பகுதிநேர ஆசிரியர்கள் போலி சான்றிதழ் வழங்கியிருந்தால் கடும் நடவடிக்கை

சத்தியமங்கலம், நவ.2. பகுதி நேர ஆசிரியர்கள் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கரவாகனம் வழங்கும் விழா நேற்று நடந்தது. அமைச்சர் செங்கோட்டையன் 116 பெண்களுக்கு இருசக்கர வாகன மானியத்திற்கான உத்தரவை வழங்கினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாணவ மாணவிகளின் தற்கொலை முயற்சியை தவிர்க்க தனியாருடன் இணைந்து அவர்களுக்கு கவுன்சலிங் அளிக்கப்படும். இதற்கான பணி அடுத்த வாரம் தொடங்கப்படும். பகுதி நேர ஆசிரியர்கள் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டிஆர்பி, டெட் தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வகையில் வரும் மாதம் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்.

அங்கன்வாடியில் சேர்ந்துள்ள குழந்தைகளுக்கு மழலையர் பள்ளி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 52,414 ஆசிரியர்களை பயன்படுத்தி வரும் ஜனவரி 1ம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும். சிறந்த ஐஏஎஸ் பயிற்சியாளர்களை தேர்வு செய்து சென்னையில் அமைக்கப்பட உள்ள புதிய ஸ்டுடியோவிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் 32 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு ஐஏஎஸ் பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.  பவானி ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களுக்கு குள்ளங்கரடு பகுதியில் 450 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்து வீடுகள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டவுடன் ஆற்றங்கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: