ரிஸ்க் தரும் டிஸ்க் பல்ஜ்... எச்சரிக்கையாய் இருந்தால் எளிதில் வெல்லலாம்!

நன்றி குங்குமம் தோழி

சமீபத்தில் நடுத்தர வயது பெண் ஒருவர் கழுத்து வலி காரணமாக என்னிடம் வந்திருந்தார். அவரின் இருபத்தி ஐந்து வயது பெண்ணுக்கும் அதே கழுத்து வலி என்று சொன்னார். அவரது அறுபது வயதைக் கடந்த அம்மாவிற்கும் இதற்குமுன் இதே கழுத்து வலிக்காக நான் சிகிச்சை அளித்திருக்கிறேன். கழுத்து வலி, கை குடைவது, ஒரு சில இடங்களில் கை மரத்துப் போவது இதுதான் இவர்கள் மூன்று பேருக்குமான பிரதான கம்ப்ளைன்ட். இந்த டிஸ்க் பல்ஜ் பிரச்னை ஏதோ இவர்களுக்கு மட்டும் இருப்பதாக நினைக்க வேண்டாம். இன்னும் பலருக்கும் இருப்பதால் அதைப் பற்றி இங்கே சொல்லலாம் என நினைக்கிறேன்.

கழுத்தின் அமைப்பு...

*மூளையின் தொடர்ச்சியாக  அதன் அடியில் தண்டுவடம் (spinal cord) செல்லும். இதனை பாதுகாப்பாக வைத்திருக்க தண்டுவட எலும்புகள் ஒன்றன் பின் ஒன்றாக கீழ்நோக்கி சென்று இடுப்புக் கூட்டோடு முடியும்.

*இதில் கழுத்துப் பகுதியில் அமையும் எலும்புகள் மொத்தம் ஏழு. இந்த ஏழு எலும்புகளின் வழியாக கைகளுக்குச் செல்லும் நரம்புகள் தண்டுவடத்தில் இருந்து பிரியும்.

*மேலும் ஒவ்வொரு எலும்புகளுக்கும் நடுவில் வட்டமான ஜெல்லி போன்ற தட்டுகள் அமைந்திருக்கும். இதனை டிஸ்க் (Disc) என்று மருத்துவத்தில் அழைப்போம்.

*கடைசியாக எலும்புகளை சுற்றிலும் ஜவ்வுகளும், சிறு மற்றும் பெரும் தசைகளும் இயங்கும்.

ஜவ்வு தட்டுகள்...

நீர் மற்றும் நார் சத்தினால் அதிகம் அமைந்த இந்த தட்டுகள்,

1. எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராயாமல் இருக்கவும்,

2. முதுகு தண்டுக்கு எந்த ஆபத்தும் வெளியில் இருந்து வராமல் எலும்புகளோடு சேர்ந்து பாதுகாக்கவும்,

3. எலும்புகளுக்கு வரும் அதிர்ச்சியை (shock) எலும்புகள் பாதிப்படையக் கூடாது என பாதுகாக்கவும் உதவும். உதாரணமாக, கழுத்தில் அல்லது தலையில் அதிக எடையுள்ள பொருட்களை தூக்கி வைக்கும்போது ஏற்படும் பாதிப்பு.

ஜவ்வு தட்டு பிதுங்குதல்...

ஜவ்வு தட்டுகள் சில காரணங்களால் வீங்கும். பின் அடுத்த நிலையாக வீங்கிய தட்டு பிதுங்கலாம். மூன்றாவது நிலையாக, பிதுங்கியது கிழியவும் வாய்ப்புள்ளது.

காரணங்கள்...

நாம் ஒரு வேலையை செய்யும் போது எலும்புகள் பாதிப்படையாமல் இருக்க, எலும்புகளுக்கு வரும் விசைகள் தட்டுகளுக்கு கடத்தப்படும் என மேலே குறிப்பிட்டது போல, தட்டுகளுக்கு விசைகள்  வரும்போது தசைகள் போதிய வலிமையில் இல்லாததால் காலப்போக்கில் சேதமாகலாம்.

ஆபத்துக் காரணிகள்...

*வயது மூப்பினால் வரும் தட்டு தேய்மானம், சிறு காயங்கள் (injury).

*அதிக உடல் எடை.

*அதிக உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளில் இயங்குவது (உதாரணமாக,  கட்டிட வேலைகளில் தலையில் அதிக எடையை சுமப்பது).

*அமர்ந்த இடத்தில் இருந்து வேலை செய்தாலும் கழுத்துக்கு அதிக வேலை தரும் கணினி சார்ந்த, கைத் தொழில் சார்ந்த பணிகளில் இருப்பது.

*அதிக நேரம் வாகனம் ஓட்டுவது (எவ்வகையான வாகனமாக இருந்தாலும் சரி).

*புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு தட்டுகள் பலகீனமாய் இருக்கும்.

*எவ்வித மிதமான உடல் உழைப்பு கூட இல்லாதவர்களுக்கு இயல்பாகவே பலவீனம் இருக்கும் என்பதால், எப்போதாவது ஒரு முறை எடையை தூக்கினால் கூட ஜவ்வு பாதிப்படையலாம்.

*கழுத்து தசைகளுக்கான உடற்பயிற்சிகள் செய்யாமல் இருப்பவர்களுக்கு.

*கழுத்துப் பகுதியின் தோரணை (Posture) சமநிலையில் இல்லாமல் இருப்பது. அதாவது, கூன் விழுந்திருப்பது, தோள்பட்டைகள் பரந்து விரிந்து இல்லாமல் முன்நோக்கி வளைந்திருப்பது.

*போதிய (கழுத்துக்கான) பயிற்சிகள் இல்லாமல் அடிக்கடி எடைகள் தூக்குவது, எப்போதாவது அதிக எடை தூக்குவது.

அறிகுறிகள்...

*சாதாரண கழுத்து வலியாக முதலில் தோன்றும். ஓய்வு எடுத்தால் சரியாகி பின் வேலைகள் செய்யும்போது வலிக்கத் தொடங்கும்.

*சில நரம்புகள் கழுத்துக்கும் தலைக்கும் தொடர்போடு இருப்பதால் சிலருக்கு கழுத்து வலியோடு தலை வலியும் ஏற்படும்.

*கழுத்து எலும்புகள் ஏழு என்பதால் தட்டுகளும் ஏழு இருக்கும். இதில் அதிகமாக 4, 5, 6, 7வது தட்டுகள்தான் பாதிப்படையும்.

*இந்த தட்டுகள் வீங்கும் போதோ, பிதுங்கும் போதோ அதன் அருகில் உள்ள நரம்புகளை அழுத்தும். இந்த நரம்புகள் நம் கைகளுக்கான நரம்புகள் என்பதால், கை குடைவது, கை மரத்துப் போவது, கைகளில் குத்தல், எரிச்சல் போன்ற உணர்வுகள் ஏற்படலாம்.

*கழுத்திலும் கைகளில் சில இடங்களிலும்  வீக்கம் ஏற்படலாம்.

*பிதுங்கிய தட்டுகள் கிழியத் தொடங்கினால், நரம்புகள் மேலும் அழுந்தி, நரம்புகளால் சமிக்கைகளை கைகளுக்கு கடத்த முடியாமல் ஆகலாம். இதனால் கைகள் பலவீனமடைந்து செயலிழந்து போகலாம். கழுத்து வலி வந்தாலே கை செயலிழந்து விடும் என அச்சப்படத் தேவையில்லை. கடைசி கட்டமாக வெகு சிலருக்கே இது நடக்கும்.

எப்படி கண்டறிவது?

*மேல் சொன்ன அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள இயன்முறை மருத்துவரை அணுக வேண்டும். அவர் முழு கழுத்தையும் பரிசோதித்து தட்டுகளில் பிரச்னை உள்ளதா, எந்த தட்டில் பிரச்னை உள்ளது என்பதையும் கண்டறிவர்.

*இதனால் எடுத்தவுடன் எக்ஸ்.ரே., எம்.ஆர்.ஐ போன்ற ஸ்கேன்கள் எடுக்க வேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டால் எடுக்கலாம். இதனால் எந்த அளவு பாதிப்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இயன்முறை மருத்துவம்...

*வீக்கம், பிதுங்குதல் இருந்தால் முதலில் வலியை குறைக்கவும், பின் பிதுங்கிய தட்டினை  உள்ளே மீண்டும் பொருத்தவும் உபகரணங்கள் அல்லது கைகள் வழியாக செய்வர் (பாதிப்பு குறைவாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்).

*இப்படி மீண்டும் தட்டினை உள்ளே முழுதாகப் பொருத்த முடியவில்லை எனினும் அதன் பாதிப்பு அளவினை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும்.

*தசைகள் பலவீனமாக இருப்பதால் தான் நேரடியாக தட்டுகள் பாதிக்கப்படுகிறது. இதனால் தசைகளை வலிமைப்படுத்த உடற்பயிற்சிகள் பரிந்துரைத்து கற்றும் கொடுப்பர். இவற்றால் விசைகளை தாங்க தசைகள் உதவும்.

*மொத்தத்தில் தசைகளை உறுதி செய்வதால், மேலும் தட்டுகள் பாதிப்படையாமலும் பாதுகாக்க முடியும். அதேநேரம் சேதம் அடைந்ததனால் வரும் வலியினையும் சரி செய்ய முடியும்.

வருமுன் காக்க...

நாம் எந்தத் துறையில் இருந்தாலும் சரி, (இல்லத்தரசிகளாக இருந்தாலும்) அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி நம் பணிகளுக்கு ஏற்ப, அவர்கள் பரிந்துரை செய்து கற்றுத் தரும் நமது கழுத்து தசைகளுக்கான உடற்பயிற்சிகளை, தினமும் செய்ய வேண்டும்.

அதோடு, எலும்புகள், தசைகளுக்கு தேவையான சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது, போதிய ஓய்வு கொடுப்பது, அதிக நேரம் வேலை செய்வதை தவிர்ப்பது, தினமும் 20 நிமிடம் இளம் வெயிலில் நிற்பது அல்லது நடப்பது, புகை பழக்கத்தை விடுவது, கைப்பேசி பயன்படுத்துவதை குறைப்பது போன்றவற்றை பின்பற்றினாலே போதும், எவ்வித இடர்பாடுகளும் இல்லாமல்

இருக்கலாம்.

மொத்தத்தில் எந்த ஒரு வலியாக இருந்தாலும் சரி, அதனை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிக மிக அவசியம். அதேபோல வரும்முன் உரிய நடவடிக்கைகள் எடுத்து, அடுத்து வரும் தலைமுறைகளை பாதிப்பில் இருந்து தடுப்பதும் முக்கியம்.

Related Stories: