கண்ணைக் கட்டிக்கொள்ளாதே-மூடிய இமைகள் சொல்லும் ரகசியங்கள்

நன்றி குங்குமம் டாக்டர்

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி

பேருந்துகளில், பொது இடங்களில் சில சமயம் கண்கள் பாதி மூடிய நிலையில் சிலரை சந்தித்திருப்பீர்கள். சிலருக்கு ஒற்றைக் கண் மூடி இருக்கலாம், வெகு சிலருக்கு இரண்டு கண்களும் பாதி மூடிய நிலையில் இருந்திருக்கலாம். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்திருக்கிறீர்களா?

முன்பு எங்கள் மருத்துவமனைக்கு 30 வயதான அலுவலகப் பணியாளர் ஒருவர் பணியில் சேர்ந்தார். என்னைப் பொறுத்தவரை அவர் சுறுசுறுப்பானவர், நன்றாக வேலை செய்யக்கூடியவர். ஒரு முறை அவரை எங்கே, அவருக்கு இடப்பட்ட பணி என்னாயிற்று என்ற பேச்சு வரும் பொழுது, அலுவலகக் கண்காணிப்பாளர், “நல்ல பையன் தான், நல்லா வேலை செய்கிறான். ஆனா கொஞ்சம் தலை கனம் அதிகமோ மேடம்? என்ன சொன்னாலும், ஏறிட்டு நிமிர்ந்து பார்க்கிறானே?” என்றார். அருகில் இருந்த செவிலியரோ, ஐஸ்க்ரிம்அந்தத் தம்பிக்குக் கொஞ்சம் காது கேட்காதுன்னு நினைக்கிறேன்” என்றார்.

 துரதிஷ்டவசமாக, நம்முடைய சமூகத்தில் நல்லவர்கள், பணிவானவர்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று சில வரையறைகளை வகுத்து வைத்திருக்கின்றனர். மேலை நாடுகளில் குடியரசுத் தலைவரே ஆனாலும் ‘மிஸ்டர் பிரசிடென்ட்!’ என்று முகத்துக்கு நேராக அழைக்கிறார்கள். திரு என்று அடைமொழியிட்டு பெயர் சொல்லியும் கூப்பிடுகிறார்கள். இங்கு பணியிடங்களில் இருக்கும் ஒரு விதமான உயர்வு தாழ்வு காரணமாக மேலதிகாரி என்றால் சற்று தலையைக் குனிந்து தான் பேச வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. அதனால் தான் இந்தப் பேச்சுக்கள் என்று உணர்ந்த நான், அந்த உதவியாளரைப் பற்றிய என்னுடைய கருத்துக்களை சொன்னேன்.

“அவருக்கு கண்ணுல ஒரு சின்ன குறைபாடு. நல்லா கவனிச்சுப் பாருங்க, இடது கண் இமை நல்லா திறந்திருக்கும். வலது கண் இமை பாதி மூடியிருக்கும். அதனால நம்மைப் பார்க்கும் போது அதை சரி செய்றதுக்காக தலையைக் கொஞ்சம் உயர்த்தி, லேசா நாடியை வலது பக்கமாகத் தூக்கிப் பார்க்கிறார், அது உங்களுக்கு பணிவு இல்லாத மாதிரியும், இவங்களுக்குக் காது கேட்காத மாதிரியும் தெரிஞ்சிருக்கு” என்று விளக்கவும் அப்படியா என்றனர் இருவரும். இதே போல் உடலின் ஒரு சில பாகங்களில் பிறவிக் குறைபாடு காரணமாக சமச்சீரின்மை நிலவும் போது அதற்கு ஈடுகட்டும் விதமாக நம் உடல் நம்மை அறியாமல் சில வழிமுறைகளைச் செய்கிறது (compensatory mechanisms).

மாறுகண் இருக்கும் குழந்தைகளுக்கும் இத்தகைய முகம், தலை மாறுபாடுகள் (face turn, chin lift) இருக்கும். இதனால் பின்நாட்களில் கழுத்து வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டவர்களும் உண்டு. தோழி ஒருவர் தனக்கு சிறு வயது முதலே மாறுகண் இருந்ததால் விரைவாகக் கழுத்தெலும்பு தேய்மானம் ஏற்பட்டு விட்டதாக கூறியுள்ளார். மேலே குறிப்பிட்ட பணியாளரை முதன் முதலாக நான் சந்தித்தபோது, பாதி மூடிய அவருடைய இமையைச் சுட்டிக்காட்டி, ‘‘இதற்கு நீங்கள் முன்பே அறுவைசிகிச்சை செய்திருக்கலாமே, ஏன் செய்யவில்லை?” என்று கேட்டேன்.

 “அந்தக் காலத்தில் எங்களுக்கு வசதி, விபரம் பத்தலை டாக்டர்.. நடுவுல ஒரு சில முறை டாக்டர்கள் ஆபரேஷன் பண்ணணும்னு சொல்லியிருக்காங்க. இப்ப நேரமில்லை.. அப்படியே விட்டுட்டேன்” என்றார். சிகிச்சை குறித்த பயமும் அவருக்கு இருந்தது. இது மிக லேசான அறுவைசிகிச்சை தான் என்று நான் கூறவும் அதன் பின்னர் ஒரு முறை விடுப்பு எடுத்துக்கொண்டு அறுவைசிகிச்சை செய்து விரைவில் பணிக்குத் திரும்பினார். அவருக்கு இருந்தது வலது கண்ணில் Partial ptosis என்ற பிரச்சனை. நம் கண்களை மூடித் திறக்கும் இரண்டு இமைகளில் மேல் இமை அதிகமாகப் பணி செய்கிறது. அதன் இயக்கத்திற்கு இரண்டு தசைகள் தேவை. அதில் முக்கியமானது Levator palpebrae superioris (LPS) என்ற தசை. கூடுதலாக நெற்றிப் பகுதியில் இருக்கும் frontalis தசையும் கண்ணைத் திறந்து மூடுவதற்கு உதவி செய்கிறது.

 சிலருக்கு மிக லேசாக LPS தசையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கும். சுத்தமாக வளர்ச்சியடையாத நிலை அல்லது லேசாக வளர்ந்த நிலை (underactivity) காணப்படலாம். இதன் காரணமாக இமைகளை அவர்களால் சரியாகத் திறக்க முடியாமல் போகலாம். நன்றாக உற்று கவனித்தால் பாதிக்கப்பட்ட பக்கத்தில் மட்டும் புருவம் சற்று தூக்கியும், நெற்றியின் அந்தப் பக்கத்தில் மட்டும் சுருக்கங்கள் இருப்பதையும் காணலாம்.

வெகு அரிதாக இரண்டு கண்களிலும் இந்தப் பிரச்சனை (Bilateral ptosis) இருக்கக்கூடும். பாதி மூடிய கண்களால் பல பின்விளைவுகள் ஏற்படலாம். முக்கியமாக, இமை கண்ணின் கண்மணிகள் (pupil) வரை மூடியிருக்கும் பட்சத்தில் பார்வை வெகுவாக பாதிக்கப்படும். விரைவில் சரிசெய்யவில்லை என்றால் நிரந்தரப் பார்வை இழப்பு ஏற்படலாம். ஒரு சிலருக்கு LPS தசையுடன் சேர்த்து கண்களை இயக்கும் தசைகளில் மேற்புறத்தில் இருக்கும் superior rectus என்ற தசையும் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

இதனால் கண் லேசாக மேற்புறத்தில் திரும்பியிருக்கக் கூடும். சில குழந்தைகளுக்கு கண்களின் அமைப்பு, லென்ஸ் அனைத்தும் சீராக இருக்க, ஒரு கண் மட்டும் பிறவிலேயே முழுவதுமாக மூடிக்கொண்டிருக்கும் (complete ptosis). இவர்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துவார்கள். ஏனென்றால் முழுதாக மூடியிருக்கும் கண்களில் வெளிப்புறக் காட்சிகள் பதிவாக வாய்ப்பில்லை. அதனால் அந்தக் கண்ணிற்கு உரித்தான மூளைப் பகுதி (visual cortex) தூண்டுதல் இல்லாது முடங்கி விடுவதால் அந்தக் கண் சோம்பேறிக் கண்ணாக (lazy eye) மாறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

 பிறந்து இரண்டு நாட்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தைக்கு இப்படி ஒரு குறைபாடு இருந்ததால் என்னிடம் அனுப்பினார் குழந்தை நல மருத்துவர். அந்தக் குழந்தைக்கு இடது கண்ணில் பிரச்சனை இருந்தது. ‘உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும், கண்கள் நன்றாக இருக்கின்றன, மிக எளிய அறுவைசிகிச்சை தான். செயலற்றுக் கிடக்கும் தசையை நெற்றித் தசையுடன் இணைத்து ஒரு தையல் போடுவதன் மூலம் இதை சரி செய்து விடுவார்கள்’ என்று நான் விளக்கினேன். ‘ஐயோ பிறந்த குழந்தைக்கு ஆபரேஷனா? கொஞ்ச நாளாகட்டும்’ என்று பெற்றோர் கூற அவர்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஒரு சோதனையை உதாரணமாகக் கூறி விளக்கினேன்.

 நன்றாகப் பார்வை இருக்கும் இரண்டு சோதனை எலிகளைப் பிறந்தது முதல் கண்காணித்தார்கள். ஒரு எலியை இருட்டு அறையிலும் மற்றொரு எலியை சாதாரணமான வெளிச்சமான சூழலிலும் விட்டு வளர்க்க, ஒரே மாதத்தில் இருட்டு அறையில் விடப்பட்ட எலி முழுவதும் பார்வையற்றதாக ஆகிவிட்டது. இதே போல பல உதாரணங்களை மனிதர்களிலும் பார்க்கலாம். பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு விரைவில் கண்ணாடி அணிய வேண்டும் என்று சொல்வதும் சோம்பேறிக் கண் உருவாவதைத் தடுப்பதற்காகத்தான் என்று கூறினேன். அப்போதும் அவர்கள் தயங்க, ஒரு அணியாக மருத்துவர்கள் சேர்ந்து விளக்கி உடனடியாக அவர்களை அறுவை சிகிச்சைக்குத் தயார் செய்தோம். இப்போது அந்தக் குழந்தை பிற குழந்தைகளைப் போல முற்றிலும் இயல்பாக வளர்ந்து வருகிறது.

 மூடிய இமைகள் பிறவிக் காரணங்களால் மட்டும் ஏற்படுவதில்லை. பல முக்கிய நோய்களில் இது ஒரு குறிப்புணர்த்தும் அறிகுறியாக இருக்கிறது. முக்கியமாக நல்ல பாம்பு, விரியன் (Krait) போன்ற நரம்பு மண்டலத்தைத் தாக்கும் பாம்புக் கடிகளில் விஷத்தின் தன்மையை உணர்த்தும் முக்கிய அளவுகோலாக இமை மூடுவது இருக்கிறது. பாம்பு கடித்து விட்டது என்று சொல்லும் ஒரு நபருக்கு கண்கள் பாதி மூடிய நிலையில் இருந்தால் விஷம் நரம்பு மண்டலத்தை பாதிக்கத் தொடங்கி இருக்கிறது என்று பொருள். உடனடியாக விஷமுறிவு மருந்தினை செலுத்த வேண்டும் என்பதற்கான அறிகுறி அது. உரிய சிகிச்சை அளித்தவுடன் மூடிய இமைகள் மந்திரம் போட்டதைப் போல் திறந்து கொள்வதைக் காணலாம். அது மருந்து வேலை செய்கிறது, ஆபத்தில்லை என்பதனை உணர்த்தும்.

 கூடவே வேறு சில நரம்பியல் மற்றும் தசை நார்கள் சம்பந்தமான பிரச்சனையிலும் கண் இமைகள் மூடி இருப்பதைக் காணலாம். Myasthenia gravis என்ற தசை அழற்சி நோயில் கண் பட்டைகள் மெதுமெதுவாக மூடுவதே முதல் அறிகுறி. உடலில் மிக மெல்லிய தசைகளில் ஒன்று இமைகளில் உள்ள தசைகள் என்பதால் பல நரம்பியல் கோளாறுகளில் கண் இமைகளில் முதல் முதலாக அறிகுறி தோன்றக் கூடும்.

சர்க்கரை நோயாளிகள் சிலருக்கு சிறிய ரத்த நாளங்கள் அடைத்துக் கொள்வதன் காரணமாக, கண் இமைகளை மூடித் திறக்க பணியாற்றும் முக்கிய நரம்பான Oculomotor nerve பாதிக்கப்பட்டு திடீரென்று ஒரு கண் மூடியிருப்பதைப் பார்க்க முடியும். இது உரிய சிகிச்சைகள் மற்றும் சர்க்கரை கட்டுப்பாடு மூலமாக சராசரியாக மூன்று மாதங்களில் சரி செய்யக்கூடிய ஒரு பிரச்சனை.

முதியவர்கள் சிலருக்கு வயது முதிர்வு காரணமாக தசைகள் தொய்வடைந்து அதனால் கண் இமைகள் சற்று இறங்கி இருக்கக் கூடும். இந்த நிலைக்கும் அறுவைசிகிச்சை நல்ல பலனளிக்கும்‌. கண் இமைகள் சரியாகத் திறந்து மூடாத நிலை இருக்கிறதா? அதற்குப் பின் பல ரகசியங்கள் இருக்கக்கூடும், அதை முறையாக கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால், உறுதியாகப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்!

Related Stories: