சேலையில வீடு கட்டவா..?

நன்றி குங்குமம் தோழி

ஸாரி பாக்ஸ் போல்டிங் முறையினை விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் ஹேமலதா

நிகழ்ச்சிகளுக்கு நான் ‘ஸாரி பாக்ஸ் போல்டிங் சர்வீஸ்’ புரொவைட் பண்றேன் என நம்மிடம் பேச ஆரம்பித்தவர் அழகுக்கலை நிபுணர் ஹேமலதா. முன்பெல்லாம் திருமணம் என்றால் மணப்பெண்ணை சுற்றி நான்கு ஐந்து பெண்கள் நின்று ஆளுக்கொரு பக்கமாக இழுத்து சேலை கட்டிவிடுகிறேன் என்கிற பெயரில் நேரத்தை விரயம் செய்து கொண்டிருப்பார்கள்.

வெளியில் இருந்து ‘முகூர்த்த நேரம் நெருங்குது... பெண்ணை சீக்கிரமா அழைச்சுட்டு வாங்கோ’ என்கிற சத்தம் தொடர்ந்து கேட்கும் என்று புன்னகைத்தவர், இப்ப அந்த நிலையெல்லாம் மலையேறியாச்சு. அந்த அளவுக்கு அழகுக் கலை துறை பக்காவாக டெவலப் ஆகியாச்சு. பெண்களுக்கு புடவை கட்ட அரை மணி நேரத்திற்கு மேல் எடுக்கும் என்ற கான்செப்டை உடைத்து, அரை நிமிடத்திலேயே சேலையை எளிதாக உடுத்திக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு புடவை பக்காவாக தயாராய் இருக்கும் என்றவர், இதற்கு பெயர்தான் ‘ஸாரி பாக்ஸ் போல்டிங்’ மெத்தெட் என்றவாறு நம்மிடம் அது குறித்து விளக்க ஆரம்பித்தார்.

நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு உடுத்தப் போகும் சேலையினை, பாக்ஸ் போல்டிங் செய்து உடுத்தும்போது, நேரம் மிகமிக குறைவாகவே எடுக்கும் என்பதைத் தாண்டி, பார்க்க அழகாகவும், நேர்த்தியாகவும் தெரியும். உடல் பருமனாக இருக்கும் பெண்கள் என்றால், உடுத்தப் போகும் சேலை உடல் எடையினை குறைத்தும் காட்டும். சேலையே எனக்கு கட்டத் தெரியாதுப்பா என்கிற பெண்களும், போல்டிங்கை மட்டும் பிரித்துவிட்டு  அதில்  போடப்பட்டிருக்கும்  பின்னை ஜாக்கெட்டுடன் இணைத்துக் கொண்டால் மட்டும் போதுமானது. பக்காவாக பெண்கள் புடவையில் ரெடி என்கிறார் புன்னகைத்து.  

இப்போதெல்லாம் “அட, என்னம்மா பண்றீங்க... கல்யாணப் பெண்ணை சீக்கிரம் ரெடி பண்ணி கூட்டீட்டு வாங்க” என்கிற அவசரப்படுத்தும் வார்த்தைகள் திருமண வீட்டில் ஒலிக்கும் முன்பே, மணப்பெண் சேலையில் தயாராகிவிடுகிறார். இதற்காகவே மணப் பெண் உடுத்த இருக்கும் நிச்சயதார்த்த சேலைகள், முகூர்த்த புடவைகளை நாங்கள் முன்கூட்டியே பாக்ஸ் போல்டிங் செய்து நிச்சயதார்த்த தட்டில் வைத்துவிடுகிறோம். பிறகு, முகூர்த்த நேரத்தில் கிடைக்கும் மிகக் குறைந்த இடைவெளியில் மணமகளை சேலையில் மிக நேர்த்தியாக தயார் செய்துவிடுவோம். இது முகூர்த்த நேர அவசரத்தினை குறைக்க மிகவும் பயனுள்ள ஒன்றாகவும் இருக்கிறது.

ப்ரீ பிலீட்டிங்... அயர்னிங்... பாக்ஸ் போல்டிங்... இவையெல்லாம் இணைந்ததுதான் ஸாரி பாக்ஸ் போல்டிங். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இது நடைமுறையில் இருக்கிறது. ஸாரி ப்ரீ பிலீட்டிங் முறை வந்த புதிதில், மணப்பெண்ணிற்கு மட்டும் உடுத்தும் நிச்சயதார்த்தப் புடவை, முகூர்த்தப் புடவைகளை மட்டும் ப்ரீ பிலீட்டிங் செய்து, அயர்ன் செய்து, பாக்ஸ் போல்டிங் செய்து கட்டினார்கள். ஆனால் இன்று பெண்கள் சேலை கட்டும் டிரென்ட் முற்றிலும் மாறிவிட்டது.

மணப்பெண் மட்டுமின்றி, மணப்பெண்ணின் சகோதரிகள், தோழிகள், உறவினர் என அனைவரும் ஸாரி பாக்ஸ் போல்டிங் செய்து நிகழ்ச்சிகளில் கட்ட ஆர்வம் காட்டுகின்றனர். அந்த அளவுக்கு இந்தத் துறை வளர்ச்சியை நோக்கி போய்கொண்டிருக்கிறது. ஒரு திருமண வீடு என்றால் குறைந்தது 10 புடவையாவது பாக்ஸ் போல்டிங் செய்வதற்கு எங்களிடம் வந்துவிடும். குறிப்பாக ஃபாரின் கஷ்டமர்கள் மொத்தமாக 10 புடவைகளைக் கொடுத்து பாக்ஸ் போல்டிங் செய்து வாங்கிக்கொண்டு ப்ளைட் ஏறுகிறார்கள் என்று மேலும் புன்னகைத்தவர், இதன் காரணமாகவே இந்தத் துறை சார்ந்த வருமானம், வீட்டிலிருக்கும் பெண்களுக்கு நிறைவாகக் கிடைக்கிறது என்கிறார். ஒரு நாளைக்கு 4 சேலையை அயர்ன் செய்து பாக்ஸ் போல்டிங் செய்தால் போதும், பெண்கள் உட்கார்ந்த இடத்தில் சம்பாதிக்கலாம் என்கிறார் இவர்.

சின்னச் சின்னதாக பிலீட் வைத்து, அயர்ன் செய்து, ஸாரி பாக்ஸ் போல்டிங் செய்ய ஒரு சேலைக்கு குறைந்தது 500 வரை வாங்கப்படுகிறது. அதுவே மணப்பெண்ணின் முகூர்த்த சேலையாக இருந்தால் 700ல் தொடங்கி 1500 வரை சேலையின் குவாலிட்டி பொருத்து வாங்கப்படும். ஒரு சேலைக்கு பின் அடித்து, அயர்ன் செய்து, பாக்ஸ் போல்டிங் செய்ய குறைந்தது 20 நிமிடங்கள் எடுக்கும். ஸ்டோன் வைத்த ஸாரிகள் தவிர்த்து எல்லாவிதமான ஸாரிகளையும் ப்ரீ பிலீட்டிங் செய்யலாம். ஸ்டோன் சேலைகளை அயர்ன் செய்யும்போது பசை மெல்டாகி ஸ்டோன் கீழே விழ வாய்ப்புண்டு. இல்லையெனில் நம்முடைய அயர்பாக்ஸ் கூட டேமேஜ் ஆகலாம்.

ப்ரீ பிலீட்டிங்கில் சேலையில் சின்னச் சின்ன கொசுவங்களையும் வைத்து அயர்ன் செய்ய முடியும். குண்டாக இருப்பவர்கள், ஒல்லியாக இருப்பவர்கள், நார்மலான உடலமைப்பு கொண்டவர்கள், உயரமானவர்கள், உயரம் குறைந்தவர்களுக்கு என்று பிலீட்டிங் வைக்கும் முறை இதில் மாறும். பெரும்பாலும் அளவெடுத்துதான் இதனை நாங்கள் செய்கிறோம். சிலர் கஷ்டமைஸ்டாக எனக்கு 9 பிலீட் வேண்டும் அல்லது 11 பிலீட் வேண்டுமென குறிப்பிட்டுக் கேட்பார்கள்.

