மனதை மயக்கும் மணப்பெண் ப்ளவுஸ்கள்!

நன்றி குங்குமம் தோழி

தற்போது புடவை கட்டுபவர்களின் மிகப்பெரிய சவால் என்பது அதற்கு மேட்சான, கிளாஸிக்கான ப்ளவுஸ்களை தைத்து போடுவது தான். இப்போது புற்றீசல்கள் போல டிசைனர் ப்ளவுஸ்க்கென கடைகள் புதிது புதிதாக முளைத்து வருகிறது. ஆயிரங்களில் ஆரம்பித்து லட்சங்களில் ப்ளவுஸிற்காக செலவழிப்பதாக சொல்கிறார்கள்.

அதுவும் திருமணம் என்றால் கேட்கவா வேண்டும். மணப்பெண்ணின் புடவைகளை விட ப்ளவுஸ்கள் பார்ப்பவரை சுண்டி இழுக்கும் வகைகளில் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். மணப்பெண்கள் பார்த்துப் பார்த்து ஆடைகளை செலக்ட் செய்து வாங்குவதும், அதற்கு பொருத்தமான ப்ளவுஸ்களை தைப்பதும் என இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார் பிரபல ஆடை வடிவமைப்பாளர் வனஜா.

ஆரி ஒர்க் டிசைன்கள்?

இப்போதெல்லாம் மணமகளுக்கு மட்டுமல்லாமல் மணமகனுக்கும் சேர்த்து இருவருக்கும் ஒரே மாதிரியான டிசைன்களில் ஆரி ஒர்க் செய்து ஆடைகளை தயாரிப்பது மிகவும் பிரபலமாகி வருகிறது. பட்டுப் புடவைகளுக்கு தான் ஆரி வேலைப்பாடு செய்யப்பட்ட பிளவுஸ் அணியவேண்டும் என்ற நிலை மாறிவிட்டது. தற்போது டிசைனர் புடலைகள்,  லெஹங்கா, காக்ரா போன்ற உடைகளுக்குமே ஆரி வேலைப்பாடு கொண்ட ப்ளவுஸ்களை பெண்கள் விரும்புகிறார்கள். அந்த அளவிற்கு ஆரி வேலைப்பாடுகள் மிகவும் பிரபலமாகி வருகிறது. அதிலும் மணப்பெண்களுக்கு ஏற்றவாறு மாப்பிள்ளைக்கும் உடைகளை வடிவமைக்கிறார்கள். இருவரும் இந்த கிராண்ட் லுக்கில் மேடையில் இருக்கும் போது பார்க்கவே அழகாக இருக்கும்.

ப்ளவுசின் விலை?

 பட்டுப் புடவைகளின் விலையை விட ப்ளவுஸ்களில் போடும் டிசைன்களுக்காக கொடுக்கப்படும் விலை கூடுதலாகி விட்டது. ஆயிரம் ரூபாய்க்கு புடவை எடுத்தால் அதைவிட இரண்டு மடங்காக ப்ளவுஸ்களுக்கு செலவு செய்கிறார்கள். காரணம், பெண்கள் தங்களுடைய மனதில் நினைக்கும் டிசைன்கள் ப்ளவுஸ்களில் வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனை அழகாக ஓவியமாக வடிக்கக்கூடிய கைவினைக் கலைஞர்களும் பலர் பெருகிவிட்டனர். புடவை மிகவும் சிம்பிளாக இருந்தாலும் அழகான டிசைன்களில் ஆரி ஒர்க் செய்துபோடும் பொழுது அந்த புடவையின் மதிப்பு கூடிவிடும். மணப்பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சியை பல மடங்காக்க இந்த ப்ளவுஸின் வடிவங்களும் ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல.

எந்தெந்த விசேஷங்களுக்கு எந்த மாதிரியான ப்ளவுஸ்கள்?

நிச்சயதார்த்தத்திற்கு பூக்களும், கொடிகளும், இலைகளுமாய் விதவிதமான வடிவங்களை ப்ளவுஸ்களில் அமைக்கலாம். திருமண வரவேற்புக்கு மணமக்களை பல்லக்கில் அமர்த்தி அழைத்துச் செல்வது போல் முதுகிலும், கைகளில் மணமக்கள் ஆளுக்கு ஒரு புறம் நடனம் ஆடுவது போலவும் வடிவமைக்கலாம். இவை மணப்பெண் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. ப்ளவுஸ்களில் தொங்கும் குஞ்சங்களில் கூட மணமக்களின் அலங்காரம் அல்லது மணமக்களின் பெயர்கள் முழுவதுமாக அல்லது இனிஷியல் என்று வடிவமைப்பது இப்போதைய ஃபேஷன். பட்டுப் புடவையின் நிறத்திற்கும் டிசைனுக்கும் ஏற்றார் போல் அந்த வகை டிசைன்களை ப்ளவுஸ்களில் கொண்டு வந்து மிகவும் கிராண்டாக வடிவமைப்பது இன்னொரு முறை.

இதில் வரக்கூடிய வண்ணங்களை மணமகனுடைய ஆடைகளில் டிசைன் செய்யும் போது இருவரையும் ஜோடியாக மேடையில் பார்க்கும் போது கண்கள் மிளிரச் செய்யும். வளைகாப்பு என்றால் முதுகில் தொட்டில் வைத்து போடும் டிசைன்களும் இப்போதெல்லாம் நல்ல வரவேற்பை பெறுகின்றன.

தற்போதைய ஃபேஷன் ப்ளவுஸ்கள் குறித்து?

மணமக்களின் முக்கியமான சொந்தங்களுக்கு கொஞ்சம் சிம்பிளாக விதவிதமான டிசைன்களை வடிவமைத்து தருவதோடு, அம்மா, அக்கா போன்ற நெருங்கிய உறவுகளுக்கு ப்ளவுஸின் முதுகு புறத்தில் ராதே கிருஷ்ணா, மற்ற கடவுளின் உருவங்களை பதித்து வேலைப்பாடுகள் செய்து தருவதும் இப்போது பிரபலமாகி வருகிறது.

முகூர்த்தத்திற்கு ஏற்ற ப்ளவுஸ்கள்?

மணப்பெண் போட்டுக் கொள்ளும் நகைகளுக்கு ஈடாக மணப்பெண்ணின் ப்ளவுஸும் திருமணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மிகவும் ரிச்சான அழகான வேலைப்பாடுகள் கொண்ட ப்ளவுஸ்களை அணிந்து நகைகளை போடும்போது நகைகளின் தேவையும் குறைந்து போகிறது. அந்த ப்ளவுஸ்களே அந்த அளவு அழகை மணமகளுக்கு வாரிக் கொடுத்து விடுகின்றன. காலை முகூர்த்தத்துக்கு ப்ளவுஸ்கள் வடிவமைக்கும் பொழுது பஃப் கை வைத்து கீழிருக்கும் பட்டையிலும், கழுத்திலும் மிக நுணுக்கமான டிசைன்களை வடிவமைத்தால் அழகாக காட்சியளிக்கும். நம்முடைய பாரம்பரியத்தை மாற்றாமல் மிகவும் அழகாக அமைந்து விடும்.

ப்ளவுஸ்களுக்கான செலவுகள் அவசியமா?

திருமணத்திற்கு ஆகும் லட்சக்கணக்கான செலவுகள் எதுவும் திரும்ப வரப்போவதில்லை. ஆனால் திருமணம் என்பது வாழ்வின் முக்கிய கட்டமல்லவா? வாழ்நாளில் ஒருமுறை நிகழ்வு. அதனை பரிபூரணமாக அனுபவிக்க எண்ணுகிறார்கள் இந்த தலைமுறையினர். அதனால் இக்கால பெண்கள் செலவுகள் குறித்து கவலை கொள்வதில்லை. அதனோடு இந்த ப்ளவுஸ்களில் போடும் டிசைன்கள் அவர்களின் மனதிற்கு நிறைவானவையாக அமைந்துவிடுகிறது.

அந்த ப்ளவுஸ்களை மற்ற புடவைகளுக்கும் மேட்ச் செய்து மீண்டும் மீண்டும் அணியத் தூண்டும் வகையில் இருக்கும் என்பதால், அதனை கிராண்டாக அமைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். அடுத்தடுத்து மற்ற உறவுகளின் விசேஷங்களுக்கு போகும் பொழுது சிம்பிளான புடவைகளை இந்த ப்ளவுஸ்களுடன் அணியும் போது மிகவும் ரிச்சான லுக்கை கொடுக்கும்’’ என்றார் வனஜா.

தொகுப்பு : தனுஜா ஜெயராமன்

Related Stories: