வயதை மறக்கும் போது சிரிக்கத் தொடங்குகிறோம்!

நன்றி குங்குமம் தோழி

தானாய் முளைத்து,

தானாய் வளர்ந்து,

தானாய் பூத்து,

தானாய் காய்த்து,

தானாய் கனிந்து,

தானாய் உதிர்ந்து,

எல்லா விதையுமே சுயம்பு,

எல்லா காடும் சுயம்பு!

- வண்ணதாசன்

‘‘வண்ணதாசனின் இந்த வரிகள்தான் நாம் உருவாக்கி வைத்திருக்கிற நில எல்லைகளை தாண்டி எங்கோ ஒரு காட்டில் வேலை செய்யும் பெண்களின் சிரிப்பை பார்க்க பயணிக்க தூண்டியது’’ என்கிறார் புகைப்பட கலைஞர் நவீன்ராஜ் கெளதமன். பெண்களின் சிரிப்பை மட்டுமே தலைப்பாக வைத்து பல மாநிலங்களுக்கும் சென்று அங்குள்ள பெண்களை சிரிக்க மட்டுமே சொல்லி புகைப்படம் எடுத்து வருகிறார். இதுவரை 400 க்கும் மேற்பட்ட பெண்களின் சிரிப்பை ஆவணப்படுத்தி வைத்துள்ளார். சரி, சிரிப்பில் என்னதான் இருக்கிறது என கேட்டபோது...

‘‘எதையுமே நினைக்காம சிரிங்க... அதுவே உங்களுக்கு ஒரு புத்துணர்வையும் வாழ்தலுக்கான நம்பிக்கையையும் கொடுக்கும்’’ என்று பேசத் தொடங்குகிறார் நவீன். ‘‘பிறந்தது திருவாரூர் பக்கத்துல ஒட்டகுடி என்கிற சின்ன கிராமம். சின்ன வயசுல பண்டிகை நேரத்துல அப்பா அவரோட நண்பர்கிட்ட கேமரா வாங்கி அதுல எங்களை புகைப்படம் எடுப்பாரு. இப்போ இருக்கிற மாதிரி உடனே அந்த போட்டோக்களை டிஸ்பிளே செய்து பார்க்க முடியாது. அதை பிரிண்ட் பண்ணி வாங்க பல நாள் ஆகும்.

அப்போ நாங்க கூட்டு குடும்பமா இருந்தோம். நாங்க 3 பசங்க சேர்ந்து எங்களை போட்டோ எடுப்போம். அவங்க எடுக்கிறத விட நான் எடுக்குற போட்டோ ரொம்ப நல்லா வரும். அதுனால என்னைய அதிகமா போட்டோ எடுக்க சொல்லிடுவாங்க. எனக்கும் என்னை விட மத்தவங்களை புகைப்படம் எடுக்க ரொம்ப பிடிக்கும். இப்படித்தான் நான் நல்ல போட்டோக்

களையும் கேமராவையும் எப்படி பயன்படுத்துவது என தெரிந்து கொண்டேன். எல்லோரையும் போல நானும் என்ஜினியரிங் முடித்து விட்டு சில வருடங்கள் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். நிறுவனத்தில் வேலை செய்யும் போதும் என்னுடைய போனில் இயற்கையான காட்சிகளை படம் பிடித்து வந்தேன்.

அந்த நேரத்தில் தான் சென்னை வீக்கெண்ட் கிளிக்ஸ் போட்டோகிராபி என்கிற பெயரில் சிலர் குழுவாக சேர்ந்து வாரத்தில் ஒரு நாள் எல்லோரும் ஒரு இடத்திற்கு சென்று ஒரு தலைப்பின் கீழ் புகைப்படங்களை எடுப்பார்கள். அந்த குழுவில் நானும் இணைந்தேன். அவர்களுடன் சென்ற போது ஒரு தலைப்பின் கீழ் எப்படியெல்லாம் புகைப்படங்கள் எடுக்கலாம் என தெரிந்து கொண்டேன். அதுவரை நான் எனக்கு கண்ணில் பட்டவற்றை மட்டுமே புகைப்படமாக பதிவு செய்து வைத்திருந்தேன்.

அந்த குழுவில் சேர்ந்த பிறகு தான் நான் மக்களிடம் பேசவே தொடங்கினேன். இப்படி புகைப்படங்கள் எடுக்க செல்லும் போது நான் சந்திக்கும் மக்கள் அவர்களின் வாழ்க்கையில் சந்திக்கும் விஷயங்களைப் பற்றி சொல்வார்கள். இதன் மூலம் மக்களை பற்றி இன்னமும் நெருக்கமாக அறிந்து கொண்டேன். எனக்கும் இந்த மாதிரி புகைப்படங்கள் எடுப்பது பிடித்திருந்தது. அதே போல நான் எடுத்த புகைப்படங்களை திரும்ப பார்க்கும் போது அவர்கள் பேசிய எல்லாமுமே திரும்பவும் நியாபகத்திற்கு வரும்.

புகைப்படங்கள் மனிதர்களின் முகங்களை மட்டும் படம் பிடிப்பவை அல்ல. நாம் அன்று பார்த்து பேசிய நினைவுகளின் காலத்திற்கே கொண்டு செல்லும் ஆற்றல் கொண்டவை. தொடர்ச்சியாக நான் பயணம் செய்ய தொடங்கினேன். என்னுடைய வருமானத்தில் ஒரு கேமராவையும் வாங்கினேன். ஒரு தலைப்பின் கீழ் ஒரு வருடம் முழுவதும் புகைப்படம் எடுக்க வேண்டும். அதில் எந்த புகைப்படம் சிறந்ததாக இருக்கிறதோ அந்த படம் புகைப்பட கண்காட்சிகளில் வைப்பார்கள்.

அந்தக் கண்காட்சியில் கலந்து கொண்டு புகைப்படம் எடுக்க தலைப்பை தேடும் போதுதான் ஏன் மக்களை பற்றி எடுக்கக் கூடாது என தோன்றியது. அதிலும் ஒரு மனநிலையை பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும் எனவும் தோன்றியது. பல வகைகளில் ஆண்கள், பெண்கள் என புகைப்படங்கள் எடுத்தேன். ஆனால் அது எல்லாமே எனக்கு மன திருப்தியை அளிக்கவில்லை. பெண்களை மட்டுமே வெவ்வேறு மனநிலையில் இருக்கும் போது படம் பிடிக்கலாம் என எடுத்துக் கொண்டிருக்கும் போதுதான் மற்ற மனநிலையை விட பெண்கள் மனம் விட்டு சிரிக்கும் போது அழகாக தெரிந்தார்கள்.

கண்களை மூடிக் கொண்டு பற்கள் தெரிய மனம் விட்டு சிரிக்கும் போது ஆத்மார்த்தமான சிரிப்பை பார்க்க முடிந்தது. இதையே ஒரு தலைப்பாக எடுத்துக் கொண்டேன். இதை பற்றி மற்றவர்களுக்கு விவரிக்கும் போது எனக்கு வண்ணதாசன் எழுதிய ஒரு கவிதைதான் சொல்லி காட்டி சுயம்பு என பெயர் வைத்து பெண்களின் சிரிப்பை மட்டுமே ஆவணப்படுத்தினேன். இதற்காக தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுக்கவும் பயணம் செய்தேன்.

நான் பார்க்கும் பெண்களிடம் என்னை பத்தி சொல்லி நான் எடுத்த புகைப்படங்களை காட்டுவேன். அவர்களை புகைப்படம் எடுப்பதும் சவாலாக இருக்கும். கேமராவை எடுக்கும் போதே நீங்க எந்த சேனல்ல இருந்து வரீங்கன்னு கேட்பார்கள். நிறைய பேர் நீங்க போட்டோ எடுத்து யூடியூப்ல போட்டு சம்பாரிப்பீங்கன்னு சொல்வாங்க. அவர்களிடம் நான் புகைப்படம் எடுக்க கற்றுக் கொண்டிருக்கிறேன் என சொல்லி, சகஜமாக அவர்களுடன் பேசி என் மேல் நம்பிக்கை வந்த பின்னர்தான் என்னை புகைப்படம் எடுக்கவே  ஒத்துழைப்பார்கள். நிறைய பேர் புகைப்படம் எடுப்பதை விரும்பமாட்டார்கள். நானும் அவர்களை வற்புறுத்த மாட்டேன்.

இன்னும் நிறைய பேர் வெட்கப்பட்டுக் கொண்டே எடுக்க வரமாட்டார்கள். அப்புறம் நான் எடுத்த போட்டோ காட்டிய பிறகு அவர்களே புகைப்படம் எடுக்க முன் வருவார்கள். நான் போட்டோ எடுக்க தொடங்கியதும் சாதாரணமாக நிற்பார்கள். ஒரு தடவை சிரிங்க ஒரு போட்டோ எடுத்துக்கிறேன் என சொல்வேன். அவர்கள் சிரிப்பார்கள். ஆனால் அது போதாது. சிரிப்பு என்பது தன்னிலை மறக்கும் போது தோன்றுவது.

பல் தெரிய சிரிக்கும் போது அழகாக இருக்கிறீர்கள் என சொல்லும் போது அவர்களுடைய ஆத்மார்த்தமான சிரிப்பு வெளிவரும் அந்த நொடிக்காக நானும் காத்திருப்பேன். அதனை காலம் கடந்து பேசும் படமாக  என் கேமராவில் பதிவு செய்து கொள்வேன். இதில் குழந்தைகளுக்கு சிரிக்க சொல்லியா தரணும். சிரிங்க என சொல்லும் போதே குஷியாகி விடுவார்கள். நாம் வயதை மறக்கும் போது சிரிக்கத்  தொடங்குகிறோம் என நான் நினைக்கிறேன். ஏனெனில் வயதாக தொடங்கும் போதே நாம் சிரிப்பதை நிறுத்திக்கொள்கிறோம்’’ என்றவர் மற்றவர்களின் சிரிப்பை எங்கெல்லாம் சென்று படம் பிடித்தார் என்பதைப் பற்றி விவரித்தார்.

‘‘புகைப்பட தலைப்பிற்கு மொத்தம் 30 புகைப்படங்கள் இருந்தால் போதும். ஆனால் நான் சந்தித்த மனிதர்களும் அவர்களுடைய கதைகளும் எனக்கு புத்துணர்ச்சியாக இருந்தது. என்னை ஊக்கப்படுத்துவதற்காகவே இந்தியாவின் பல மாநிலங்களுக்கு பயணித்தேன். வெளியூர்களுக்கு போகும் போது அந்த மக்கள் பேசும் மொழி எனக்கு தெரியாது. சிரிங்க என சொல்வதற்கு  மட்டும் என்ன வார்த்தை என கேட்டு வைத்துக் கொள்வேன். ஆனாலும் அதை சொல்லும் போது மறந்து தப்பாக சொல்லி விடுவேன். அதை கேட்ட பெண்களும் வாய்விட்டு சிரிப்பார்கள்.

பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அதன் பிறகு நான் போன எல்லா மாநிலங்களிலும் வேண்டுமென்றே தவறாக பேசிதான் புகைப்படம் எடுத்து வந்திருக்கிறேன். சிரிப்பையும் வேறுபடுத்தி பார்க்க முடியாது. எதை பற்றியும் யோசிக்காமல் சிரிக்கும் போதும் சரி அதை நான் புகைப் படம் எடுத்துக்கொண்டிருந்தாலும் சரி நாங்கள் இருவரும் அந்த கணத்தை மறந்து  சிரித்துக் கொண்டு தான் இருப்போம். வேலை செய்து கொண்டு இருக்கும் பெண்கள் சிலர் முகமெல்லாம் அழுக்காக இருக்கு, இப்போ எதுக்காக எடுக்குறே என்று கேட்பார்கள்.

நான் உங்களை அழகாக எடுத்துக் காட்டுகிறேன் பாருங்கள் என சொல்லி புகைப்படம் எடுத்துக் காட்டுவேன். அப்போது அவர்களுக்கே தெரியாமல் அவர்களுடைய சிரிப்பு வெளிய வரும். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஆண்கள் சிரிப்பதே கிடையாது. சிரிக்கவே மறந்து விட்டார்கள் என்றுதான் சொல்லணும். அதையும் மீறி சிரிங்க என ஆண்களிடம் சொன்னால் மீசையை முறுக்கிக் கொண்டு கம்பீரமாக தங்களை காட்டிக் கொள்வார்கள்.

ஆனால் அதற்கு நேர்மாறாக காற்றின் போக்கிற்கேற்ப செல்லும் இறகை போல தான் பெண்கள் சிரிப்பதில் ரொம்பவும் ஆர்வமாக இருப்பார்கள். சிரிக்கும் போது தான் நாம அழகா இருக்கோம் என்று பெண்களுக்கு தோன்றும். பெண்கள்தான் எல்லா விஷயத்திலும் முன்னாடி இருக்கிறார்கள். என்னுடைய பாதி படங்கள் கருப்பு வெள்ளை படங்களாகவே இருக்கும். இவை எல்லாமே பார்ப்பவர்களை சுலபமாக தங்களுடன்  பொருந்தக்கூடிய ஒன்றாகவும் நம்மளுடைய  உணர்வுகளோடு கலந்ததாக  இருக்க வேண்டும் எனவும் தான் அந்த கருப்பு வெள்ளை புகைப்படங்களை தேர்வு செய்து எடுக்கிறேன். அதே போல நான் எடுத்த அந்த வண்ண படங்கள் எல்லாம் திட்டமிட்டது இல்லை.

என்னுடைய இந்த பயணத்தில் மறக்க முடியாத நினைவு என்றால் வால்பாறையில் நடந்ததுதான். மழையில் நனைந்து கொண்டே தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண்களை புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தேன். நீ ஏன் நனைஞ்சிட்டு இருக்கேன்னு கேட்டு அவர்கள் அணிந்திருந்த பிளாஸ்டிக் கவரை கழட்டி எனக்கு போர்த்தி விட்டார்கள். அந்த தருணம் இன்னமும் என்னால் மறக்க முடியாது. இன்னமும் பல மாநிலங்களுக்கு சிரிப்பை பார்க்க மட்டுமே பயணிக்க இருக்கிறேன். அந்த சிரிப்பு மட்டும்தான் இந்த நிலத்தோடும் மக்களோடும் அளவு கடந்த அன்பை செலுத்த சொல்கிறது’’ என்கிறார் நவீன்ராஜ் கௌதமன்.

தொகுப்பு : மா.வினோத்குமார்

Related Stories: