மாற்றத்துக்கான பெண்கள் -முதல் பெண் பதிப்பாளர் அன்னை நாகம்மையார்

நன்றி குங்குமம் தோழி

நிலாவில் கால்பதித்த முதல் மனிதன் நீல் ஆம்ஸ்ட்ராங். விண்வெளியில் பறந்த முதல் பெண் வாலண்டினா. கதிரியக்கத்தை (X-Ray) கண்டுபிடித்து மருத்துவத்தில் புரட்சி செய்தவர் மேரி கியூரி. இப்படி ஏதேனும் ஒரு துறையில் முதன்முறையாகத் தடம் பதித்தவர்களின் பெயர் வரலாற்றில் நிலைபெற்று நிற்கும். அவர்களுக்குப் பிறகு எத்தனையோ சாதனையாளர்கள் வருவார்கள், புதிய சிகரங்களைத் தொடுவார்கள். ஆனால், அவர்களுடைய சாதனையின் பெருமை என்னவென்று  ஆராயும் போது, அந்தத் துறையில் முதல் தடம் பதித்த சாதனையாளர்களின் பெயரிலிருந்துதான் பின் வந்தவர்களின்  வரலாறு தொடங்கும்.

இந்தியாவில் எத்தனையோ பெண்கள் சமூகப் போராளிகளாக... அரசியல் தலைவர்களாக... கல்வியிலும் ஆராய்ச்சியிலும் சேவையிலும் சாதனையாளர்களாகத் திகழ்ந்தார்கள். இன்றும் அப்படிப் பலர் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரையும்விட மிகப்பெரும் புரட்சிகரமான சீர்திருத்தக் கருத்துகளைச் செயல்படுத்தி, மற்றவர்கள் செய்யமுடியாத சாதனைகளை மிக இயல்பாக நடத்திக் காட்டியவர் அன்னை நாகம்மையார். அப்படி அவர் செய்த சில முக்கியமான, முதல் சாதனைகள் இவை...

அம்மையின் கைகளில் தவழ்ந்த `குடி அரசு’!சுயமரியாதை இயக்கத்தின் பிரசார ஆயுதமான `குடி அரசு’ ஏட்டின் பதிப்பாளராக 1924 ஆம் ஆண்டில் தன்னைப் பதிவு செய்தவர் நாகம்மையார். ஒரு புரட்சிகரமான சமுதாய இதழுக்குப்  பதிப்பாளராக மட்டுமன்றி, அந்தப் பத்திரிகையைத் தன் சொந்தப் பிள்ளையாகக் கருதியவர். `குடி அரசு’ இதழ் எத்தனையோ போராட்டங்களுடன் நடந்து வந்தது. இடையில் குடி அரசு அலுவலகத்தை  தந்தை பெரியார் ஈரோட்டிலிருந்து சென்னைக்கு மாற்றினார். சில காலத்துக்குப் பிறகு மீண்டும் குடிஅரசு அலுவலகம் ஈரோடு வந்தது. அதற்கு இடைப்பட்ட காலத்தில், தான் பெற்ற பிள்ளையைப் பிரிந்த தாயின் நிலையில் தவித்துக் கிடந்தார் அன்னை நாகம்மையார்.

1928 ஆம் ஆண்டில் `ரிவோல்ட்’ என்ற ஆங்கில இதழை நடத்துவதற்கு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குச் சென்று சட்ட பத்திரங்களைத் தாக்கல் செய்தார்.  அதற்காக  பலமுறை அவர் நீதிமன்றம் செல்ல வேண்டி இருந்தது. கட்டுப்பாடுகளை உடைத்த `ரிவோல்ட்’ என்பதன் பொருள் என்ன? எதற்காகப் பத்திரிகைக்கு இந்தப்  பெயர் சூட்டப்படுகிறது?’ என்று காவல்துறை விசாரிக்கிறது. அதற்கு விளக்கம்கூறி நாகம்மையார் எழுதிக் கொடுத்த அறிக்கைதான் கீழே இருப்பது.

“Revolt என்ற வார்த்தைக்கு நான் எடுத்துக்கொண்ட அர்த்தம், `கட்டுப்பாட்டை உடைத்தல்’ என்பது. அதாவது, மனித தர்மத்திற்கும் மனித இயற்கைக்கும் விரோதமான அரசியலினாலும் சரி, மத இயலினாலும் சரி, அதிகார இயலினாலும் சரி, முதலாளித்துவ இயலினாலும் சரி, ஆண் இயலினாலும் சரி மற்றும் எவற்றினாலும் சரி அவர்களினால் ஏற்படும் இயற்கைக்கும் அறிவுக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகளை உடைத்து, உலகமும் அதன் இன்பமும் எல்லோருக்கும் பொது என்பது, மக்கள் யாவரும் சமம் என்பதுமான கொள்கையை மனசாட்சிப்படி, சாத்தியமான வழிகளில் பிரச்சாரம் செய்வதே அதன் நோக்கம்.’’

முதல் பெண் பதிப்பாளர்

இந்தச் செய்திகளின் வழியே 1928 ஆம் ஆண்டில் ஒரு தமிழ் ஏடு மற்றும் ஆங்கில இதழ் இரண்டுக்கும் பத்திரிகை ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் அத்துடன் அவற்றை வெளியிட்ட அச்சகத்தின் உரிமையாளராகவும் திகழ்ந்த முதல் பெண் தலைவர் நாகம்மையார் என்பதையும் அறிகிறோம். அவர் நடத்திய அச்சகத்தின் பெயர் `உண்மை விளக்கம் பிரஸ்’.

நாகம்மையாரின் பத்திரிகை தாகம் தீரவே இல்லை. பெரியாரின் போராட்டங்களை போல அதுவும் நீண்டு கொண்டே சென்றது. அந்த வழியில் 1928 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட `பகுத்தறிவு’ இதழின் பதிப்பாளர் நாகம்மையார். ஆனால், பகுத்தறிவு இதழ் நாகம்மையார் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவ்வப்போது வெளிவந்தது. தொடர்ச்சியாக வெளிவந்தது 1935 மே மாதத்துக்குப் பிறகுதான்.

பெரியாரை `தோழர்’ என்றவர் `தோழர்’ என்ற சொல்லை  தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் மேடைகளில்  அறிமுகம் செய்தபோது தன் கணவரையே, `தோழர் ராமசாமி அவர்களே!’ என்று அழைத்தவர்  அன்னை நாகம்மையார். தாலி  என்பது `அடிமைச் சின்னம்’ என்ற கொள்கையின் அடையாளமாகத் தாலியை அகற்றிய முதல் சுயமரியாதை வீரர் நாகம்மையார். மேலும் சுயமரியாதைத் திருமணங்களுக்கு அவரே தலைமை தாங்கி இருக்கிறார். தலைமை உரை ஆற்றும்பொழுது, `தோழர் ஈ.வெ.ரா. அவர்களே’ என்று தயக்கமின்றி விளித்தார். தன் கணவர் பெரியாரை மட்டுமல்ல, அவரது தமையனார் திரு.ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்களையும் `தோழர் கிருஷ்ணசாமி’ அவர்களே’ என்று விளித்து, கூட்டத்திலிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியவர் நாகம்மையார்.

வைக்கம் போரில் நாகம்மையார்

1924 ஆம் ஆண்டு கேரளாவில்  வைக்கம் என்ற ஊரில் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில் நடக்கக் கூடாதென்று தடுக்கப்பட்ட ஈழவ  மக்களின் அடிப்படை

உரிமைக்காகப் பெரும் போராட்டம் நடந்தது. கேரள காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட பின்பு அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வெற்றிபெறச்  செய்தவர் தந்தை பெரியார்.

அந்தப்  போராட்டத்தில் ஈடுபட்டு தடையை மீறி கோயில் தெருவில் நுழைய முயன்ற தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு, கேரள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு பெரியார் சிறை சென்ற செய்தியை அறிந்தவுடன் பெரியாரின் தோழர்கள் கோவை அய்யாமுத்து, எஸ்.ராமநாதன், கண்ணம்மையார்  ஆகியோருடன் ஈரோட்டிலிருந்து புறப்பட்டு வைக்கம் சென்றார் நாகம்மையார். எஸ்.ராமநாதன் அவர்கள் தலைமையில் போராட்டம் தொடர்ந்தது. அன்று வைக்கத்தில் ஓங்கி ஒலித்தது நாகம்மையாரின் குரல்.

இன்றைய காலத்தின் பின்னணியில் நின்று பார்க்கும்போது, சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் நடந்த அன்னை நாகம்மையாரின் சாதனைகளும் போராட்டங்களும் நம்மை வியக்க வைக்கின்றன. இத்தனை உறுதி கொண்ட நாகம்மையார், 1955 மே 11 அன்று காலமானார்.  அவரது தொண்டும், எளிமையும் பேசப்பட்ட அளவுக்கு அவரது போர்க்குணமும் புரட்சிகரமான செயல்பாடுகளும் சாதனைகளும் பேசப்படுவதில்லை.

நன்றி: முரசொலி நாளேடு

Related Stories: