கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர்

சமீபகாலமாக, ஒரு பக்கமாக தலைவலி வருகிறது. ஒற்றைத் தலைவலியாக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது. ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள் என்னென்ன அதை எப்படி உறுதிப்

படுத்துவது?

- ராஜேஷ், திருவண்ணாமலை.

ரத்த அழுத்தம், பார்வைக் குறைபாடு, சைனஸ், இருமல், காய்ச்சல் போன்ற குறிப்பிட்ட உடல் உபாதைகளின் அறிகுறியாகத்தான் தலைவலி வெளிப்படும். பிரச்னை என்ன என்பதைக் கண்டறிந்து சரிசெய்தால், சில நாட்களில் தலைவலி சரியாகிவிடும். ஆனால், ஒற்றைத் தலைவலி என்பது தொடர்ச்சியாக நீண்டநாட்களுக்கு இருக்கும்; ஒரு பக்கம் மட்டுமே தலை வலிக்கும்; வாந்தி, தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகள் தொடர்ச்சியாக இருக்கும்.

பரிசோதனைகளின் மூலம் இதை உறுதிசெய்ய முடியாது. அறிகுறிகளின் அடிப்படையில் மருத்துவரின் ஆலோசனை பெற்றே உறுதிப்படுத்த முடியும். ஒற்றைத் தலைவலி, குறிப்பிட்ட ஏதேனும் ஒரு சூழலில், ஏதாவது ஒரு தூண்டுதலின் அடிப்படையில் வரக்கூடியது. உதாரணமாக உணவுப் பழக்கம், மொபைல் பயன்படுத்துவது, தூக்கமின்மை, இரைச்சல், மன அழுத்தம் போன்றவை. இவற்றில் உங்களுக்கான தூண்டுதல் எது என்பதைத் தெரிந்துகொண்டு, மருத்துவர்களிடம் தெரிவித்து அதற்கேற்ப சிகிச்சைகள் பெற்றுக்கொள்வது நல்லது.

கடந்த சில மாதங்களாக எனக்கு உடல் சோர்வும் கால்வலியும் அதிகமாக இருக்கின்றன. ஒரேநிலையில் 10 நிமிடங்கள் உட்கார்ந்தால்கூட வலி எடுக்கிறது.  கால் மூட்டுக்கு அருகே நரம்புகள் புடைத்திருக்கின்றன. இவை ஏதேனும் பிரச்னையின் அறிகுறிகளா?

- வடிவுக்கரசி, அம்மன் குளம்.

“கால் மூட்டுக்கு அருகே நரம்புகள் புடைத்துக்கொண்டிருந்தால், அது `வெரிகோஸ் வெயின்ஸ்’ (Varicose Veins) பிரச்னையாக இருக்கலாம். இது ஏற்பட மூன்று காரணங்கள் உள்ளன.

*நின்றுகொண்டே வேலை செய்யும்போது  உடல் எடை, கால்களில் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுப்பதால் ஏற்படலாம்.

*உடல் எடை திடீரென அதிகரிப்பதால், கால் நரம்புகளின் செயல்பாடுகளில் பிரச்னை உண்டாவதால் பாதிப்பு ஏற்படலாம். பெரும்பாலும், பிரசவத்துக்குப் பிறகு உடல் எடை அதிகரிக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

*காலில் ஏதேனும் அடிபட்டு தீவிர உள்காயம் ஏற்பட்டால் இந்தப் பிரச்னை வரலாம். நரம்பு வெளியே தெரிவது வெரிக்கோஸ் வெயின்ஸ் பிரச்னையின் முக்கிய அறிகுறி. எனவே, அலட்சியப்படுத்தாமல் முறையான சிகிச்சை மேற்கொள்ளுங்கள். சத்துக்குறைபாடு இருந்தால், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையின்பேரில் உணவு முறையை மாற்றிக்கொள்ளவும்.’’

எனக்கு அல்சர் பிரச்னை இருக்கிறது. டீ குடித்தால் அல்சர் அதிகமாகும் என்கிறார்களே,  உண்மையா... அந்தப் பழக்கத்தை என்னால் விட முடியவில்லை. சிலர், ‘ஸ்ட்ராங்கா இல்லாம, லைட் டீயா குடிச்சா பிரச்னை வராது’ என்கிறார்கள். அப்படிக் குடித்தால் பிரச்னை இல்லையா?

 - திருநாவுக்கரசு, மானாமதுரை.

அல்சரைப் பொறுத்தவரை, `ஹெச்.பைலோரி’    (H.Pylori) கிருமியால் பாதிப்புக்குள்ளானவர்கள், டீ - காபி அதிகம் அருந்துவது, புகை மற்றும் மதுப்பழக்கம், வலி நிவாரண மாத்திரைகள் அதிகமாக உட்கொள்வது போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் என இருவகை உண்டு. வாழ்வியல் மற்றும் உணவு முறை மாற்றங்களால் அல்சர் ஏற்பட்டால் அதற்கேற்ப உணவுப் பழக்கங்களை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும்.

`ஹெச்.பைலோரி’ கிருமியின் காரணமாக அல்சர் வந்திருந்தால், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஆனால், அல்சர் நோயாளிகள் மட்டுமன்றி யாராக இருந்தாலும், ஆரோக்கியமாக வாழ ஒரு நாளைக்கு மூன்று கப் டீ அல்லது காபி அருந்தலாம். அதற்குமேல் போகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

Related Stories: