விலை கூடுதல் என்றாலும் ஆரோக்கியமானது!

நன்றி குங்குமம் தோழி

 

‘‘சமூகத்தில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் ஒரு பெண் தனியாக வாழ வேண்டும் என்றால் அவள் பல தடைகளை தாண்டி வரவேண்டும். நானும் எனக்கான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நிறைய கஷ்டங்களை கடந்துதான் வந்திருக்கிறேன். இன்று நான் எனக்கான ஒரு அடையாளத்தினையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்’’ என்கிறார் சென்னையை சேர்ந்த கஜலட்சுமி. இவர் அழகுக்கலை நிபுணர் மட்டுமில்லாமல் மகிளா என்ற பெயரில் ஹெர்பல் நேப்கின்களை தயாரித்து அதனை தமிழகம் முழுக்க விற்பனை செய்து வருகிறார்.

‘‘நான் சிங்கிள் பேரன்ட்தான். என்னுடைய மகள் இப்போது 12ம் வகுப்பு படிக்கிறாள். அவள் சின்ன வயதாக இருக்கும் போதே என் கணவர் என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். கிட்டத்தட்ட 12 வருஷமா நான் என் மகளுக்காகவே வாழ்ந்து வருகிறேன். எனக்கு அப்பா, அம்மாவும் கிடையாது. அவங்க இருவருமே என்னுடைய சின்ன வயசுலேயே இறந்துட்டாங்க. கூட பிறந்தவர் ஒரு அண்ணன் இருக்கார். அவரும் குடும்பமா இருப்பதால், நானும் என் மகளும் அங்கு போய் இருக்க முடியாது. நான் வளர்ந்தது படிச்சது எல்லாம் என் சித்தி வீட்டில்தான். அவங்களுக்கு குழந்தை இல்லை. என் அம்மா இறந்த பிறகு என்னை அவங்கதான் வளர்த்தாங்க.

+2 வரை படிச்சிட்டு, நர்சிங்கில் டிப்ளமா படிச்சேன். அதன் பிறகு ஒரு தனியார் மருத்துவமனையில் சில காலம் வேலை பார்த்தேன். அதனைத் தொடர்ந்து வேற ஒரு மருத்துவமனையில் எனக்கு டயாலிசஸ் பிரிவில் நர்சிங்கான வாய்ப்பு வந்தது. அங்கு ஐந்து வருடம் வேலை பார்த்தேன். நான் வேலை பார்த்த அந்த மருத்துவமனைவேறு ஒரு மருத்துவமனையின் நிர்வாகத்திற்கு கைமாறியதால், பழைய ஸ்டாப்களை எல்லாம் வேலையை விட்டு நீக்கிட்டாங்க. இதற்கிடையில் எனக்கும் திருமணமாச்சு. காதலித்துதான் திருமணம் செய்து கொண்டேன். வாழ்க்கையும் சந்தோஷமாகத்தான் இருந்தது. நானும் கருவுற்றேன். குழந்தையும் பிறந்தாள். அவள் கொஞ்சம் வளர்ந்ததும், நான் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். நிறைய வேலைகள் பார்த்தேன்.

கொரியர் வேலை கூட செய்திருக்கேன். வேலையில் இருக்கும் போது, பட்டப்படிப்பு படிச்சு தேர்ச்சி பெற்றேன். அதன் பிறகு நான் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். நர்சிங் துறையில் அனுபவம் இருந்தாலும், நான் அதில் வேலைக்கு சேரவில்லை. காரணம், அந்த சமயத்தில் 12 மணி நேரம் வேலை இருக்கும். இப்பதான் எட்டு மணி நேரம்னு மாத்தி இருக்காங்க. அந்த சமயத்தில் என் மகள் சின்ன குழந்தை என்பதால், அவளை அவ்வளவு நேரம் விட்டு செல்ல முடியாத சூழல். சித்திப் பார்த்துக் கொண்டாலும், அவர்களால் 12 மணி நேரம் பார்த்துக் கொள்ள முடியாது என்பதால்தான் நான் மறுபடியும் நர்சிங் வேலைக்கு செல்லவில்லை.

2012 வரை அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதன் பிறகு அந்த நிறுவனம் மூடிவிட்டதால், கம்பனி ஓனர் எங்களுக்கு எல்லாம் ஒரு தொகை கொடுத்து அனுப்பினார். அதில் அழகுக்கலை படிச்சு, ஒரு பார்லர் ஆரம்பிச்சேன். பிரைடல் மேக்கப் முதல் எல்லா விதமான மேக்கப்பும் செய்தேன். லாக்டவுனில் சும்மா வாடகைக் கொடுக்க முடியாத காரணத்தால் மூடிட்டேன். ஆனால் இப்போதும் என்னுடைய பழைய வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் பிரைடல் மேக்கப் மற்றும் மற்ற மேக்கப்பும் செய்து வருகிறேன். முகூர்த்தம் நேரத்தில் பிசியாயிடுவேன்’’ என்றவர் ஹெர்பல் நேப்கின் பிசினஸ் ஆரம்பிக்க என் மகள் தான் காரணம் என்றார்.

‘‘எனக்கு சின்ன வயசில் இருந்தே வெள்ளைப்படுதல் பிரச்னை இருக்கு. அதற்கான சிகிச்சை எடுத்தும் முழுமையாக குணமாக்க முடியவில்லை. எனக்கும் பெண் பிள்ளை. அவளும் பூப்படைந்தால். மகளைப் பெற்று இருக்கும் அம்மாக்கள் பெண் பெரியவள் ஆனதும், முதலில் அவளுக்கு சீதனமாக கொடுப்பது நேப்கின்கள்தான். நான் எல்லாம் துணிதான் பயன்படுத்தினேன். ஆனால், என் மகளுக்கு அதைத்தர முடியாது என்பதால் அவளுக்கு ஒரு நல்ல நேப்கின்களை கொடுக்க நினைச்சேன். அந்த சமயத்தில் ஹெர்பல் நேப்கின்கள் வர ஆரம்பிச்சது. அதையே நாம் ஏன் செய்யக்கூடாதுன்னு தோன்றியது. பல ஆய்வுகள் செய்து ஒரு நேப்கினை நான் உருவாக்கினேன்.

முழுக்க முழுக்க பருத்திக் கொண்டு தயாரித்து கல்லூரி பெண்களுக்கு சாம்பில் கொடுத்தேன். இரண்டாவது முறை கொடுத்த போது அவர்கள் வேண்டாம் என்று மறுத்தார்கள். காரணம், அதில் நிறைய குறைகள் இருந்தது. பருத்தி என்பதால் மிகவும் தடிமனாக இருந்ததால் சுடிதார் அணியும் போது அசவுகரியமாக இருப்பதாக சொன்னார்கள். மேலும் மாதவிடாய் ஈரத்தினை முழுமையாக அப்சார்ப் செய்யவில்லை என்று சொன்னார்கள். அதனால் அதனை மறுபடியும் மாற்றி அமைத்தேன். அதுவும் சக்சஸாகல.

அப்பதான் நாம் இதை தயாரிப்பதற்கு பதில் இதனை தயாரிப்பவர்களிடம் பல்க்காக வாங்கி அதனை நான் ஹெர்பல் நேப்கின்னாக மாற்ற முடிவு செய்தேன். எனக்கான நேப்கின்களுக்கு தேவையான மூலப்பொருட்களை நான் வாங்கிக் கொடுத்திடுவேன். அதைக் கொண்டு 60% நேப்கின் தயாராகி வந்திடும். அதன் பிறகு அதில் மூலிகைப் பொடிகளை சேர்த்து ஒட்டி காயவைத்தால் போதும். இந்த மூலிகைப் பொடிகள் பொறுத்தவரை சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி அமைத்திருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் என்னுடைய நேப்கின்கள் அனைத்தும் ஆய்வுக்கு செலுத்தப்பட்டு தரமானது, பெண்கள் இதனை பயன்படுத்தலாம், தீங்கு விளைவிக்காது என்ற சான்றிதழ் கொண்டது.

பொதுவாக கடைகளில் விற்கப்படும் நேப்கின்களில் டயாக்சின் என்ற ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது. அதனால்தான் பல பெண்களுக்கு பிறப்புறுப்பில் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. என்னுடைய நேப்கின் பருத்தியால் செய்யப்பட்டது. மேலும் ஆலோவேரா மற்றும் சோளத்தின் ஸ்டார்ச் பயன்படுத்துகிறோம். இவை 98% ஹெர்பல் மட்டுமில்லாமல் எளிதில் மக்கக்கூடியது.

இதனை தொடர்ந்து பயன்படுத்தினால், கண்டிப்பாக மாற்றத்தினை உணர்வார்கள். ஒரு மாசம் தொடர்ந்து பயன்படுத்தினாலே அரிப்பு, எரிச்சல் பிரச்னை இருக்காது. நான் பல ஆண்டுகளாக வெள்ளைப்படுதல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தேன். தற்போது அந்த பிரச்னை முற்றிலும் நீங்கிவிட்டது. ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப, லார்ஜ், எக்ஸ்ட்ரா லார்ஜ், டிரிபில் எக்ஸ்.எல்... என பல சைஸ்களில் வருகிறது’’ என்றவர் தமிழ்நாடு முழுக்க டீலர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறார்.

‘‘என்னுடைய நேப்கின் பொறுத்தவரை எல்லோருக்கும் போய் சேர வேண்டும். இதனை நான் மட்டுமே விற்பனை செய்தால், என்னால் ஒரு குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும்தான் செய்ய முடியும். அதனால் தமிழ்நாடு முழுக்க டீலர்களை அமைத்தேன். இதன் மூலம் பெண்களுக்கு ஒரு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க முடிந்தது. என்னுடைய நேப்கினை நான் வையிட் லேபிளில்தான் தருவேன். அவர்கள் என்னுடைய பிராண்ட் பெயரில் விற்பனை செய்யலாம்.

அல்லது அவர்கள் ஒரு பிராண்ட் அமைத்து அதன் பெயரில் விற்கலாம். உதாரணத்திற்கு ஒரு பேக் 150 ரூபாய் என்றால், டீலர்களுக்கு அதைவிட கம்மியான விலையில் நான் பல்காக கொடுத்திடுவேன். அவர்கள் வாங்கி விலையில் இருந்து லாபம் பார்த்து விற்பனை செய்யலாம். என்னைப் பொறுத்தவரை ஹெர்பல் நேப்கின் பல பெயர்களில் வந்தாலும் அதன் டிஸ்டிப்யூட்டர் நானாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். தற்போது தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், பெங்களூர் மற்றும் வெளிநாட்டிலும் எனக்கான டீலர்கள் உள்ளனர்.

ஒரு சில வாடிக்கையாளர்களே என்னுடைய டீலர்களாகவும் உள்ளனர். மார்க்கெட்டில் கிடைக்கும் நேப்கின்களைவிட இதன் விலை அதிகம்தான். ஆனால் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது’’

என்றார் கஜலட்சுமி.

தொகுப்பு : ஷன்மதி

Related Stories: