இளம் பெண் குழந்தைகளின் மன அழுத்தம் ஆபத்தானதா?

நன்றி குங்குமம் தோழி

பெண்களைக் கொண்டாடுவது நம் சமூகத்தின் மரபு. ஆனால் இளம் பெண்களின் உணர்வுகளை சமூகத்திற்கு கையாளத் தெரிகிறதா? என்ற பெரும் கேள்வி நிரந்தரமாகவே நிலவுகிறது. அதற்கு தீர்வு காணவோ பெண் பிள்ளைகளின் உணர்வுகளை மதித்து நடக்கவோ பெரும்பாலும் யாரும் முயல்வதில்லை. வளர் பெண் குழந்தைகளின் உணர்வுகள் சமூகத்தின் பார்வைக்கு வருவதே இல்லை என்பதும் வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

மன அழுத்தம் காரணங்கள்

பொதுவாக பெண் குழந்தைகள் 12 வயது தொடங்குகையில் பீயுபெர்டி ( Puberty) என சொல்லப்படும்  பருவ மாற்றத்தை எட்டத் தொடங்குகிறார்கள். அதாவது, கருப்பை மாற்றம் மற்றும் வளர்ச்சி தொடங்குகிறது. அதன் விளைவாக பெண் குழந்தைகள் உடலில் ஹார்மோன்ஸ் மாறுபட்டு, மாதாந்திர உதிரப் போக்கு துவங்குவதை இந்த சமூகம் ஒரு விழாவாக கொண்டாடித் தீர்க்கிறது. அதன்பின் அப்பெண் குழந்தைகள் பற்றிய உணர்வு ரீதியான விஷயங்களை நினைக்கத் தவறுகிறது இந்த சமூகம். உண்மையில் பருவ மாறுபாட்டால் வளர் பெண் குழந்தைகளின் உடலியல் மாற்றத்தை போலவே மனதளவிலும் பெரும் அழுத்தத்தை சந்திக்கிறார்கள். ஆனால் அவர்களால் அதை வெளிக்காட்ட தெரிவதில்லை. பெற்றோர்களும் அதனை தெரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை என்பதே பெரும் வேதனை.

மன அழுத்தத்தின் விளைவுகள்

உடல் மாற்றத்திற்கும் மனதின் செயல்களுக்கும் இருக்கும்  தொடர்பை பலரும் புரிந்துகொள்வதே இல்லை. அதற்கான விழிப்புணர்வு விஷயங்களை பிள்ளைகளிடம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூட சொல்லித்தருவதில்லை. பொதுவாக பிள்ளைகள் படிக்க வேண்டும்... நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும்... ஒழுக்கமாக இருக்க வேண்டும்... இது ஒன்றே குறிக்கோளாக கருதி அவர்கள் உணர்வு யாதென அறிய அவர்களிடம் ஒரு கேள்வியைக்கூட எழுப்புவதில்லை.

உண்மையில் பெண் குழந்தைகள் இந்த ஹார்மோன் மாற்றத்தால் பருவ வயதை எட்டுகையில் பல்வேறு மனச் சிதைவுகளுக்கு ஆளாகிறார்கள். அதன் விளைவாக தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள் அல்லது வயதுக்கு மீறிய சிந்தனை மற்றும் தவறான நட்பை தேர்ந்தெடுக்கிறார்கள். மேலும் இந்த ஹார்மோன் மாற்றம் எதிர்பாலினத்தின் மீதான ஆவலைத் தூண்டும் பெரும் வேலையை செய்கிறது.

பொதுவாக 14 வயது தொடங்குகையில் இருபாலினருக்குள்ளும் இனக் கவர்ச்சி உந்தப்பட்டு தொட்டுப்பேசி பழகிக்கொள்வார்கள். இது இயல்பான ஒரு விஷயம். மாறாக சில குழந்தைகள் இத்தகைய இனக் கவர்ச்சிக்கு  அதீத அடிமையாகி  அதையே காதல் என நினைத்து  தவறான பாதைக்கும் செல்லத் துவங்குகிறார்கள்.

படிப்பின் பாரம்,  மனச்சிதைவு ஒருபுறம், உடலின் பருவ மாற்றம் மறுபுறம் என பெரும் போராட்டத்தை தனக்குள் எதிர்கொண்டு அவஸ்தையை சந்திக்கையில் பெரும் கோபத்தை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். பெற்றோர்களிடம் எடுத்தெறிந்து பேசுகிறார்கள். சில பிள்ளைகள் தனிமையை தேர்ந்தெடுத்து அமைதியாகி நிற்கிறார்கள். இதன் பூதாகர பின் விளைவாக வன்மம், பழிவாங்கல் அல்லது தற்கொலை எண்ணம் போன்றவை அவர்களுக்குள் தூண்டப்படுகிறது.

மனச்சிதைவுக்கும் அழுத்தத்திற்கும் தீர்வுதான் என்ன?

குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். இனி  அவர்களே பார்த்துக்கொள்வார்கள் என அவர்களை தனியே விடுதலே இப்பிரச்னைகளுக்கு முதற் காரணம். அவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான உறவின் பாலம் இந்த வயதில் பலப்பட வேண்டும்.

*அவர்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள்.

*உறவுகளோடு அடிக்கடி பயணங்கள் அல்லது சந்திப்பை ஏற்படுத்துங்கள்.

*அவர்கள் உறக்கத்தையும் உணவு முறையையும் கருத்தில் கொள்ளுங்கள்.

*ஆண்-பெண் நட்பை ஆரோக்கியமாக கொண்டு செல்ல வழிகாட்ட வேண்டும்.

*காதல் என்பதை சமூகக்கேடாக, பெரும் குற்றமாக கருதாமல் அதன் உணர்வுகள் குறித்து கோபமின்றி நட்பின் அணுகுமுறையோடு வயது வந்த பெண் பிள்ளைகளிடம்  பேசுதல் நலம்.

*படிப்பை திணித்தல் முறையில் அல்லாமல் அவர்கள் விரும்பும் முறையில் அமைத்தலே அவர்களின் எதிர்காலத்திற்கும் பயன் தரும்.

*விளையாட்டுத்தனமாக, நகைச்சுவையாக பிள்ளைகளின் நண்பர்களையும் ஒருசேர ஆதரித்து அவர்களோடு பேசி அளாவி, தானும் ஒரு நட்பாக மாறி பிள்ளைகளிடம் பெற்றோர்கள் இணங்கி செல்லும் போது அப்பெண் பிள்ளைகள் மிகுந்த ஆரோக்கியமான சூழலை அடைவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது.பெண் பிள்ளைகளின் உடல் அளவிலும் மனதளவிலும் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்வோம். வரும் தலைமுறையை மன அழுத்தமின்றி வாழ வழி செய்வோம்.

தொகுப்பு : மதுரை சத்யா

Related Stories: