கல்லையும் கைவினை கலைப் பொருளாக மாற்றலாம்!

நன்றி குங்குமம் தோழி

‘‘நான் பிறந்தது கேரளா பாலக்காடு சித்தூரில். எங்களுடையது விவசாய குடும்பம். அப்பா, அம்மா இருவருமே விவசாயம் தான் பார்த்து வந்தாங்க. பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே படித்தேன்’’ என்று கூறும் சசிகலா பலவிதமான கைவினைப் பொருட்களை செய்து வருகிறார். இவரின் ஒவ்வொரு கைவினைப் பொருட்களும் வித்தியாசமாகவும் அதே சமயம் கண்களை கவரும் வண்ணம் உள்ளது. இவர் கைவினைப் பொருட்கள் செய்வதை தன்னுடைய தொழிலாக மாற்றியது குறித்து விவரிக்கிறார்.

‘‘நான் சின்ன வயசில் எங்க வீட்டைச் சுற்றி விதவிதமான பூக்களை வளர்த்தேன். அனைத்தும் மணம் வீசும் வண்ண மலர்கள். எனக்கு தினமும் அவர்களுடன் பேச வேண்டும். அவர்களை முழுமையாக நான் தான் பராமரித்து வந்தேன். அந்த வண்ண மலர்கள் மத்தியில் தான் என் பெண் பார்க்கும் படலம் நடந்தது. என் கணவர் ஒரு கவிஞர். அவருக்கு என்னை பிடித்து இருப்பதையே ஒரு கவிதையாக வர்ணித்து சொன்னார். திருமணம் சித்தூரில் நடைபெற்றாலும், என் கணவருக்கு கோவையில் வேலை என்பதால் நாங்க அங்கு செட்டிலாயிட்டோம்.

இங்கு எங்க வீட்டில் வளர்ப்பது போல் இயற்கையாக மணம் வீசும் வண்ண மலர்களை வளர்ப்பதற்கான சூழல் இல்லை. அதனால் என்னுடைய நேரத்தை நல்லபடியாக செலவழிக்க வேண்டும் என்று விரும்பினேன். ‘வேஸ்ட்’  பொருட்களை வைத்து செய்யப்படும் கைவினை கலைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தேன். இதற்காக நான் யாரிடமும் பயிற்சி எடுக்கவில்லை. நானே என் மனதிற்கு தோன்றுவதை செய்வேன். அதனை கொண்டுதான் என் வீட்டினை அலங்காரம் செய்தேன். வரவேற்பு அறையில் ஆரம்பித்து வீடு முழுக்க என்னுடைய கைவண்ணத்தால் மிளிர்ந்த பொருட்கள்தான் எங்களின் வீட்டினை அலங்கரித்தது. அதை பார்த்து பலரும் பாராட்டுவது மட்டுமில்லாமல், அவர்களும் அதேபோல் செய்து தரச்சொல்லி கேட்டனர்.

மணல், கல், பெயின்ட், அட்டைப் பெட்டிகள், கம்பி  மற்றும் வேஸ்ட் பொருட்களை வைத்துதான் என்னுடைய கைவினைப் பொருட்களை தயாரிப்பேன். ஒவ்வொரு கைவினைப் பொருட்களை செய்யும்போதும் வெவ்வேறு பொருட்கள் தேவைப்படும்.  அதேபோல் ஒவ்வொன்று செய்யக்கூடிய நேரமும் மாறுபடும். சிலவற்றை அரை மணி நேரத்தில் செய்து முடித்திடுவேன். அதே சமயம் ஒரு சில அலங்காரப் பொருட்கள் செய்ய இரண்டு மாதங்கள் கூட ஆகும்.

ஒவ்வொன்றையும் மிகவும் பொறுமையாகவும்,  நுணக்கமாகவும் செய்ய வேண்டும். அதனால் அதை செய்யும் போது மட்டும் எந்தவித சிந்தனைகள் இல்லாமல் முழு கவனத்துடன் செய்ய வேண்டும். அப்பதான் அதற்கு முழு வடிவத்தினை கொடுக்க முடியும். சில சமயம் என்னுடைய முழு நேரமும் இதற்காக மட்டுமே செலவு செய்திருக்கேன். ஒரு சில கைவினை கலைப் பொருட்களை பல நாட்கள் இரவு பகல் பாராது கணவர் மற்றும் மகனின் ஒத்துழைப்புடன் செய்து முடித்திருக்கிறேன்.

எனது கைவினை கலைப் பொருட்களால் என் வீடு முழுக்க அலங்காரம் செய்திருப்பதைப் பார்த்து வீட்டிற்கு வரும் உறவினர்கள், கணவரின் நண்பர்கள், என் தோழிகள் எல்லாரும் தங்களுக்கும் செய்து தரும்படி கேட்பார்கள். அதற்காக விலையும் கொடுக்க முன்வருவார்கள். எனக்கு என் பொருட்களை விற்பனை செய்ய விருப்பமில்லை. அப்படியும் சிலர் கட்டாயப்படுத்தும் போது, அதை அவர்களுக்கு பரிசாக கொடுத்திடுவேன்” என்றவர் தான் உருவாக்கி இருக்கும் கைவினைப் பொருட்கள் குறித்து விவரித்தார்.

‘‘அட்டைப்பெட்டி, மணல், கல், பெயின்ட், கோல்டன் முத்துக்களைக் கொண்டு மகாபாரதத்தின் ஒரு கதாப்பாத்திரமான பீமன் கையில் இருக்கும் கதாயுதம் போன்ற வடிவமைப்பில் ஒரு பூத்தொட்டியினை செய்திருக்கேன். பார்க்க கதாயுதம் போல் இருந்ததால் என் வீட்டிற்கு வருபவர்கள் அதை கையில் தூக்கி மகிழ்வார்கள்.

இதில் செயற்கை பூக்களால் நிரப்பி லிவ்விங் அறையில் வைத்தால் அவ்வளவு பிரமாண்டமாக இருக்கும். அடுத்து மெல்லிய கயிறில் செய்யப்பட்ட உருளை வடிவ லேம்ப். பி.விசி பைப் மற்றும் அட்டையில் தான் இதை உருவாக்கி இருக்கேன். வீட்டு வரவேற்பறையில் வைத்தால் அழகாக இருக்கும். கிராமங்களில் உப்பு மற்றும் ஊறுகாயினை பீங்கான் ஜாடியில்தான் போட்டு வைப்பார்கள். அதில் வண்ணம் பூசி அதில் செயற்கை மலர்களை வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.

இந்த செயற்கை மலர்களையும் நான்தான் செய்தேன்.  ஆலிலையை வைத்து ஒரு அழகான கலைப் பொருளை செய்யலாம். ஆலிலையை இருபத்தி மூன்று நாள் தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதற்கு வண்ணம் தீட்டினால் அவ்வளவு அழகாக இருக்கும். அதை நீளமான விளக்கமாறு குச்சியில் பொருத்தினால் பார்க்க மயில் தோகை ேபால் காட்சியளிக்கும். பேப்பர், அட்டைப்பெட்டி, தெர்மாகோல், பிளைவுட், பிவிசி பைப், மணல், கல் வைத்து பலவித கை வினைப் பொருட்களை உருவாக்கி வருகிறேன். மொசைக் கல்லையும் அழகாக மாற்றிடுவேன். இவ்வாறு ஓட்டலில் பார்சல் கட்டி வரும் சில்வர் பேப்பர், திருமண பத்திரிகையையும் அழகான கைவினைப் பொருளாக மாற்ற முடியும்.

இவை அனைத்துமே என்னுடைய கற்பனையில் தோன்றிய விஷயங்கள்தான். அதற்கு நான் ஒரு முழு உருவம் கொடுத்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இது போன்று வேஸ்ட் பொருட்

களைக் கொண்டு பலவிதமான கைவினைப் பொருட்களை உருவாக்கி அதனை கண்காட்சியாக அமைக்க வேண்டும் என்பது என்னுடைய எதிர்கால லட்சியம்’’ என்றார் சசிகலா.

நறுமண அருமருந்து கிராம்பு!

சத்துக்கள் நிறைந்த கிராம்பு ஒரு நறுமண மருத்துவ மூலிகையாகும். கிராம்பு சிறியதாக இருந்தாலும் இதில் ஈரப்பதம், கால்சியம், கார்போ ஹைட்ரேட், கொழுப்பு, தயமின், துத்தநாகம், நியாசின், நார்ப்பொருள், பாஸ்பரஸ், புரதம், போலேட், மினரல், ரிபோ பிளேவின், வைட்டமின் ‘சி’, ‘ஏ’, ‘கே’ போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இதன் மருத்துவக் குணங்கள்.

*தினமும் 2 கிராம்பை மென்று தின்றால் பித்தம் குறையும். வாய் துர்நாற்றம் அகலும்.

*கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தினால் ஈறு வீக்கம், பல்வலி, வாய் நாற்றம் சரியாகும்.

*கிராம்பு, மிளகு, வெற்றிலையை மென்று, மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.

*சுக்கு, கிராம்பை கஷாயம் போட்டு மூன்றுவேளை பருகி வந்தால் கை, கால், மூட்டுவலி சரியாகும்.

*கிராம்பு சிறிதளவு உப்பு இவற்றை அரைத்துப் பசும்பாலில் கலந்து நெற்றியில் தடவினால் தலைவலி வராது. கிராம்புப் பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி அருந்தினால் வறட்டு இருமல் நீங்கும்.

*கிராம்புப் பொடியை வறுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வாந்தி நிற்கும். சளி குறையும்.

*சிறிது அளவு சமையல் உப்புடன் கிராம்பைச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கும்.

*துளசிச்சாறுடன் தேன், கிராம்புத்தூள் சேர்த்துச் சாப்பிட நரம்புத்தளர்ச்சி நீங்கும்.

*கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட தோல் நோய்கள் மாயமாகும்.

*3 துளி கிராம்பு எண்ணெய், சிறிதளவு தேன், வெள்ளைப்பூண்டுச்சாறு, சேர்த்து படுக்கைக்குச் செல்லும் முன்பு சாப்பிட்டால் ஆஸ்துமா கட்டுப்படும். அல்லது 30 மில்லி நீரில்

6 கிராம்புகளை போட்டு கொதிக்க வைத்து, தேன் கலந்தும் குடிக்கலாம்.

*பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் கருப்பையின் வலிமைக்கும், கருப்பையானது சுருங்கி விரிவதற்கும் கிராம்பு பயன்படுகிறது. இடுப்புவலி, மூட்டுவலி, தொடை, நரம்பு வலி, தசைப்பிடிப்பு போன்ற பகுதிகளில் கிராம்பு எண்ணெயை தடவலாம்.

- அபர்ணா சுப்பிரமணியம், சென்னை.

தொகுப்பு : விஜயா கண்ணன்

Related Stories: