×

தேவாரம் பகுதிகளில் அதிகரித்து வரும் போலி டாக்டர்கள்


தேவாரம், டிச.7: தேவாரம் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை முடக்கப்பட்டுள்ளதால் போலி டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேவாரம்  பகுதிகளில் தேவாரம், பண்ணைப்புரம், மேலசிந்தலைச்சேரி மற்றும் கூடலூர்,  அனுமந்தன்பட்டி, மார்க்கயன்கோட்டை, ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்  படிப்பறிவே இல்லாத பலரும் தங்களை டாக்டர்கள் என கூறிக்கொண்டு மக்களுக்கு  சிகிச்சை அளித்து வருகின்றனர். டாக்டரிடம் உதவியாளராக இருந்தவர்கள்,  மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவர்கள், மருந்து கட்டும் வேலை பார்த்தவர்கள் கூட  டாக்டர்களாக வலம் வருகின்றனர்.

இவர்கள் நரம்புகளை பலகீனப்படுத்தும் ஊசிகளை பயன்படுத்தக்கூடாது என தடை இருந்தும் தைரியமாக  பயன்படுத்துகின்றனர்.
அளவிற்கு அதிகமான மருந்துகளை ஏற்றி உடலில் ஊசிகள்  போடும்போது பக்கவிளைவுகள் வருகின்றன. அதனையெல்லாம் இவர்கள்  பொருட்படுத்துவதில்லை. இதனால் கிராம மக்கள் இவர்களிடம் ஏமார்ந்து சிகிச்சை  பெறுகின்றனர்.  கர்ப்பிணிகளுக்கு கூட இவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.  போலி டாக்டர்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  மாநில சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி உள்ளது. இதனை அடுத்து தேனி மாவட்ட  சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் கடந்த சில  மாதங்களுக்கு முன்பு ரெய்டுகளை நடத்தினர். பல கிராமங்களில்  கேரளா மாநிலத்தவர்கள் டாக்டர்களாக தங்களை காட்டிக்கொண்டு அலோபதி வைத்தியம்  அளித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் திடீர் ரெய்டு நடத்தப்படுவதால்  தங்களது மருத்துவ சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். கேரளாவை  சேர்ந்தவர்கள் கிளினிக்குகளை பூட்டிவிட்டு ஓட்டம் பிடித்தனர். ஆனாலும்  உள்ளூர் போலீசாரிடம் செல்வாக்கு பெற்ற போலி டாக்டர்கள் தருவதை தந்துவிட்டு  தங்களது கிளினிக்கை நடத்துவதும் தொடர்கிறது. இவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது  அவசியம். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,போலி டாக்டர்கள் ஒழிப்பு  நடவடிக்கை வரவேற்கதக்கது. ஆனால் இதனை தொடர்ந்து செய்திருந்தால்  போலி டாக்டர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும். இப்போதோ சுகாதாரத்துறை  நடவடிக்கையை முடக்கிவிட்டது. ஆபத்தான மருந்துகளை பயன்படுத்தும்போது  தேவையில்லாமல் உடலில் பக்கவிளைவுகள் உண்டாகும். எனவே நடவடிக்கையை  தீவிரப்படுத்திட வேண்டும் என்றனர்.

Tags : doctors ,areas ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...