முன் பக்கமாக வரும் பிலீட்டிங்கினை தள்ளி தள்ளி வைத்து அயர்ன் செய்வதால் பெண்கள் நடக்கும்போது, சேலையின் முன்பக்கம் பார்க்க மிகவும் அழகாகத் தெரியும். சேலையை அணிந்த பிறகு ஒரு ஹிப் பெல்ட் அல்லது ஹிப் செயின் அணிந்து கொண்டால் பெண்களின் தோற்றம் பார்க்கவே வேற லெவல்தான் போங்க என்றவாறு நம்மிடமிருந்து விடைபெற்றார்.

ஸாரி பாக்ஸ் போல்டிங் முறையினை வாசகர்களுக்காக இங்கே செய்து காட்டுகிறார் அழகுக்கலை நிபுணர் ஹேம லதா. தேவையானவை: அயர்ன் போர்ட், அயர்ன் பாக்ஸ், பெரிய சைஸ் கிளிப் ஒன்று, சேஃப்டி பின்கள், குண்டூசிகள்.

ஸ்டெப்1   

சுங்குவில் இருந்து சோல்டர் லெவல் வரை நார்மலான உயரம் இருப்பவர்களுக்கு 45 இஞ்ச் முதல் 46 இஞ்ச் உயரம் வரை பிலீட் வைக்கலாம். உயரமான பெண்களுக்கு 46 இஞ்ச் முதல் 50 வரை வைக்கலாம். முதலில் சேலையில் சின்னச் சின்னதாக பிலீட் வைத்து அதனை அயர்ன் போர்டில் கிளிப் செய்து இணைக்க வேண்டும். பிறகு இடைவெளிவிட்டு இரண்டு மூன்று பின்களை அடித்து அயர்ன் போர்டில் போட்டு அயர்ன் செய்ய வேண்டும்.

ஸ்டெப்2

மார்பு பகுதியில் வரும் புடவையினை ‘V’ சேப்பில் புடவையின் பிலீட்டை ½ இஞ்ச் அளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அகலப்படுத்தி அயர்ன் செய்ய வேண்டும். இதில் ஒல்லியாக இருந்தால் 13 இஞ்ச் வரை அகலம் வைக்கலாம். பருமனாக இருப்பவர்களுக்கு 16 முதல் 20 வரை இருக்கும்.

ஸ்டெப்3

ஹிப் பிலீட்டிங் நார்மல் சைஸ் என்றால் 36 முதல் 40 இஞ்ச் வரை இருக்கும். உடல் பருமனாக இருப்பவர்களுக்கு 40 முதல் 50 வரை வைக்கலாம். சேலையை சுற்றிப் பார்த்தும் அளவை பின் செய்தும் குறித்துக் கொள்ளலாம். சேலையில் வரும் முன் கொசுவத்தை குட்டி குட்டி பிலீட்டாக வைத்தால், முன் பக்கம் விரிந்து நடக்கும்போது பார்க்க அழகாக இருக்கும். புடவையின் நீளம் பொறுத்து 6ல் இருந்து தொடங்கி, 11 முதல் 12 பிலீட் வரையில் குட்டி குட்டி பிலீட்டாக வைத்து, பின் செய்து பிறகு அயர்ன் பண்ணலாம்.

ஸ்டெப்4

பாக்ஸ் போல்டிங் மெத்தெட்: முந்தானையினை உள்பக்கம் இருப்பது மாதிரி எதிர்புறமாக மடித்து இடுப்பில் சொருகும் கொசுவம் பகுதி அதற்கு எதிர் பக்கமாக வருவது மாதிரி மடித்து போட்டு பாக்ஸ் போல்டிங் செய்ய வேண்டும். இறுதியாக முந்தானையில் வரும் பள்ளு பகுதியினை புடவையின் மேலே வருமாறு அழகாக சுற்றி வைக்கலாம்.

தொகுப்பு : மகேஸ்வரி நாகராஜன்

Related Stories: