வெயிலில் காக்க… 5 இயற்கை ஃபேஸ்பேக்!

நன்றி குங்குமம் டாக்டர்

சந்தனம் மற்றும் பாதாம் எண்ணெய்

கெமிக்கல் கலக்காத  சந்தனத் தூளை  வாங்கி ஒரு தேக்கரண்டி எடுத்து, அதில் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். பாதாம் எண்ணெய் சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டுவதோடு  பிரகாசமாக்குகிறது. சந்தனம்  சருமத்தின் நிறத்தை ஒளிரச் செய்கிறது. இந்த இரண்டு பொருட்களும் ஒன்றாகக் கலக்கும்போது,  கோடையிலிருந்து  சருமத்தைப் பாதுகாக்கிறது.

காபி மற்றும் எலுமிச்சை

ஒரு தேக்கரண்டி காபி தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு எடுத்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் கழுவவும். முகம்  பளபளப்பாக  தோற்றமளிக்கும்.

மஞ்சள்

ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளுடன்  மூன்று தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து  முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர், குளிர்ந்த நீரில் முகத்தை  கழுவவும். வாரத்திற்கு  2 நாள்  இப்படி செய்து  வர, கோடையின்  தாக்கம் முகத்தில் தெரியாது.  மேலும், மஞ்சளில் வயது முதிர்வுக்கான எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. எனவே, தொடர்ந்து மஞ்சளை  பயன்படுத்தி வர,  சருமத்தை பிரகாசமாக்கும்.  

கற்றாழை

கற்றாழை சரும பிரச்னைகளை தடுத்து, முகத்தை பொலிவாக்க உதவுகிறது. மேலும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பதற்கும்  உதவுகிறது.  கற்றாழை ஜெல் எடுத்து  சுத்தம் செய்து அதனை, முகத்தில்  தடவி  சுமார் 20 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.  பின்னர்,  10 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து  பிறகு முகத்தை  கழுவவும். கோடை வெயிலினால்  முகம்,  கை போன்றவை  கருத்துப் போகாமல்,  தோலை பராமரிக்க இது  உதவும்.

தக்காளி

தக்காளி சாறு  எடுத்து அதனுடன் தேன் சேர்த்து நன்கு கலந்து அதனை முகம், கை,  கால்களில்  தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்து, பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவினால், முகம்  பொலிவு பெறும். தக்காளியில்  உள்ள  வைட்டமின்கள் சருமத்தின் இயற்கையான பிரகாசத்தை மீட்டெடுக்க உதவுகிறது. இதனால் முகம் பிரகாசமாக இருக்கும்.

தொகுப்பு : ஸ்ரீ தேவி குமரேசன்

Related Stories: