ஆரோக்கியம் காக்கும் பரட்டைக் கீரை

நன்றி குங்குமம் டாக்டர்

தென்னிந்தியாவில் எங்கும் கிடைக்கக் கூடிய கீரை இனம் பரட்டைக் கீரை. இது கீரைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் ‘கேல்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கீரையானது பார்ப்பதற்கு தலைவிரி கோலம் போல இருப்பதால், பரட்டைக் கீரை என அழைக்கப்படுகிறது.குறைந்த அளவு கலோரி, நிறைய நார்ச்சத்து, கொழுப்பு சத்து (ஒமேகா 3 கொழுப்பு அமிலம்) நிறைந்தது. எண்ணற்ற சத்துக்கள் இந்த பரட்டைக் கீரையில் அடங்கியுள்ளன. பசலைக்கீரையை விட அதிக அளவு விட்டமின் சி இதில் காணப்படுகிறது. பாலில் இருப்பதைவிட அதிக அளவு கால்சியம் நிறைந்துள்ளது.

மேலும், வைட்டமின் ஏ, வைட்டமின் B6, விட்டமின் கே, விட்டமின் ஈ, இரும்புச் சத்து, ஃபோலேட், துத்தநாகம், மக்னீசியம், கரோட்டினாய்டுகள், ஃபிளேவனாய்டுகள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த கீரை சுவையில் முருங்கை இலையின் சுவையை போன்றே இருக்கும்.அகத்தியர் எழுதிய குணவாகடம் என்னும் நூலில் பரட்டைக் கீரை பற்றி பின்வருமாறு கூறியுள்ளார்.

“பரட்டைநறுங் கீரையது பத்தியத்திற் காகும்

வெருட்டுகின்ற பித்தம் மிகமீறும் - புரட்டுங்

கபமுடனே வாதங் கரப்பானும் ஏகுஞ்

சுப்பவன மாதே நீ! சொல்”.

பரட்டைக் கீரையால் ஐய நோயும், வளிப்பிணியும், கரப்பானும் போகும். அழல் (பித்தம்) உண்டாகும்.இதய தசைகள் வலுப்பெறஉடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தத்தைப் பாய்ச்சும் உறுப்பான இதயத்தில் சிலருக்கு அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பு, இதயம் தற்காலிகமாக செயலிழப்பது போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகின்றன. பரட்டைக்கீரையில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால் இதை தினந்தோறும் உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது.

உடல் எடை குறையும்

உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் குறைந்த அளவு கலோரி, அதிக நார்ச்சத்து நிறைந்த பரட்டைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்தும், அதோடு உடற்பயிற்சியும் செய்து வந்தால் உடல் எடை குறையும்.

ரத்த அழுத்தம் தொடர்பான நோய்க்கு

பரட்டைக் கீரையை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டுவந்தால் இரத்த அழுத்தம் குறைபாடுகள் ஏற்படுவது குறையும். அத்துடன் ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை கடைபிடிக்க இரத்த அழுத்தம் தொடர்பான நோயில் இருந்து விடுபடலாம்.பரட்டைக்கீரையை தொடர்ச்சியாக எடுத்து கொள்பவர்களுக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் ஆபத்து குறைவு.

நோயெதிர்ப்பு சக்திக்கு,

பரட்டை கீரை பல விதமான மருத்துவ குணங்கள் கொண்டது. இக்கீரைகளின் இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. இதில் உள்ள “விட்டமின் சி”, மற்றும் “வைட்டமின் ஏ” தொற்று நோய்கள் சுலபத்தில் உடலை தாக்காதவாறு காக்கிறது.

சரும வியாதிகள், காயங்களுக்கு

இக்கீரையில் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் புண்கள் மற்றும் தோல் வியாதிகளை விரைவில் குணமாக்கும். பரட்டை கீரையை நன்றாக அரைத்து கொண்டு ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்திருக்கும் பரட்டை கீரையை சேர்த்து, சிறிது மஞ்சள் பொடி சேர்த்து தைலப்பதத்தில் நன்கு காய்ச்சவும். இந்த தைலத்தை புண்கள் மீது பூச புண்கள் ஆறும். தோல் நோய்கள் நீங்கும்.

பாதத்தில் முள், கண்ணாடி துண்டுகள் குத்திய புண் ஆறஒரு சிலருக்கு பாதங்களில் முள், கண்ணாடி, இரும்பு ஆகியவற்றின் மிக நுண்ணிய துண்டுகள் பாதங்களில் குத்திக்கொண்டு புண்களை ஏற்படுத்துகின்றன. பரட்டைக் கீரையை நன்கு அரைத்து முள், கண்ணாடி குத்திய இடத்தில் வைத்து கட்டினால், ஒன்றிரண்டு நாட்களில் குத்திய முள், கண்ணாடி துண்டுகள் போன்றவை வெளியேறி புண்ணும் விரைவில் ஆறும்.

வயிற்றுப் புண்ணுக்கு,

காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. பரட்டை கீரையை கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் ஆறும்.

மலச்சிக்கல் தீர,

இக்கீரையில் நார்ச்சத்து அதிகம்இருப்பதால், கடுமையான மலக்கட்டை இளகச் செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.எலும்புகள் பலம்பெற,வயதின் காரணமாக எலும்புகளின் உறுதி தன்மை குறைந்து கொண்டே வரும். பரட்டை கீரையில் எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுவடையச் செய்யும் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பரட்டை கீரையை பக்குவம் செய்து சாப்பிடுவதால் எலும்புகள், பற்கள், மூட்டுகள் வலுவடையும்.

புற்று நோயிலிருந்து பாதுகாக்க,

பரட்டைக் கீரையில் உள்ள கரோட்டினாய்டுகள், ஃபிளேவனாய்டுகள் போன்றவை புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறது.

கொலஸ்டிரால் குறைய,

பரட்டைக் கீரையில் கலோரியின் அளவு குறைவாக இருப்பதாலும், நார்ச்சத்து அதிகம் உள்ளதாலும், இக்கீரை கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு,

பரட்டைக் கீரையில் இரும்புச் சத்து மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளதால், அவை இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். மேலும் முடி உதிர்தலையும் தடுக்கும்.

தொகுப்பு : திலீபன் புகழ்

Related Stories: