நன்றி குங்குமம் தோழி
இந்தியாவில்
மருத்துவ துறை பல மடங்கு முன்னேறி இருந்தாலும் இன்றும் சில பிரிவுகளைப்
பற்றி நாம் அறிந்து கொள்ளாமலும், அதைப் பற்றி பொதுவெளியில் பேசுவதற்கு
தயக்கப்படுகிறோம். எல்லாரும் பேச தயங்கும் ஒரே விஷயம் பாலியல் குறித்த
விஷயங்கள். ஒரு உறவினை பலப்படுத்தவும் சுக்கு நூறாக உடைக்கவும் இது மிகப்
பெரிய பாலமாக அமைகிறது. அதனை எவ்வாறு மெருகேற்றி நம் வாழ்க்கையை சந்தோஷமாக
அமைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்
செக்ஸ்வல் ஹெல்த் நிபுணர் டாக்டர் நிவேதிதா மனோகரன்.
‘‘எங்களுடையது
மருத்துவ குடும்பம். எங்க வீட்டில் பெரும்பாலானவர்கள் அறுவை சிகிச்சை
நிபுணர்கள். அதனால் நானும் மருத்துவ துறையினை தேர்வு செய்தேன். என் அப்பா
பிளாஸ்டிக் சர்ஜன். அதனால் நானும் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும்
என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். எனக்கு சருமம் மற்றும் காஸ்மெட்டாலஜி
குறித்த ஆர்வம் இருந்ததால் காஸ்மெடிக் டெர்மட்டாலஜியை தேர்வு செய்தேன்’’
என்றவர் வெனிரியாலஜி குறித்தும் சிகிச்சை அளித்து வருகிறார். ‘‘வெனிரியாலஜி
என்பது பாலியல் ரீதியான பிரச்னையால் ஏற்படும் பிரச்சனை குறித்து ஆலோசனை
அளிப்பது. ஆனால் இந்த பிரச்னை குறித்து பலர் பேச தயங்குவதால், அந்த துறையை
சார்ந்த தவறான கருத்துக்களை உடைக்க நினைச்சேன். சருமம் சார்ந்து நான்
படிச்சிருந்தாலும், அதில் வெனிரியாலஜி குறித்து ஸ்பெஷலைஸ் செய்திருக்கேன்.
தற்போது ஆஸ்திரேலியாவில் பாலியல் நல மருத்துவராக பணியாற்றிக்
கொண்டிருக்கிறேன்’’ என்றவர் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி
வருகிறார்.இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில், பாலியல்
ஆரோக்கியம் சார்ந்து பேசுவது ெவட்கப்படுகிற விசயமாக இருக்கிறது. அதற்கான
நிபுணர்களான நாங்களே விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்றால் பொதுமக்களுக்கு
எப்படி பால்வினை நோய்களான எச்.ஐ.வி மற்றும் அதைச் சார்ந்து நடைபெறும்
பாலியல் வன்முறை குறித்து தெரியவரும். அது குறித்து பேசவில்லை என்றால்,
பாதுகாப்பான சூழ்நிலைகளை நம்மால் ஏற்படுத்தவும் முடியாது என்பது என்னுடைய
கருத்து. ஆஸ்திரேலியாவில் இன்றைய தலைமுறையினருக்கு இதுகுறித்து
கவுன்சலிங் கொடுத்து வருகிறேன். தமிழகத்தில் செய்ய முடியவில்லை என்பதுதான்
எனக்கு வருத்தம். அதனைப் போக்க சமூக வலைத்தளம் மூலம் உலகம் முழுதும் ஆலோசனை
வழங்கி வருகிறேன். பெண்கள் ஆரோக்கியம், பாலியல் ஆலோசனைகள் மற்றும் பல
ஆரோக்கியம் தொடர்பான கவுன்சலிங்கை கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.இன்றைய
இளம் தலைமுறையினர் பெரும்பாலும் தங்களுடைய நேரத்தை சமூக வலைத்தளங்களில்
செலவிடுவதால், பாலியல் தொடர்பான செய்திகளை, அவர்களுக்குத் தயக்கம்
ஏற்படாதவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். சமூகவலைத்தளங்களில் பலர்
அறிவுரைகளை கொடுத்து வருகிறார்கள். உடலுறவு குறித்தும் அட்வைஸ் செய்றாங்க.
ஆனால் அவர்கள் அங்கீகாரம் பெற்றவர்களா என்று பார்த்த பிறகு அவர்களிடம்
ஆலோசனை பெறலாம்’’ என்றவர் உறவுகளை பலப்படுத்துவது குறித்து விவரித்தார்.முன்பெல்லாம்
பெற்றோர் பார்த்து அல்லது காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால்,
இப்போது திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழும் ‘லிவ்விங்’ என்ற மேலைநாட்டு
பழக்கவழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்னர்
பெற்றோர்கள் பார்த்து வைத்த கல்யாணத்தில் தாம்பத்திய உறவில் திருப்தி
அளிக்காத பட்சத்தில் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டனர். இரண்டு
மனைவி என்பது நம் முன்னோர்களின் வரலாற்றிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்’’
என்றவர் தாம்பத்திய உறவில் உள்ளவர்கள் என்ன பாதுகாப்பினை கடைப்பிடிக்க
வேண்டும் என்பதைப் பற்றி விவரித்தார்.‘‘ஒரு மருத்துவராக என்னுடைய
அனுபவத்தில் இன்றைய காலத்தில் திருமணமாகாத இளைஞர்களே பாலியல் மற்றும்
பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகளை பெற வருகிறார்கள். திருமணமாகாமலே இளம்
வயதினர் தாம்பத்திய தொடர்பில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வாழ்க்கையைதான்
நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். திருமணமாகாமல், குடும்பப்பொறுப்பில்
இணையாமல், வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ளாத
நிலையில் ஒருவருடன் தாம்பத்திய உறவிற்காகவே லிவ்விங் முறையில் சேர்ந்து
வாழுதலை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ஒரு இளம் பெண்,
திருமணத்துக்கு முன்னரோ அதன் பிறகோ கரு உண்டாவதைத் தவிர்க்க வேண்டிய
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்கும் போது அந்த பெண்ணை தவறான
பார்வையில் பார்த்து வந்தனர். ஆனால், இப்போது இதுகுறித்து குடும்பத்தினர்,
நண்பர்கள், சொந்தபந்தங்கள், ஏன் அரசு கூட தேவையற்ற கரு உண்டாவதைத்
தவிர்ப்பதற்கான விழிப்புணர்வையும், ஆலோசனை சிகிச்சையையும் வெளிப்படையாக
கொடுத்து வருகிறது. புகுந்த வீட்டில் பிரச்னை, வரதட்சணை கொடுமை,
ஏமாற்றம் என திருமண வாழ்வில் எந்தவொரு பிரச்னை ஏற்பட்டாலும்
குழந்தைகளுக்காக, பெற்றோருக்காக அனைத்தையும் சகித்துக்கொண்டு,
விட்டுக்கொடுத்து வாழ்வது தான் எதிர்காலத்துக்கான பாதை என்று நம்
முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த விஷயம். இதில் முக்கியமாக தாம்பத்திய உறவில்
விரிசல் ஏற்பட்டாலும் கணவன்-மனைவி உறவினை துண்டித்தது இல்லை. ஆனால், இன்றைய
காலத்தில் இதைக் காரணமாகக் கொண்டே பல விவாகரத்துகள் நிகழ்ந்து வருகின்றன.
அதையும் இந்த சமூகமும், அரசும் ஏற்றுக்கொள்கிறது. ெபாது வெளியில்
பேச தயங்கும் தாம்பத்தியம் தொடர்பான வாழ்வியல் முடிவுகளை எடுப்பதற்கு
உதவிகளை பலர் தேடுகிறார்கள். அவர்களுக்கான ஆலோசனையை கொடுத்து வருகிறேன்.
மனித வாழ்வின் முக்கிய தருணத்தில் ஏற்படும் எண்ணத்தடையை இதன் மூலம்
சரிசெய்ய முடியும். அதை நான் அளிக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது’’
என்றவர் கடந்த 11 ஆண்டுகளாக இந்த துறையில் தம்பதியினருக்கு ஆலோசனை அளித்து
வருகிறார்.
தொகுப்பு : தி.ஜெனிஃபா