திறமையும் உழைப்பும் இருந்தால் இல்லத்தரசி கூட தொழிலதிபராகலாம்!

நன்றி குங்குமம் தோழி

‘‘சொந்த ஊர் கோவை. தற்போது ஓசூரில் வசித்து வருகிறேன். உணவுத்துறைக்குள் நான் வந்து எட்டு வருஷமாச்சு. உணவு சார்ந்த தொழில் எங்களின் பரம்பரை தொழில். என் பாட்டி காலத்தில் இருந்து நாங்க இந்த துறையில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் அவங்க சிறிய அளவில் வீட்டில் இருந்தபடிதான் செய்து வந்தாங்க. மூன்றாவது தலை

முறையா நான் இதை ஒரு தொழிலாக மாற்றி இருக்கிறேன்’’ என்கிறார் ஓசூரில் வசித்து வரும் கல்கி. இவர் இங்கு TN37 என்ற பெயரில் கொங்கு ஸ்பெஷல் உணவகம் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.

‘‘எங்களுடையது கூட்டுக் குடும்பம். அதனால் தினமும் மூன்று வேளையும் பத்து பேருக்கு சமையல் நடக்கும். அது மட்டுமில்லை என்னுடைய பாட்டி, அம்மா இருவருமே சமையல் வேலையில் ஈடுபட்டு வந்தாங்க. பெரிய அளவில் இல்லை என்றாலும், ஊரில் நடைபெறும் சின்னச் சின்ன விழாக்களுக்கு சமைத்துக் கொண்டு போய் கொடுப்பாங்க. சில சமயம் அங்கேயே போய் சமைச்சிட்டு வருவாங்க. சின்ன வயசில் இருந்தே தாளிப்பு மற்றும் மசாலா வாசனைக்கு பழகி இருந்தாலும், நான் அந்த நேரத்தில் சமையலில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. எம்.பி.ஏ மற்றும் எச்.ஆர் துறை சார்ந்து படிச்சேன். அதன் பிறகு எனக்கு ஜோதிடம் மேல் அதிக ஈடுபாடு இருந்தது. அது குறித்தும் நிறைய படிச்சு தெரிந்து கொண்டேன். அதற்கான ஆய்வில் இன்றும் ஈடுபட்டு வருகிறேன்’’ என்றவர் சமையல் துறையினை கோவிட் நேரத்தில்தான் தேர்வு செய்துள்ளார்.

‘‘கோவிட் போது ஊரடங்கு போட்டதால், யாரும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அதனால் வெளியூரில் இருந்து இங்கு ஓசூரில் தங்கி வேலை பார்த்து வருபவர்கள் எல்லோருமே வீட்டில் லாக்காயிட்டாங்க. உணவகங்களும் மூடியாச்சு. மேலும் இங்கு வேலை பார்ப்பவர்கள் அனைவரும் ஐ.டி துறை என்பதால், பெரிய அளவில் சமையல் எல்லாம் செய்ய மாட்டாங்க. மூணு நேரமும் ஓட்டல் சாப்பாடுதான்.

அதற்கும் வழி இல்லாமல் போனது. அந்த சமயத்தில்தான் நான் எங்க பக்கத்து வீட்டில் வசிக்கும் பேச்சிலர் பசங்க மேல பரிதாபப்பட்டு அவங்களுக்கும் அன்று சேர்த்து சமைத்துக் கொடுத்தேன். இவ்வளவு காலம் ஓட்டல் சாப்பாட்டினை சாப்பிட்டவர்களுக்கு வீட்டுச் சாப்பாடு அமிர்தமாக இருந்தது. அந்த சாப்பாடு தினமும் கிடைச்சா சந்தோஷமா தானே இருக்கும். அப்படித்தான் அவங்க என்னிடம், அவர்களுக்கு தினமும் சமைத்து தரும்படி கேட்டாங்க.

மேலும் அதற்கான ஒரு தொகையும் அளிப்பதாக சொன்னாங்க. பத்து பேருக்கு செய்யும் போது கூடவே நாலு பேருக்கு சேர்த்து செய்யப் போறோம். நான்கு ஏழாச்சு அப்புறம் பத்தாச்சு. பிறகு 15 பேருக்கு சமைச்சு கொடுக்க ஆரம்பிச்சேன். எல்லோருக்கும் நானே போய் டெலிவரி செய்ய முடியாது என்பதால் என்னுடைய தொழிலை ஒரு உணவு நிறுவனமா பதிவு செய்தேன். அதன் பிறகு ஃபுட் டெலிவரி ஆப் மூலமாக சப்ளை செய்ய ஆரம்பிச்சேன்.

உணவகத்திற்கு TN37ன்னு பெயர் வைத்தேன். இது கோவையின் ஆர்டிஓ நம்பர். நம்ம ஊரின் அடையாளத்தினை இப்படி பதிவு செய்ய நினைச்சேன். வாடிக்கையாளர் அது என்ன TN37ன்னு பார்ப்பாங்க. கோவைன்னு தெரியும் போது இது கொங்கு உணவகம்னு அவங்க மனதில் பதியும். இப்போது உணவகம் மட்டுமில்லாமல் திருமணம், புதுமனை புகுவிழா, காதுகுத்து என எல்லா நிகழ்ச்சிக்கும் கேட்டரிங் செய்து வருகிறேன்’’ என்றவர், ஒரு திருமண நிகழ்ச்சிக்காக 7000 பேருக்கு கேட்டரிங் செய்துள்ளார்.

‘‘சமையல், பெண்கள் சாதாரணமா வீட்டில் செய்யக்கூடிய விஷயம். அப்படி செய்யும் உணவினை பக்கத்து வீட்டிற்கு கொடுத்து சந்தோஷப்படுவோம். இது பெண்களின் குணம். அப்படித்தான் நான் இதை ஆரம்பிச்சேன். நம்முடைய பழக்கவழக்கத்தில் ஏற்பட்ட அந்த சின்ன விஷயத்தைதான் நான் இப்ப பெரிய அளவில் சக்சஸ்ஃபுல்லா கொண்டு வந்திருக்கேன். நான் இல்லத்தரசியாதான் இந்த தொழிலை ஆரம்பிச்சேன். திறமையும் உழைப்பும் இருந்தா போதும். பெரிய அளவில் முதலீடும் அவசியமில்லை. நம்முடைய சக்திக்கு இருக்கும் பணத்தை முதலீடா வச்சா போதும். அதைக் கொண்டே நம்மால் சம்பாதிக்க முடியும். நான் ஆரம்பித்த போது கூட பெரிய அளவில் எல்லாம் முதலீடு போடவில்லை. நான்கு பேருக்கு சமையலுக்கு தேவையான பொருள் தான் என்னுடைய முதலீடாக இருந்தது. அதைக் கொண்டுதான் நான் எனக்கான ஒரு பிராண்டினை உருவாக்கினேன்.

என்னுடைய உணவகத்தில் அனைத்து உணவுமே கொங்கு மண்டலம் சார்ந்த உணவு. இங்குள்ள உணவுக்கு தனிப்பட்ட சுவையுண்டு. கோவையில் சிறுவாணி தண்ணீர் என்பதால், கொங்கு மண்டலம் முழுக்க அந்த தண்ணீரில் விளையும் உணவுப் பொருட்களின் சுவை தனிப்பட்டு இருக்கும். சொல்லப்போனால் அந்த தண்ணீரில் விளையும் மசாலாப் பொருட்களைதான் நான் என்னுடைய உணவகத்தில் பயன்படுத்தி வருகிறேன். இதற்காக பழனி, கொடைக்கானல், ஊட்டி போன்ற பகுதியில் விளையும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற அனைத்து மசாலாப் பொருட்களையும் இங்கு வரவழைத்து அதை கொண்டுதான் உணவிற்கான மசாலாவினை தயாரிக்கிறோம்.

மேலும் எங்களின் உணவகத்தில் பாரம்பரிய கொங்கு மண்டல உணவுகள்தான் கிடைக்கும். சைனீஸ் உணவுகளை நாங்க கொடுப்பதில்லை. பரோட்டாவும் கிடையாது. வாடிக்கையாளர் விரும்பினால், கோதுமை மாவினைக் கொண்டுதான் பரோட்டா தயாரிப்போம். இங்கு சாப்பாடு, கறி குழம்பு, மீன் குழம்பு, கொங்கு சிக்கன் கிரேவி, முழு சாப்பாடு போன்ற உணவுகள் கிடைக்கும். சிறுதானியம் கொண்டு சில உணவுகளை கொடுக்கிறோம். மேலும் இது சிறுதானிய உணவகம் இல்லை என்பதால், அந்த உணவுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிப்பதில்லை. அதேபோல் காலை நடைப்பயிற்சி சென்று வருபவர்களுக்கு ஆரோக்கியமான வாழைத்தண்டு சூப் கொடுக்கிறோம். அதற்காகவே பலர் உணவகத்திற்கு வருவாங்க’’ என்றவர் பல தடைகளை தாண்டித்தான் தன்னுடைய ெதாழிலை சக்சஸ்ஃபுல்லா நடத்தி வருகிறார்.

‘‘எந்த ஒரு தொழில் செய்தாலும் அதில் சின்ன சறுக்கல் இருக்கும். அதை எல்லாம் தாண்டி வந்தால்தான் சக்சஸை சுவைக்க முடியும். தொழில் என்று வந்துவிட்டால் எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்ய முடியாது. ரொம்பவே கவனமா இருக்கணும். அப்படி கவனமா இருந்தும் பிரச்னைகள் ஏற்படும். அதை சமாளிக்க தெரியணும். ஒரு கிரஹப்பிரவேச ஆர்டர். என்னுடைய செஃப், ஊரில் தன் பெண்ணுடைய வாழ்க்கையில் பிரச்னை என்று சொல்லிவிட்டு கிளம்பினார். நிகழ்ச்சியின் போது கண்டிப்பா வந்துவிடுவதாக கூறினார். விடிந்தால் ஆர்டர் கொடுத்தவங்களுக்கு உணவு கொடுக்கணும். காலை வருவதாக சொன்னவர் வரவில்லை.

போன் செய்தாலும் எடுக்கவில்லை. காலை டிஃபன் 350 பேருக்கு கொடுக்கணும். அவ்வளவு தூரம் நம்பினேன், ஆனால் ஏமாத்திட்டார். அவரை போல் நான் என்னுடைய வாடிக்கையாளரை ஏமாத்த முடியாது. அவர்கள் வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி நடக்கும் போது, அபசகுனமா உணவு இல்லை என்றால், அது அவர்களின் மொத்த சந்தோஷத்தை பாதிக்கும். வாங்கிய காசை திருப்பி கொடுக்கலாம். ஆனால் எங்களால் ஏற்பட்ட மன வருத்தத்தை சரி செய்ய முடியாது.

அதனால் நானே சமைக்க முடிவு செய்தேன். அவர்கள் கொடுத்த மெனுவில் உள்ள உணவுகளை ஒவ்வொன்றாக தயார் செய்தேன். காலை ஏழரை மணிக்கு எல்லாம் காலை சிற்றுண்டி தயார் செய்து கொடுத்து அனுப்பினேன். அதன் பிறகு மதிய சாப்பாடும் தயார் செய்து அனுப்பினேன். இரண்டு நாளாக சரியாக தூக்கம் இல்லை. காலை முதல் மதியம் வரை கொஞ்ச நேரம் கூட ஓய்வு இல்லாமல் வேலை பார்த்தது, என் உடல் நிலையை பாதித்தது. ஆனால் அவை எல்லாம் என்னுடைய உணவினை சாப்பிட்டு சூப்பராக இருக்குன்னு சொன்னதும் மாயமாய் மறைந்து போனது. இந்த சம்பவம் எனக்கு ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தது. அன்று முதல் செஃப் இருந்தாலும், நானும் அவர்களுடன் சேர்ந்து வேலைகளை பார்க்க ஆரம்பித்ேதன்.

ஒரு தொழில் செய்யும் போது அதில் நம்பிக்கை அவசியம். ஒரு முறை நான் பெரிய அம்மையால் பாதிக்கப்பட்டு இருந்தேன். அம்மை முத்து நீங்கியிருந்தாலும், உடம்பில் வலி இருந்தது. ஏற்கனவே ஒரு ஆர்டருக்கு அட்வான்ஸ் வாங்கி இருந்தேன். எதிர்பாராதவிதத்தில் அம்மை போட்டதால், என்னால் செய்ய முடியாதுன்னு அட்வான்சை திருப்பி கொடுத்திடலாம்னுதான் அவங்களுக்கு ஃபோன் செய்தேன். ஆனால் அவங்க முதலில் சொன்ன விஷயம். எங்க எல்லாருக்கும் உங்க மெனு பிடிச்சிருக்கு. அதை நீங்க செய்து கொடுத்தா சந்தோஷமா இருக்கும்னு சொன்னாங்க. என்னால் அதற்கு மேல் அவர்களிடம் பேச முடியல.

மாத்திரை போட்டுக் கொண்டு, சமைக்க ஆரம்பிச்சேன். அம்மைப் போட்டு இருந்தா சூடான பகுதியில் இருக்கக் கூடாதுன்னு சொல்வாங்க. சூட்டிற்கு  உடம்பெல்லாம் எரியும். உணவினை தாளித்துவிட்டு ஃபேனில் முகத்தை காண்பித்துக் கொள்வேன். இப்படித்தான் சமைத்து முடித்தேன். உணவுத்துறையை பொறுத்தவரை நல்ல பெயர் எடுக்கணும். நம்முடைய உணவு சரியில்லைன்னு அவப்பெயர் வந்துட்டா... அதை சரி செய்வது ரொம்ப கடினம்.

அதே சமயம் நம்முடைய தரம் மற்றும் சுவை மாறாமல் கொடுக்கணும். வாங்கும் காசுக்கு தரமான உணவு கொடுத்தால், அனைவருக்கும் சந்தோஷம் தானே. அதைத்தான் நான் செய்கிறேன். என் மகளுக்கு இப்ப ஏழு வயசு. அவள் சின்ன வயசில் இருந்து மூன்று வேளை உணவு இங்கு தான் சாப்பிடுவா. தன் குழந்தை ஆரோக்கியமா சாப்பிட வேண்டும்னு தான் எல்லா அம்மாக்களும் விரும்புவாங்க. நான் என் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க விரும்பினேன், கொடுத்தும் வருகிறேன்.

தற்போது ஊட்டி வெலிங்டன் ராணுவ கேம்பில் உள்ளவர்களுக்கு உணவு அளிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் தற்போது ஊட்டிக்கு சென்றாலும் ஓசூரில் எப்போதும் போல் உணவகம் செயல்படும். அவ்வப்போது இங்கு வந்து பார்த்துக் கொள்வேன். மேலும் இரண்டு கிளைகள் திறக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறேன். அதனை தொடர்ந்து உணவு மட்டுமில்லாமல், மசாலா மற்றும் பொடி வகைகளும் தயார் செய்து விற்பனை செய்யும் எண்ணம் உள்ளது. சமையல் முழுதும் என்னுடைய கன்ட்ரோல் என்றால் இதன் மார்க்ெகட்டிங் மற்றும் நிர்வாகப் பொறுப்பினை என் கணவர் பார்த்துக்கொள்கிறார்’’ என்றார் கல்கி.

தொகுப்பு : ஷம்ரிதி

Related Stories: