கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

*அப்பம் செய்யும் போது சில நேரம் கல்போல கெட்டியாகி விடும். இரண்டு பழுத்த வாழைப் பழங்களை போட்டு பிசைந்து அப்பம் செய்தால் மிருதுவாக இருக்கும்.

*உளுத்தம் மாவு அரைத்து வடை செய்யும்போது தண்ணீர் கொஞ்சம் அதிகமாகி விட்டால் ஒரு கைப்பிடி பாசிப்பருப்பு மாவை போட்டு கலக்கி வடை செய்தால், மொறுமொறுவென்று கரகரப்பாக இருக்கும். மசால் வடை செய்யும் போது மாவு நீர்த்துப் போய் விட்டால் இரண்டு பிெரட்  ஸ்லைஸை மிக்ஸியில் பொடித்து வடை மாவில் கலந்து வடை செய்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.

- எம்.வசந்தா, சென்னை.

*பாசிப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடிகட்டி, வெந்நீரில் கொதிக்க வைத்து பருப்பைப் போட்டு மூடி வைத்தால் கால் மணி நேரத்தில் பருப்பு பூவாக மலர்ந்து விடும். பிறகு தாளித்தால் குழையவே குழையாது. மேலும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிராகவே இருக்கும்.

*அரிசி உப்புமா செய்ய அரிசியை ரவை உடைக்கும் போதே அத்துடன் மிளகாய் வற்றலை சேர்த்து உடைத்து விட்டால் ருசி மிக நன்றாக இருக்கும்.

- எஸ்.ஆஷாதேவி, சென்னை.

*சமையலுக்கு தேங்காய் உடைக்கும்போது அதன் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்து கொதிக்க விட்டால் ரசம் சுவை கூடுதலாக இருக்கும்.

*வெண்ணெய் வாங்கி வைத்ததை காய்ச்ச நேரமில்லை என்றால் அதன் மீது உப்பைத் தூவி விட்டால் கெடாமல் அப்படியே இருக்கும்.

- ஏ.சித்ரா, காஞ்சிபுரம்.

*லட்டு செய்யும் போது அந்தக் கலவையில் ஏதாவது பழ எசென்ஸை கலந்து லட்டு செய்தால் சுவையும், மணமும் அனைவரையும் கவரும்.

*சோமாஸ் செய்யும் போது உள்ளே வைக்கும் பூரணம் உதிர்ந்து விடாமல் இருக்க பூரணத்தில் சிறிதளவு நெய்விட்டு கலந்து விட்டால் உதிராது.

*இனிப்பு வகைகளுக்கு கலர் சேர்த்து செய்யும்போது, அந்த கலரை ஒரு ஸ்பூன் வெந்நீரில் கரைத்து கலந்தால் கலர் எல்லா இடங்களிலும் நன்றாக கலந்து கொள்ளும்.

*குலாப் ஜாமூன் செய்யும் மாவை உருட்டி நடுவே பள்ளமாக செய்து, சிறிதளவு பால் கோவாவை வைத்து மூடி உருண்டைகளாக்கி பொரித்து எடுத்து ஜீராவில் போட்டால் சுவையான குலோப் ஜாமூன் தயார்.

- எஸ்.சுஜிதா, மதுரை.

*காபி பில்டரில் சிறிது கல் உப்பைப் போட்டு பிறகு காபி பொடியை போட்டு வெந்நீர் ஊற்றினால் காபி நல்ல ஸ்ட்ராங்காக வரும்.

*புளித்த தோசை மாவில் சுக்குப் பொடி கலந்து ஊத்தப்பம் செய்தால் சுவையாக இருப்பதுடன் எளிதில் ஜீரணம் ஆகும்.

- எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.

*இட்லி மாவில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டால் இட்லி மெதுவாக வரும்.

* உப்பு ஜாடியில் இரண்டு பச்சை மிளகாயைப் போட்டு விட்டால் ஈரம் கசியாது.

*கோழி இறைச்சியை நறுக்கி, தயிரில் கொஞ்ச நேரம் முக்கிவைத்து பின் சமைத்தால் ருசி அடடா.

- க.நாகமுத்து, திண்டுக்கல்.

*தட்டை தயாரிக்கும் போது அதை ஒரு ஊசியால் நான்கு ஐந்து இடத்தில் குத்திய பிறகு எண்ணெயில் போட்டு எடுத்தால் கரகரப்பாக வரும்.

*பூசணிக்காய் கூட்டு தயாரிக்கும்போது தோசை அல்லது இட்லி மாவில் சிறு உருண்டைகளாக  எண்ணெயில் பொரித் தெடுத்து சேர்த்தால் மிகச் சுவையாக இருக்கும். இதே போன்று காராமணி மற்றும் கொண்டைக் கடலை குழம்பிற்கும் சிறு உருண்டைகளை பொரித்து சேர்த்தால் குழம்பு சுவையாக இருக்கும்.

- ஜி.இந்திரா, திருச்சி.

*கடுகை தாளிக்கும் போது வெடித்து வெளியே சிதறி விடாமலிருக்க சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்தால் கடுகு வெடிக்காது.

*உருளைக்கிழங்குடன் மஞ்சள் பொடி சேர்த்து வேகவைத்து, மிளகாய் பொடிக்கு பதிலாக மிளகுப் பொடி சேர்த்தால் வாயுத் தொல்லை வராது.

- ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்.

*சுண்டல் செய்து இறக்கி வைக்கும் நேரத்தில் சிறிது கசகசா, கடலைப்பருப்பு, பட்டை, இலவங்கம், மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி பண்ணி போட சுவையாக இருக்கும்.

*கொண்டைக்கடலையில் சுண்டல் செய்யும் போது மசாலாவுடன் அவல் பொரியை பொடித்து கலந்து செய்ய சுவை நன்றாக இருக்கும். சீக்கிரம்

கெட்டுப் போகாது.

தொகுப்பு : மகாலெஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி.

கோவைக்காய் சட்னி

தேவையானவை:

கோவைக்காய் - கால் கிலோ,

வெங்காயம் - 5,

பூண்டு பல் - 4,

காய்ந்த மிளகாய் - 4,

பச்சை மிளகாய் - 3,

தனியா - 1 டேபிள் ஸ்பூன்,

வெந்தயம் - 1 டீஸ்பூன்,

புளி - எலுமிச்சை அளவு,

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,

கடுகு - அரை டீஸ்பூன்.

செய்முறை:

வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கோவைக்காயை நன்கு அலசி விட்டு இரு முனைகளையும் நறுக்கி எடுத்து விடவும். பிறகு நீள வாக்கில் நன்றாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய கோவைக்காய், வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், வெந்தயம், முழு தனியா மற்றும் புளி எல்லாம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். சுவையான கோவைக்காய் சட்னி தயார்.

 

தொகுப்பு : ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

Related Stories: