நன்றி குங்குமம் தோழி
அபி நட்சத்திரா ஓப்பன் டாக்
கதாசிரியர் கதையெழுதி, ஒரு இயக்குநர் அதை படமாக்கும்போது, கதைக்கு உயிர் கொடுக்கும் கதாபாத்திரங்கள் ரொம்பவே முக்கியம். சரியான முறையில் அதை உள்வாங்கி நடிக்கவில்லையெனில் மொத்த படமும் டோட்டல் டேமேஜ். சரி. மேட்டருக்கு வருவோம். ‘அயலி’ தொடரில் கல்வி கற்கப் போராடும் சிறுமியாக, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அபி நட்சத்திரா. திரைப்படங்களிலும் நடித்த நிலையில், ‘அயலி’ வெப் தொடரில் நடித்தது குறித்து நம்மிடம் மனம் திறந்தார். அவரின் நேர்காணலில்…
உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்…என் பெயர் அபி நட்சத்திரா. தனியார் இஞ்சினியரிங் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு மாணவி. எனக்கு ஒரு தம்பி. 8ம் வகுப்பு படித்து வருகிறார். “சூரரைப் போற்று” படத்தில் சூர்யாவின் சின்ன வயது கேரக்டரில் நடித்தது அவனேதான். அதேபோல் “பவர் பாண்டி” படத்திலும் மடோனா மேடத்தின் தம்பியாக நடித்தான். எனது தம்பியும் என்னைப்போலவே குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வருகிறான்.நானும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பயணிக்கிறேன். சிவகார்த்திகேயன் சாருடன் நடித்த “ரஜினி முருகன்” என் முதல் படம். அதைத் தொடர்ந்து “தர்மதுரை”, “மூக்குத்தி அம்மன்”, “நெஞ்சுக்கு நீதி”, “நவரசா” வெப்சீரிஸ் போன்றவற்றிலும் நடித்திருக்கிறேன்.
தம்பியும் நீங்களும் திரைத்துறைக்குள் எப்படி?என் அப்பா திருமணத்திற்கு முன்பு நடிகர் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் சாரிடம் கோ-டைரக்டராக பணியாற்றியவர். ஐந்து முதல் ஆறு படங்கள் வரை அவரோடு இணைந்து பணியாற்றியிருக்கிறார். என் அம்மா, அப்பாவின் திருமணத்திற்குப் பிறகு, திரைத் துறையிலிருந்து விலகி தொழில் செய்ய இறங்கிவிட்டார்.நான் சின்ன வயதில் இருந்தே நிறைய டான்ஸ் பண்ணுவேன். க்ளாசிக்கல், வெஸ்டர்ன், போக் என எல்லாமும் எனக்குத் தெரியும். நடனப் போட்டிகள், அது சார்ந்த நிகழ்ச்சிகள் என்று தொடர்ந்து கலந்துகொள்வேன். இதன் வழியே விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு முதலில் வந்தது. நடிப்பிலும் எனக்கு ஆர்வமிருந்தது. படிப்பிலும் நான் கெட்டி. எனவே படிப்போடு நடிப்பையும் ஃபேஷனாக மாற்றினேன்.
அயலி வாய்ப்பு குறித்து...மூக்குத்தி அம்மன் படத்தின் கோ-டைரக்டர் ஆன்ட்ரூஸ் அங்கிள் என்னை இந்தப் படத்திற்காக பரிந்துரைத்தார். ஆடிசனுக்கு வரவழைத்து ஒரு சின்ன சீனைக் கொடுத்து நடிக்கச் சொன்னார்கள். அப்பவே நான் ஓ.கே. என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் இவ்வளவு பெரிய வாய்ப்பை இயக்குநர் முத்து அங்கிள் எனக்கு கொடுப்பார் என நான் கொஞ்சமும் யோசிக்கவில்லை.பிறகு ஃபோட்டோ செஷன் செய்ய சென்றபோது அயலியின் முழுக் கதையையும் இயக்குநர் சொன்னபோதே என்னோட தமிழ் செல்வி கேரக்டர் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. படப்பிடிப்பு முழுக்க முழுக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமம் சார்ந்து எடுத்தாங்க. கிராமத்து வாழ்க்கை எனக்கும் கொஞ்சம் தெரியும். தாத்தா ஊருக்கெல்லாம் போயிருக்கேன். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேன் என்றுதான் சொல்லுவேன்.
அயலி சீரிஸ் வெற்றி குறித்து...அயலி பார்த்துவிட்டு, இயக்குநர் பாக்யராஜ் சார் என்னை அழைத்து ரொம்பவே வாழ்த்தினார். ‘அறம்’ படத்தின் இயக்குநர் கோபிநயினார் சார் என்னை பாராட்டினார். நிறைய பிரபலங்கள் சீரிஸ் பார்த்துவிட்டு தொடர்ந்து வாழ்த்தவும் பாராட்டவும் செய்யுறாங்க. “அயலி”யில் நல்ல கன்டென்ட் இருக்கென ஏற்கனவே எனக்குத் தெரியும். ஆனால் மக்கள் இவ்வளவு கொண்டாடுவார்கள் என்பதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அயலி குறித்து நிறையவே பேசுறாங்க. சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து எழுதுறாங்க. கனடா, லண்டன், அமெரிக்கான்னு வெளிநாடுகளில் இருந்தெல்லாம் அழைப்புகள், குறுஞ்செய்திகள் வருது. நிறையவே நல்ல கமெண்ட்ஸ் போடுறாங்க. அயலி பார்த்துவிட்டு, நிறைய வீடுகளில் ஆண் குழந்தைகள், பெண்களுக்கு இவ்வளவு பிரச்சனைகள் இருக்கா என்று வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வதாக அம்மாக்கள் கமென்ட் செய்வதை படிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கு.
பெண் கல்வியை வலியுறுத்தும் இந்தக் கதை களத்தை எப்படி உள்வாங்குனீங்க? இந்தப் பிரச்சனையெல்லாம் இப்ப இல்லையென சிலர் எழுதுவதைப் படிக்கும்போது சிரிப்பு வருது. பெண் குழந்தைகள் கல்வி கற்க வருவது அவ்வளவு சுலபம் இல்லாத நிலைதான் இப்பவும் பல இடங்களில் நீடிக்கிறது. என் உறவினரில், என் வயது பெண் ஒருவருக்குத் திருமணம் நடந்திருக்கு. அடுத்து அந்த பெண்ணின் தங்கைக்கும் திருமணம் முடிவு செய்திருக்காங்க. சென்னையிலும் இந்த மாதிரியான நிகழ்வுகள் கடைநிலையில் வாழும் மக்களிடத்தில் நடந்து கொண்டுதான் இருக்கு. அயலி சீரிஸில் என்னுடன் நடித்தவர் என் வயது பெண்தான். ஆனால் திருமணம் ஆனவர். அவர் இடத்தில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்பதே இந்தத் தொடர்.
உதிரப்போக்கு வெளியாகும் குறிப்பிட்ட காட்சியில் நடிக்க சங்கடம் இருந்ததா?பெண்களுக்கு மாதத்தின் மூன்று நாள் வெளிப்படக்கூடிய உதிரப்போக்கை எஜுகேட் செய்வது மாதிரிதான் நான் அதை எடுத்துக்கொண்டேன். அதற்கான வாய்ப்பாகவே பார்த்தேன். எனக்கு அந்த காட்சியில் நடிக்க எந்த தயக்கமும் சுத்தமாக இல்லை. காரணம், அயலி டீம் கொடுத்த கம்ஃபெர்ட் ஜோன். அந்த அளவு ஜாலியாக எல்லாத்தையும் கொண்டு போனாங்க. இயக்குநரும், டீமும் கொடுத்த சுதந்திரம், இந்த காட்சியில் நடிப்பதில் எனக்கு எந்தத் தயக்கத்தையும் கொடுக்கவில்லை.
உடையில் கரை பட்ட காட்சிகளில் யதார்த்தம் கலந்து போல்டாக நடித்திருந்தீர்களே?விளம்பரத்தில் மட்டும்தான் “கரை நல்லது” எனச் சிரித்தவர், பெண்கள் படும் அவஸ்தையை வெளியில் தெரியப்படுத்த வேண்டும் என்பதே இயக்குநர் அங்கிளின் அழுத்தமான எண்ணம். ஒரு பெண்ணாக அந்த வலி எனக்கும் புரியும் என்பதால், அந்தக் காட்சியை மிக இயல்பாக என்னால் செய்ய முடிந்தது. உடையில் கரை பட்டால் எந்த வேலையும் செய்ய நமக்கு ஓடாது இல்லையா? அதை மனதில் இறுத்தி, கால் வழியாக ரத்தம் வடிந்த காட்சிகளை போல்டாக, வெளிப்படையாக ஃபேஸ் பண்ணினேன். என் பெற்றோருக்கும் இந்தக் காட்சியில் நான் நடித்ததில் எந்த சங்கடமும் இல்லை. அவர்களின் ஒத்துழைப்பும் சப்போர்ட்டும் எனக்கு பக்கபலமாக இருந்தது.
அயலி நடிப்பு இயக்குநர் சொல்லி நீங்கள் செய்ததா?இந்த சீரிஸில் நடித்தது புது அனுபவம் கொடுத்தது. எந்த காட்சியையும் இப்படி நடியென இயக்குநர் அங்கிள் என்னை ஃபோர்ஸ் பண்ணவே இல்லை. அவர் சீன் பேப்பரையே என்னிடத்தில் கொடுக்கவில்லை. டயலாக்ஸை நான் மக்கப்பும் அடிக்கவில்லை. கன்டென்ட் இதுதான். இதில் இந்த டயலாக் மெயின் அப்படீன்னு சொல்லிட்டு ஓகே டேக் போகலாம்னு அங்கிள் டக்குன்னு சொல்லுவாறு... அவ்வளவுதான். நோ ஃப்ரீ பிரிப்பரேஷன், பிராக்டீஸ் எதுவுமே இருக்காது. அந்த சீரிஸ் முழுக்கவே நான் நடித்ததுதான் சீன். கேமராமேன் ராம்ஜி அங்கிள் மட்டும் எனக்கு நடிப்பில் நிறைய ஐடியா கொடுத்தார்.“ஆட்டுக் குட்டியை துரத்தும்” குறிப்பிட்ட காட்சியில், ஆட்டுக் குட்டியை பிடின்னுதான் அங்கிளும், கேமராமேன் அங்கிளும் சொன்னாங்க. பிடிக்க நான் தொரத்தினேன். அதை அப்படியே எடுத்தாங்க. கடைசி வரை அந்த ஆடு சிக்கலயே (சிரிக்கிறார்). எந்தவொரு சீனுக்கும் பெரிய பிராக்டீஸ், ரொம்ப பிரஷரைஸ்னு செய்து இயக்குநர் அங்கிள் எடுக்கவே இல்லை. எல்லாமே இயல்பாகத்தான் இருந்தது. என்னோட பெஸ்டை கொடுக்கணும்னு மட்டுமே நான் நினைச்சேன். அவ்வளவுதான். என் நடிப்பை செட்டில் நிறையவே பாராட்டுனாங்க. சீன் எல்லாத்தையும் செட்டில் ஃபன்னா ஜாலியா கொண்டு போனாங்க.
உடன் நடித்தவர்கள் குறித்து…?அனிமோல் ஆன்ட்டி மலையாளி. மொழி பிரச்சனை இருக்குமேன்னு முதலில் ரொம்ப யோசித்தேன். அம்மா-மகளாக அவரோடு எப்படி கனெக்ட் ஆகப் போறோம் என்கிற சிந்தனை இருந்தது. முதல் நாளில் இருந்தே அவர் என்னோடு தமிழில் பேச முயற்சித்துக்கொண்டே இருந்தார். நிறைய தமிழ் வார்த்தைகளை நானும் அவருக்கு தொடர்ந்து சொல்லிக் கொடுத்தேன். இரண்டு நாளில் அவரோடு எனக்கு நல்ல பாண்டிங் வொர்க்அவுட் ஆச்சு. ஸ்பாட்டுக்குள் நுழையும்போதே ஹாய்ம்மா.. ஹாய்டான்னு சொல்லிக்கிட்டேதான் நுழைவோம். அம்மா, பொண்ணாகவே வாழ்ந்தோம். நடிப்பைக் கொண்டுவர அது எங்களுக்கு ரொம்ப ஈஸியாக இருந்தது.மதன் அங்கிள் குறித்து சொல்லவே வேண்டாம். அவர் ஸ்பாட்டுக்கள் நுழைந்தாலே ஃபயர். கலகலன்னு இருக்கும். எல்லோரிடமும் செமையா ஜாலியாகப் பேசுவாறு. எப்பவும் ஆக்டிவ்வாக இருப்பாரு. அவர் செட்டில் இருந்தால் டீமே ஆக்டிவாயிடும். என்னோடு நடித்த மற்ற கோ ஆர்டிஸ்ட் மைதிலி, லவ்லின் அக்கா எல்லோருமே ரொம்ப சூப்பரா பண்ணியிருந்தாங்க. என்னோட ஃப்ரெண்ட்ஸ்ஸாக நடித்த இருவரும் இப்பவும் என்னோடு நல்ல நட்பில் தொடர்பில் இருக்காங்க.
அயலியில் உங்கள் நடிப்பு குறித்து...அயலி கதைக்கும் எனக்கு நிறையவே கனெக்ட் இருக்கு. என் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களுக்கு பக்கத்தில் இந்தக் கதை இருக்கு. என் ஃப்ரெண்ட்ஸ், ஆசிரியர் எல்லாம் என் நடிப்பைப் பார்த்து ரொம்பவே ஷாக் ஆனாங்க. பாராட்டுனாங்க. நீ ரொம்ப காம் டைப்... இந்த அளவு போல்டா நடிச்சுருக்கியேன்னாங்க.உண்மையிலே எனக்கும் டாக்டர் படிக்கும் ஆசை இருந்தது. அதற்காகவே +2வில் பயோ மேக்ஸ் எடுத்து படித்தேன். ஆனால் குடும்பச் சூழ்நிலையால் தவிர்க்க வேண்டிய நிலை. அயலி படத்தில் பல சீன்களில் வரும் வசனங்களை எனக்காகவே இயக்குநர் அங்கிள் எழுதிய மாதிரியாக ஃபீல் பண்ணினேன்.“வேலை வெட்டி இல்லாதவன்தான் அடுத்தவன் முதுக எட்டி எட்டிப் பார்ப்பான். முதுக்குப் பின்னாடியே பார்த்துக்கிட்டு இருந்தால் முன்னாடி போக முடியாது” இதெல்லாம் என் லைஃப்ல நடந்த விஷயத்திற்கு ரொம்பவே நெருக்கத்தில் இருந்தது. “மேடையில பேசக் கிடைக்கிற வாய்ப்பா பயன்படுத்திக்கிறனும். மேடையில பேசுனா எல்லோருக்கும் கேட்கும்” என்ற டயலாக்கை பேசும்போது என்னோட பத்தாண்டு ஆரம்பகட்ட வாழ்க்கை என் கண் முன்னாடி அப்படியே வந்துட்டு போனது. “பொண்ணுங்களுக்கு உடம்புதான் உலகமா? அதைத்தாண்டி வேற எதையுமே யோசிக்கக்கூடாதா?” “எந்த சாமியும் நம்மல படிக்கக்கூடாதுன்னெல்லாம் சொல்லாது. நம்மள காப்பாத்ததான சாமி இருக்கு.” “எனக்கு எது தேவையோ அதுதான் அழகு” என்கிற அழுத்தமான வசனங்கள் எனக்கு ரொம்பவே பிடித்தது.
உங்களின் அடுத்த படங்கள் குறித்து...அடுத்து தொடர்ச்சியாக இரண்டு புராஜெக்ட்ல நான் நடிச்சுக்கிட்டு இருக்கேன். அதில் ஒன்று “நெஞ்சுக்கு நீதி” ஆனந்தி மாதிரியான யுனிக் ரோல். கே.எஸ். ரவிக்குமார் சார் புரொடக் ஷன்ல “ஹிட் லிஸ்ட்” என மூவி பண்றேன். அதைத் தொடர்ந்து, பாடகி ராஜலெட்சுமி “லைசென்ஸ்” என ஒரு மூவியில லீடிங் ரோல் பண்றாங்க. அவுங்க சைல்ட்ஹூட் கேரக்டரில் பதினேழு, பதினெட்டு வயதுப் பொண்ணாக நடிக்கிறேன் இதுவும் பெண் மைய சினிமாதான்.
இயக்குநர் முத்துக்குமார்பெண்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதையும், நவநாகரீக உடைகளில் வருவதையும் பார்த்து, பெண்கள் முன்னேறிவிட்டார்கள் என நினைப்போம். ஆனால் இப்போதும் குழந்தை திருமணங்கள் நடக்கின்றன என்று சொன்னால் நம்ப முடியாதுதானே? ஆனால் மறைவாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.ஆறு மாதத்திற்கு முன்பு வயதிற்கு வந்த ஒரு பெண்ணை உடனே திருமணம் செய்து வைத்த தகவலை என் நண்பன் என்னிடம் பதிவு செய்தபோது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்படியென்றால் திருமணத்திற்கான அளவுகோல் பெண் வயதிற்கு வருவதில்தான் இருக்கிறதா? யோசித்தபோது, தான் வயதிற்கு வந்ததை அந்த பெண் சொல்லவில்லையெனில் யாருக்கு இது வெளியில் தெரியும் என்கிற ஒன்லைன் சிந்தனையே அயலி. இதனை திரைக்குள் கொண்டுவர முடிவு செய்தபோது, எங்கள் பார்வை, எங்களின் அரசியல் நிலைப்பாடு இவற்றை ஓரம்கட்டி கதாபாத்திரம் வழியாக அளவோடு பேசினோம்.பகுத்தறிவு என்பது எல்லா குழந்தைக்குள்ளும் இருக்கும் இயல்பான சிந்தனை. இதற்குதான் கடவுள், பண்பாடு, கட்டுப்பாடு என பொது சமூகம் வலியுறுத்தி குழந்தைகளின் சிந்தனையை மழுங்கடிக்கிறது. இதனை இயல்பான, அடிப்படையான உணர்வாகக் காட்ட நினைத்தோம். நான் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் போன்றவர்களை வாசிப்பவன் என்கிற அடிப்படையில், இதற்குள் அவர்களை அடையாளப்படுத்த விரும்பவில்லை. அப்படி அவர்களையும் காட்டியிருந்தால் இது எங்கள் படைப்புக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்.
பெண் கல்வி...கல்விக்காக ஒற்றைக் குரலாய் ஒலித்த பாகிஸ்தான் நாட்டுச் சிறுமி மலாலாவின் வாழ்க்கையில் நடந்தவை அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், பெண் குழந்தைகள் கல்வி பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய “அயலி” வெப் சீரிஸ் சிறந்த விசமர்சனங்களோடு, இந்திய அளவிலும், ஜி5ல் ஓடிடி தளத்திலும் 2ம் இடம், மற்ற ஓடிடி தள வெப் சீரிஸ்களுடன் ஒப்பிட்டு 3ம் இடம் என தொடர்ந்து டாப் 5க்குள் இருக்கிறது.
தொகுப்பு : மகேஸ்வரி நாகராஜன்