமைப்பு, இடமாறுதல் வழங்குதல் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்ேவறு கட்ட போராட்டங்களை விஏஓக்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் விஏஓக்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்று, பணிக்கு செல்லவில்லை. இதனால் நேற்று வருவாய்த்துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்களுக்கு பல்வேறு சான்றுகளை வழங்கும் பணி முற்றிலும் முடங்கியது. திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரை 454 விஏஓக்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை.

ஸ்டிரைக் குறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில் `விஏஓவாக பணியாற்றி வரும் நபர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள். வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் இவர்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும் என ஸ்டிரைக்கை தொடங்கி உள்ளோம். அடுத்து `உரிமைகளை தேடி' என்ற தலைப்பில் வருகிற 13, 14 தேதிகளில் காலை, மாலையில தாலுகா அலுவலகங்களின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
அதைத்ெதாடர்ந்து `மாவட்ட தலைநகரம் தேடி'' என்ற தலைப்பில் வருகிற 17 மற்றும் 18ம் தேதிகளில் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி செல்ல முடிவு செய்துள்ளோம். எங்களுடைய கோரிக்கை நிறைவேற்றும் வரை காலைவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் கலந்து கொள்ளவில்லை. தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு தாலுகா அலுவலகம் முன் நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை கிராம நிர்வாக சங்க வட்டத் தலைவர் முத்து, செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் சம்பத் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேட்டவலம்: கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகம் அருகே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு வட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏங்கல்ஸ் பிரபு முன்னிலை வகித்தார். போரட்டத்தின் நோக்கங்களை செயலாளர் பிரவின் குமார், செய்தி தொடர்பாளர் சுதாகர் ஆகியோர் விளக்கி பேசினர். இதில் போராட்ட குழு தலைவர் ஐங்கரன், பொருளாளர் உதயகுமார் உட்பட 26க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (செவ்வாய்கிழமை) சோமாசிபாடியிலும், நாளை (புதன்கிழமை) வேட்டவலத்திலும் என்று போராட்ட குழுவினர் தெரிவித்தனர். செய்யாறு: செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா அலுவலம் எதிரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். வெம்பாக்கம் வட்ட கிளை தலைவர் எம்.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் டி.சீனிவாசன் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் எஸ்.கோதண்டராமன், மாவட்ட போராட்டக் குழு தலைவர் எஸ்.கோகுலராமன், வட்ட பொருளாளர் இ.கோடீஸ்ரன் ஆகியோர் போரட்டத்தின் அம்சங்கள் குறித்து பேசினர்.

Tags : Tiruvannamalai District ,
× RELATED மாணவியிடம் பாலியல் சில்மிஷம் விவசாயி மீது போக்சோ வழக்கு ஆரணி அருகே