அம்மா பாட்டி தாத்தாவிற்கு பெருமை சேர்த்துத் தருவேன்!

நன்றி குங்குமம் தோழி

என் பெற்றோரைப் பார்த்து தான் நான் வளர்ந்தேன். அவர்களுக்கு விளையாட்டு துறையில் ஆர்வம் இருந்ததால் எனக்கும் ஆர்வம் வந்தது என்றுதான் பெரும்பாலானவர்கள் தாங்கள் ஒரு குறிப்பிட்ட துறையினை தேர்வு செய்ய காரணம் என்பார்கள். ஆனால், ஐந்து வயது நிரம்பிய நட்சத்திராவிற்கு அவரின் தாத்தா, பாட்டிதான் இன்ஸ்பிரேஷனாம். அவர்கள் கம்பு சுற்றும் திறனைப் பார்த்து இவரும் கம்பு சுற்ற பழக ஆரம்பித்தார். தற்போது சிலம்பாட்டத்தில் தேசிய அளவில் பல போட்டிகளில் வென்று வெற்றிக் கோப்பையினை வென்றுள்ளார் நட்சத்திரா. அம்மா, தாத்தா மற்றும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வரும் நட்சத்திராவின் சாதனை குறித்து பெருமையோடு பகிர்ந்து கொண்டார் அவரின்  தாயார் நர்மதா.

‘‘என்னுடைய அப்பா மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அம்மா குடும்பத்தலைவி. இருவருமே சிலம்பாட்டம் பயிற்சி பெற்றவர்கள். எங்களின் சொந்த ஊர் மதுரை. அப்பா அங்குதான் பிறந்து வளர்ந்தார். எழுபது வயதான என் அப்பா மதுரை திருநகரில் வசித்தபோது அவரின் பத்து வயதில் இருந்தே அவர் முறையாக குருவிடம் சிலம்பாட்டம் கற்றுத் தேர்ந்தார். மேலும் பல போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்று கோப்பையினை வென்றுள்ளார்.

அம்மாவிற்கு சிலம்பம் பற்றி எல்லாம் தெரியாது. அப்பா சிலம்பாட்டம் பயிற்சியினை வீட்டில் எடுப்பதை பார்த்தவருக்கு அந்த விளையாட்டு மேல் ஈடுபாடு ஏற்பட்டது. அதனால் அவரும் அப்பாவிடமே சிலம்பாட்டம் கற்றுக் கொண்டார். இப்போதும் அப்பா, அம்மா இருவருமே எங்க வீட்டு மொட்டை மாடியில் சிலம்பாட்ட பயிற்சி எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் பயிற்சி எடுப்பதை என் மகள் நட்சத்திரா அவளின் ஒரு வயது முதல் அதாவது, நடக்க பழகிய காலத்தில் இருந்தே பார்த்து வளர்ந்து வந்தாள். அவளுக்கு மூன்று வயது இருக்கும் போதுதான் சும்மா வீட்டில் உள்ள கம்பினை எடுத்து சுற்றுவாள்.

அதை பார்த்த பிறகுதான் அவளுக்கு சிலம்பாட்டம் மேல் ஈடுபாடு இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு மதுரையில் ‘சிலம்பு ஆசான்’ பாண்டியராஜன் அவர்கள் நடத்தி வந்த சிலம்பாட்டம் பள்ளியில் அவள் முறைப்படி சிலம்பாட்டம் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தோம். ஒரே வருடத்தில் நட்சத்திரா சிலம்பாட்டத்தை முழுமையாக முறைப்படி கற்றுக் கொண்டாள். அப்போதே பள்ளியில் நடைபெறும் சிலம்பாட்ட போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தாள். வெற்றி பெற்று பரிசுகளும் பெற்றாள்.

 அதன் பிறகு அவளுக்கே அந்த விளையாட்டு மேல் தனிப்பட்ட ஈடுபாடு ஏற்பட ஆரம்பித்தது’’ என்றவருக்கு நட்சத்திராவிற்கு மற்ற விளையாட்டு மேல் அவ்வளவு ஈடுபாடு இல்லையாம். ‘‘பாக்ஸிங், கராத்தே போன்ற சண்டை பயிற்சிகள் இருக்கு. அதெல்லாம் உயிருக்கு ஆபத்து உண்டாக்கிவிடும். ஆனால், நம்முடைய பாரம்பரிய தமிழ் கலாச்சாரத்தை உலகம் அறியச் செய்யும் விளையாட்டு சிலம்பாட்ட தற்பாதுகாப்பு கலை. சிலம்பம் கலை எதிரிகளிடம் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது மட்டுமில்லாமல், எதிராளிகளுக்கு காயங்கள் மட்டுமே உண்டாக்கி உயிர்பலி உண்டாக்காது. தவிர மற்ற தற்பாதுகாப்பு கலைகளை விட படு சுறுசுறுப்பாக இயங்க சிலம்பாட்டம் கற்றுத் தந்துவிடும்.

கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுத தாக்குதல்களை கூட நல்ல உறுதியான கம்பால் சிலம்பாட்டம் ஆடி தடுத்து உயிர் தப்பிக்க முடியும். எனவே, சீறி வரும் எந்த பகை தாக்குதல்களையும் சிலம்பாட்டத்தால் எதிர்கொண்டு வெல்ல முடியும். முக்கியமாக மற்ற தற்காப்பு கலைகளில் சிறிய வயதினர் மிகவும் சிறப்பான பயிற்சியை பெற்றுவிட முடியாது.  ஆனால், சிலம்பாட்டத்தில் சுற்றுச்சுற்றி சுழன்று சுழன்று ஐந்து வயதாக இருந்தாலும் ஐம்பது வயது அனுபவமுள்ள சிலம்பாட்டக்காரர் போல் முழுமையான, சூறாவளி காற்றின் வேகத்துடன் சிலம்பாட்டம் ஆட முடியும். இவள் சிலம்பாட்டம் மட்டுமில்லாமல் நடனப்பயிற்சி,  பேட்மிட்டன் விளையாட்டுக்கான பயிற்சியும் எடுத்து வருகிறாள்’’ என்ற நர்மதா, நட்சத்திரா சிலம்பாட்டத்தில் பெற்ற வெற்றியினை பற்றி விவரித்தார்.

‘‘பல பள்ளி போட்டிகளில் சிலம்பாட்ட போட்டியில் வென்று பரிசுகளை குவித்துள்ளாள். நாங்க இப்போது சென்னையில் செட்டிலாகிட்டோம். இங்கு கண்ணன் என்பவர்தான் இவளுக்கு ஆசானாக இருந்து அவளுக்கான பயிற்சியினை அளித்து வருகிறார். குரு தரும் முறையான சிறந்த பயிற்சியாலும், தாத்தா மற்றும் பாட்டி இருவரின் பயிற்சியாலும் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற முதல் தேசிய அளவிலான நேஷனல் லெவல் சிலம்பாட்டம் போட்டியில் ஐந்து வயது சிறுமிகளுக்கான போட்டியில் வெற்றி பெற்று பெரிய விருது கோப்பையையும், பாராட்டு சான்றிதழும் பெற்றாள். அவள் கையில் கோப்பையுடன் மேடையில் பார்த்த போது எங்க மூவருக்குமே ரொம்ப பெருமையாக இருந்தது.

ஐந்து வயதிலேயே இவளுக்கு கிடைத்த இந்த வெற்றிதான் அவள் மென்மேலும் சிலம்பாட்ட போட்டியில் பல சாதனைகளை தொடர்ந்து செய்து உலகமே வியக்கும்படி சாதனை புரிவாள் என்ற நம்பிக்கையை அவளுக்கு ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல் சிலம்பாட்டம் மட்டுமின்றி படிப்பு, நடனம், பேட்மிட்டன் விளையாட்டிலும் கடின உழைப்பு மற்றும் உறுதியான மனதுடன் ஜெயித்துக்காட்டி தாத்தா, பாட்டி மற்றும் பெற்றோரின் பெயரை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அவளின் லட்சியமாக இருக்கிறது’’ என்றார் தன் மகளை உச்சி முகர்ந்தபடி நர்மதா.

தொகுப்பு : விஜயா

Related Stories: