தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் கண்காணிப்பு குழு கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்

ஆத்தூர், நவ.14: அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்  மற்றும் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்  வெல்லபிரசாத் மற்றும்  முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு ஆகியோர், நேற்று சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட மாணவி ராஜலட்சுமியின் வீட்டிற்கு வந்து, அவரது பெற்றோருக்கு ஆறுதல்  கூறினர். பின்னர் அகில இந்திய காங்கிரஸ்  கமிட்டியின் செயலாளர்  வெல்லபிரசாத் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 32  மாவட்டங்களில் 28 மாவட்டங்கள் வன்முறை நடைபெறும் மாவட்டங்களாக அரசின்  அதிகாரப்பூர்வமான தகவல் தெரிவிக்கிறது. தமிழகத்தின் சட்ட ஒழங்கு சீர்குலைவு  என்பது அரசாலே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின  மக்களின் பாதுகாப்பு, தமிழகத்தில் கேள்விக்குறியாக இருப்பதை, மாணவி ராஜலட்சுமியின் மரணம் உணர்த்துகிறது. இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு சரியான நீதி கிடைக்க காங்கிரஸ் கட்சி அனைத்து  முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

மத்தியிலும் மாநில அரசிலும் உள்ள தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் காண்காணிப்பு  மற்றும் நடவடிக்கை குழு கூட்டத்தை ஆண்டுக்கு இரண்டு முறை கூட்ட வேண்டும்  என சட்டத்தில் செல்லப்பட்டுள்ளது. ஆனால், கூட்டத்தை கூட்டாததால்தான்  மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்களுக்கு எதிராக நடைபெறும்  சம்பவங்கள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் நீர்த்துப்போய் கொண்டுள்ளன.  எனவே மாநில அரசு இந்த கூட்டத்தை கூட்டி தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு  எதிராக நடக்கும் வன்முறை குறித்து நடவடிக்கை எடுக்க  வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: