ஜாம்பவான்கள் மத்தியில் தனித்து இருக்க விரும்பினேன்!

நன்றி குங்குமம் தோழி

*பேக்கர் சோனம் சவுத்ரி

பெண்கள் வேலைக்கு சென்றுதான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு பிடித்த தொழில் செய்வதன் மூலம் சம்பாத்தியம் மட்டுமில்லாமல் அந்த துறையில் சாதனையும் படைக்க முடியும். அதன்படி தனக்கு தெரிந்த பேக்கிங் தொழில் மூலம் தனக்கான வருமானம் மட்டுமில்லாமல் அது சார்ந்த போட்டியில் பங்கு பெற்று வெற்றியும் பெற்றுள்ளார் சென்னையை சேர்ந்த சோனம் சவுத்ரி. இவர் ‘த விஷ்ஷிங் அவன்’ என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் விரும்பும் கேக்கினை வடிவமைத்து தருகிறார்.

‘‘நான் ஓட்டல் மேனேஜ்மென்ட் சார்ந்த துறையைதான் படிச்சேன். ஆனால் சமையல் சார்ந்து நான் ஈடுபடவில்லை, ஓட்டலை நிர்வகிக்கும் துறையில் 10 வருடமாக வேலை பார்த்தேன். இதற்கிடையில் திருமணம், குழந்தை என்று என்னுடைய வாழ்க்கை முற்றிலும் மாறியது. எனக்கான முழு நேரத்தையும் என் மகள் எடுத்துக் கொண்டாள். அதனால் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை. வீட்டில் இருந்ததால் எனக்கு நிறைய நேரம் இருந்தது.

அந்த நேரத்தில்தான் பேக்கிங் குறித்து அறிவியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டேன். சமையல் பொறுத்தவரை கிடைக்கும் காய்கறிகளை எல்லாம் சேர்த்து ஒரு சுவையான உணவினைக் கொடுக்க முடியும். ஆனால் பேக்கிங் அப்படி இல்லை. அதில் சேர்க்கப்படும் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் முதல் மாவு என அனைத்திற்கும் ஒரு அளவுகோல் உண்டு. அதன்படி சேர்த்தால்தான் அது முழுமையடையும். பத்து வருடம் ஓட்டல் துறையில் இருந்த நான் கிச்சன் பக்கம் போனதில்லை’’ என்றவர் பேக்கிங் மேல் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது குறித்து விவரித்தார்.

‘‘என்னுடைய வீட்டில் அம்மா, அப்பா இருவரும் ஆர்மி ஆபீசர்கள். அதனால் என்னைப் பொறுத்தவரை நான் ஒரு குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவள்னு சொல்ல முடியாது. இந்தியா முழுக்க பல மாநிலங்களில் வசித்திருக்கிறேன். அதிகபட்சம் மூன்று வருடம் தான் ஒரு மாநிலத்தில் நாங்க இருப்போம். அதன் பிறகு வேறு மாநிலத்திற்கு என்னுடைய பெற்றோருக்கு மாற்றலாகும். பள்ளிப் படிப்பு முடிச்சதும், ஓட்டல் துறையை தேர்வு செய்தேன். அதில் ரெஸ்டாரன்ட் மேனேஜர் மற்றும் ஈவன்ட் துறையினை நிர்வகித்து வந்தேன். மேலும் ரெஸ்டாரன்ட் பொறுத்தவரை ஒரு பொருளுக்கு என்ன விலை நிர்ணயிக்கலாம் என்பது குறித்தும் நான் ஆலோசனை செய்வேன். அதன் அடிப்படையில்தான் என் தோழி வீட்டில் இருந்தபடியே பேக்கிங் செய்து வந்தாள்.

அவளுடைய கப் கேக்குகளுக்கு என்ன விலை நிர்ணயிக்கலாம் என்பது குறித்து என்னிடம் ஆலோசனை கேட்டாள். அவளுக்கு உதவுவதற்காக இணைந்து செயல்பட்டேன். அப்போது தான் அவள் தன்னுடைய கேக் அழகாக மேலே எழும்பி வருவதில்லை என்றும் அதன் காரணம் புரியவில்லை என்று கூறினாள். மேலும் எங்கு தவறு செய்கிறோம் என்பது அவளுக்கு தெரியவில்லை என்றாள். அவளுக்காக கேக் குறித்த அறிவியல் தேடலில் நான் ஈடுபட ஆரம்பிச்சேன்.

பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் குறித்து படிக்க ஆரம்பிச்சேன். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொண்ட போது, பேக்கிங் துறை மேல் என்னையறியாமல் காதல் ஏற்பட்டதுன்னு சொல்லணும். அதனால் கேக், குக்கீஸ், பிரட் எல்லாம் எப்படி பேக்கிங் செய்யணும் என்பது குறித்த வீடியோவை பார்த்தேன். அதன் பிறகு அதை செய்து பார்த்தேன். கப் கேக், முழுமையான கேக், பிராஸ்டிங் எல்லாம் தெரிந்து கொண்டேன். நானே தனிப்பட்ட முறையில் கற்றுக் கொண்டாலும், இது குறித்து ஒரு நிபுணரிடம் ஆலோசனை பெறவேண்டும். அதனால் முறையாக பேக்கிங் பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன்.

நான் செய்த சின்னச் சின்ன தவறுகளை திருத்திக் கொண்டேன். அடுத்து அதனை அலங்காரம் செய்வதிலும் பயிற்சி எடுத்தேன். கேக்கினை பேக் செய்திடலாம். ஆனால் அதனை மற்றவர் கண்களுக்கு விருந்தளிக்க அதை அழகாக அலங்காரம் செய்ய வேண்டும். அது ஒரு தனி கலை. எனக்கு இப்ப கேக் பேக் செய்வதைவிட அதை அலங்காரம் செய்வதில் தான் அதிக ஆர்வம். மேலும் ஒருவர் தனக்கு விரும்பிய கேக்கினை அலங்காரம் செய்யச் சொல்லி கேட்பாங்க. அதை செய்து தரும் போது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். மேலும் பிடிச்ச வேலையினை ஒரு நாள் முழுக்க செய்துவிட்டு படுக்கையில் படுக்கும் போது பெரிய விஷயத்தை அன்று சாதித்துவிட்ட உணர்வு ஏற்படும்’’ என்றவருக்கு கேக் குறித்த ரெசிபிகளை தயாரிக்க ஒரு வருஷமானதாம்.

ஒவ்வொரு கேக், குக்கீஸ் மற்றும் கப் கேக்கிற்கான ரெசிபிகளை பார்த்து பார்த்து தயாரித்தேன். நிறைய டிரையல் அண்ட் எரர் முறையில் தான் ஒரு முழு வடிவம் கொண்டு வந்தேன். முதலில் நான் செய்ததை என் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் என் மகளின் பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுத்தேன். அவர்களுக்கு பிடித்து போக அவர்கள் மூலமாக  நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்னை நாடி வந்தாங்க. காரணம், என்னைப் பொறுத்தவரை சாதாரண கேக் மற்றும் அலங்கரிக்கப்பட்ட கேக் எதுவாக இருந்தாலும் சுவையாக இருக்கணும். மேலும் அதில் கமர்ஷியலாக பயன்படுத்தப்படும் பொருட்களை தவிர்த்தேன். காரணம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய உணவு ஆரோக்கியமா இருக்கணும்’’ என்றவர் போட்டியில் பங்கு பெற்றது குறித்து விவரித்தார்.

ஆல்பென்லிபே ஜஸ்ட் ஜெல்லி பேக்கர்ஸ் ஸ்டுடியோ... இவங்க ஒவ்வொரு வருடமும் வீட்டில் இருந்து தொழில் செய்யும், குறிப்பாக பேக்கிங் தொழில் செய்பவர்களுக்கான போட்டி வைப்பாங்க. அது குறித்த விளம்பரம் பார்த்தேன். நானும் பேக்கிங் தொழில் செய்து வந்தாலும் இது போன்ற போட்டிகளில் கலந்து கொண்டது இல்லை. என்னுடைய தொழிலுக்கு இது ஒரு எக்ஸ்ட்ரா மைலேஜாக இருக்கும்னுதான் பங்கு பெற்றேன். இந்த போட்டி பொறுத்தவரை குடும்பத்தினரின் ஈடுபாடு இருக்க வேண்டும். அதனால் என் கணவரும், குழந்தையும்

நான் அங்கு சமைக்கும் போது என்னை உற்சாகம் செய்து கொண்டிருந்தனர்.

போட்டியில் மொத்தம் இரண்டு சுற்று. முதல் சுற்றில் பிளேடெட் டெசர்ட் செய்யணும். அதாவது, நாம் உணவகத்தில் டெசர்ட் ஆர்டர் செய்யும் போது அதை அழகாக தட்டில் வைத்து கிரம்பில் எல்லாம் சேர்த்து வடிவமைத்து தருவாங்க. அதேபோல் செய்யணும். அது எங்களை போன்று பேக்கிங் செய்பவர்களுக்கு புதிது. காரணம், நாங்க புரொபஷனல் பேக்கர்ஸ் கிடையாது. நாங்க ஒரு முழுமையான கேக்கினைதான் செய்வோமே தவிர ஒருத்தர் சாப்பிடக்கூடிய அளவிற்கு செய்து பழகியதில்லை.

இது எனக்கு புதுசா இருந்தது. போட்டின்னு வந்துட்டா செய்து தானே ஆகணும். அதில் முதல் சுற்றில் ஷுபேஸ்ட்டரி (Choux Pastry) செய்ய சொன்னாங்க. பஃப் போன்ற உணவு. இனிப்பாக இருக்கும். அப்படியே சாப்பிடலாம். அல்லது உள்ளே கிரீம் வைத்து ஸ்டப் செய்யலாம். இது செய்வது சிம்பிள்தான். ஆனால் அதில் சேர்க்கப்படும் பொருட்கள் எல்லாம் சரியான அளவில் சேர்க்க வேண்டும்.

கொஞ்சம் அதிகமானாலும் சரியாக வராது. குறிப்பாக இதற்கான மாவினை தயாரிப்பது என்பது தனிப்பட்ட கலை. இதில் பல டெக்னிக் உண்டு. அதை சரியா பின்பற்றணும். இந்த பேஸ்டரி பேக் செய்து வெளியே வரும் போது உள் பகுதி ஹாலோவாக இருக்கணும். நாம் அதற்குள் கிரீம்களை ஃபில் செய்து கொள்ளலாம். மேலும் குறிப்பிட்ட நேரத்தில் இதனை தயாரித்து அதை அழகாக தட்டில் வைத்து பிரசென்ட் செய்யணும். அது எனக்கு பெரிய சவாலாக இருந்தது. காரணம், வீட்டில் நாங்க ஒரு கேக்கினை பொறுமையாகத்தான் செய்வோம். குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டும் என்ற விதி எங்களுக்கு கிடையாது. பேக்கிங் குறித்து அறிவியல் ரீதியாக படித்திருந்ததால் அது முதல் சுற்றில் எனக்கு ரொம்பவே உதவியா இருந்தது. மேலும் இந்த போட்டியில் பங்கு பெற்றவர்கள் எல்லோரும் திறமைசாலிகள். அவர்களில் நான் தனித்து இருக்க விரும்பினேன்.

இரண்டாவது ரவுண்டில் நான் யுனிக்கார்ன் போல் இரண்டு அடுக்கு கொண்ட கேக் தயாரித்தேன். இதில் நான் பயன்படுத்திய அனைத்து பொருட்களும் சாப்பிடக்கூடியவை. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தேன். மேலும் என்னதான் அழகாக அலங்கரித்தாலும் அதன் சுவையின் தரம் குறையக்கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். அதுதான் எனக்கு முதல் பரிசினை பெற உதவியது. இந்த பரிசு என்னுடைய திறமைக்கு கிடைத்த பரிசுன்னு தான் சொல்லணும். பல ஜாம்பவான்கள் மத்தியில் நான் ஜெயிச்சிருப்பது மேலும் பல போட்டியில் பங்கு பெறணும் மற்றும் புதுவிதமான கேக்குகளை அறிமுகப்படுத்தணும். குறிப்பாக கல்யாணத்திற்கு செய்யக்கூடிய பெரிய கேக்குகளை செய்யணும்.

அடுத்து கிஃப்ட் ஹாம்பர்கள் கொடுக்க இருக்கிறேன். காதலர் தினம், புது வருடம், பிறந்தநாள், தீபாவளி போன்ற நாட்களுக்கு கொடுக்கப்படும் கிஃப்ட் ஹாம்பர்கள். அடுத்து வாடிக்கையாளர்கள் விரும்பும் கஸ்டமைஸ்ட் கேக் செய்யப் போறேன். தற்போது கடை திறக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. காரணம், அதற்கு பெரிய அளவில் நான் தயாரிக்கணும். மேலும், தற்போது என்னுடைய மகள் சின்னக் குழந்தை என்பதால், தொழில் மட்டுமில்லாமல் அவள் மேலும் நான் கவனம் செலுத்த வேண்டும். அதனால் தற்போது வீட்டில் இருந்தபடியே என்னுடைய கஸ்டமர்கள் விரும்பும் கேக்கினை அமைத்துக் கொடுக்க இருக்கிறேன். அதே சமயம் எதிர்காலத்தில் கண்டிப்பாக ஒரு கடை திறக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது’’ என்றார் சோனம் சவுத்ரி.

தொகுப்பு : ப்ரியா

Related Stories: