முதுமலை தம்பதிகள் குறித்த ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது!

நன்றி குங்குமம் தோழி

முதுமலை யானைகள் சரணாலயத்தில் யானைகளை பராமரித்து வந்த தம்பதிகள் குறித்த ஆவணப்படமான “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” (The Elephant Whisperers) ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. தாயை பிரிந்த இரண்டு யானை குட்டிகளுக்கும், அவற்றின் பராமரிப்பாளர்களுக்கும் இடையிலான பிரிக்க முடியாத பிணைப்பை சித்தரித்து இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மார்ச் 13 அன்று தொடங்கி நடைபெற்றது. இதில் சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட படமான “தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்” என்கிற ஆவணப்படம், நெட்பிளிக்ஸ்

ஓ.டிடி. தளத்தில் ஏற்கனவே வெளியாகி யிருந்தது.  இந்த ஆவணப்படத்தை கார்த்தி கொன்சால்வ்ஸ் இயக்க, குனீத்மோங்கா தயாரித்திருந்தார்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள ஆசியாவின் மிகப்பெரிய  யானைகள் முகாமான தெப்பக்காட்டில், காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதிகள் யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிகின்றனர். 2017ல் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகம் அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த குட்டி யானை ஒன்று காயத்துடன் சுற்றித்திரிந்தது. இந்த யானையினை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு வந்து, ரகு என பெயர் வைத்து பொம்மனும், பெள்ளியும் பராமரித்து வந்தனர்.

24 மணி நேரமும் யானைகளுடன் தங்கி குட்டிகளை இருவரும் வளர்த்த முறை, அவர்களுக்குள் ஏற்பட்ட பாசப் பிணைப்பு போன்றவற்றினை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, 37 வயதேயான பெண் இயக்குனர் கார்த்தி கொன்சால்வ்ஸ் ஆவணப்படுத்தியிருந்தார். சிறு வயது முதலே தெப்பக்காடு யானைகள் சரணாலயத்துக்கு அடிக்கடி சென்று வந்தவர், கைவிடப்பட்ட ரகு என்ற யானைக் கன்றுக்கும் அதைப் பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற காட்டு நாயக்க இன தம்பதிக்கும் இடையே உள்ள அழகிய பந்தத்தை 400 மணி நேரத்திற்கு மேல் எடுக்கப்பட்ட பதிவுகளில் இருந்து, குறிப்பிட்ட சில காட்சிகள் மட்டும் வெட்டி எடுக்கப்பட்டு ஆவணப்படமாக ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.

பொம்மன், பெள்ளியின் வாழ்வியலையும், அவர்களுக்கு யானைகளுடன் இருக்கும் உறவையும்  படத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருந்தார் இயக்குநர். அடிப்படையில் தனக்கு இயற்கை வெளிச்சத்தில் படம் பிடிப்பது அதிகம் பிடிக்கும் எனச் சொல்லும் கார்த்தி கொன்சால்வ்ஸ், இயற்கை மட்டுமல்லாமல் மலைவாழ் மக்களின் பண்பாடு, வாழ்வியல் முறைகளையும் ஆவணப்படுத்தி வந்துள்ளார். இவர் டிஸ்கவரி உள்ளிட்ட செய்தி நிறுவனங்களிலும் பணியாற்றியிருப்பதுடன், புகைப்படக் கலைஞராகவும் காட்டுயிர் ஆர்வலராகவும் அவர் இயக்கிய முதல் படத்திலேயே உலகப் புகழ் பெற்றுவிட்டார்! ஆவணப்படத்தின் வழியாக பொம்மனும், பெள்ளியும் உலகம் முழுக்க இன்று பேசுப்பொருளாகி உள்ளனர்.

“இந்தியத் தயாரிப்பு ஒன்றுக்கு முதல் ஆஸ்கரை வென்றிருக்கிறோம். இரண்டு பெண்கள் இதைச் செய்திருக்கிறோம். நான் நடுங்கிக் கொண்டுதான் இருக்கிறேன்” என தன் டிவிட்டர் பக்கத்தில் எழுதி இருக்கிறார் தயாரிப்பாளர்களில் ஒருவரான குனீத்மோங்கா. பெண்கள் இணைந்து இயங்கினால் எதையும் சாதிக்கலாம் என்பது இங்கே நிரூபணமாகிறது.

‘தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்’ படத்துடன், RRR படத்தில் இடம்பெற்று, உலகளவில் வைரலான ‘நாட்டு நாட்டு’ பாடலும் தேர்வானது. ஆஸ்கர் விருதின் அறிமுகம் வழங்கும் நிகழ்வுக்கு பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் வருகை புரிந்தார். ஆஸ்கர் விருது விழாவில் அறிமுகம் வழங்கும் மூன்றாவது இந்திய நடிகை என்ற சிறப்பை இவர் பெறுகிறார். ஆஸ்கர் விருது நிகழ்ச்சியினை மூன்றாவது முறையாக தொகுத்து வழங்கியவர் என்கிற சிறப்பை ஜிம்மி கிம்மல் பெறுகிறார்.

தொகுப்பு : மகேஸ்வரி நாகராஜன்

Related Stories: