நன்றி குங்குமம் டாக்டர்
முதுமையிலிருந்து நோயின்மைக்கு…
இந்தியா போன்ற மிகநீண்ட, புராண, வரலாற்று, நவீனத்துவ பின்னணி கொண்ட தேசத்தில், எந்த ஒரு மரபார்ந்த கருத்துக்கும், புராணத்தில் அதன் இடம் என்ன? வரலாற்றுக் காலகட்டத்தில் என்ன நிகழ்ந்தது?, நவீன காலத்தில் அதன் முக்கியத்துவம் என்ன? என்கிற இந்த மூன்று அல்லது ஐந்தடுக்கு கொண்ட பார்வையும், புரிதலும் முக்கியமாக கருதப்படும்.உதாரணமாக, ‘ச்யவன ப்ராஸனம்’ எனும் லேகியம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த லேகியம் ரிக்வேத மற்றும் புராண காலத்திலிருந்து இன்றுவரை பேசப்படும் முக்கியமான வஸ்து. பிருகு முனிவரின் மகனான ‘ச்யவன’ முனிவருக்கு இளமை மற்றும் ஆரோக்யத்துடன் வாழ்வதற்காக, அஷ்வினி தேவர்கள் இருவரும் இந்த லேகியத்தை காய்ச்சித் தருகிறார்கள், அதை ச்யவனர் உட்கொண்டு இளமையும் ஆரோக்யமும் அவருக்கு திரும்பக் கிடைத்ததால், ‘ச்யவன ப்ராசனம்’ என்று பெயர். ரிக் வேதத்தில் இருக்கும், இந்த கதையும், லேகியமும் இன்று வரை தொடர்ந்து இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்கான முக்கியமான மருந்தாக ஆயுர்வேதம் முன் வைக்கிறது.முதுமையில் ஆரோக்யத்துடன் இருத்தல் என்பது மிக முக்கியமான வாழ்வியல் முறையாக இந்திய மருத்துவம் கருதுகிறது. அதே வேளையில் நமது வாழ்வை ஆறு நிலைகளாகப் பகுத்து, அந்தந்த காலகட்டத்திற்கான ஆரோக்யம் என்பது என்ன? அதைப் பேணுவது எப்படி? என்பதையும் முன்னிறுத்துகிறது ஆயுர்வேதமும், யோகமும்.1)அஸ்தி - ஒரு விதையில் எப்படி ஒரு மரத்தின் இலைகள், பூக்கள் , காய்கள், கனிகள் அந்த கனியின் ருசி என அனைத்தும் மறைத்திருக்கிறதோ, அது போல இந்த உடல் நம் தாய் தந்தையிடம் வீரியமாக மறைந்துள்ளது. இது முதல் நிலை. 2)ஜாயதே - அதாவது பிறப்பு. கருவிலிருந்து வெளியே வருதல் எனும் நிகழ்வு. 3)வர்த்ததே - நம் உடல் அடையும் வளர்ச்சி. 4)விபரிணமதே - படிப்படியாக உருவம் மாறுபட்டுக்கொண்டே இருத்தல். 5)அபக்க்ஷீயதே - மத்திம வயதை கடந்து முதுமையைத் தொடுதல் , சீர்கெடுதல், நரை மூப்பு அடைதல். 6)வினச்யதி - உயிர் பிரிதல், மரணமடைதல்.இதில் கடைசி மூன்று நிலைகளில்தான் மனிதர்கள் பெரும்பாலும் உடல் மற்றும் மனநோய்க்கூறுகளால் பாதிக்கப்பட்டு, மத்திய வயதில் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள தொடங்கி இறுதி நாள் வரை ஏதேனும் ஒரு வடிவில் மருத்துவத்திற்கு அடிமைப்படுகின்றனர். மத்திய வயதைத் தாண்டி முதுமையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் ஒருவர் படிப்படியாக நான்கு விதமான இன்னல்களுக்கு ஆளாகிறார். முதலில் ஏழு வயது முதல் சிறிது சிறிதாக இந்த உடல் சேகரித்து வைத்திருக்கும் இறுக்கங்கள், தசை மற்றும் எலும்பு இணைப்புகளில் அதிகரிப்பதால், கொஞ்சம் கொஞ்சமாக அசைவுகளும், இயக்கங்களும் குறைந்துகொண்டே வருதல் , அதன் மூலம் உள்ளுறுப்புகள் சுருங்குதல் அல்லது வீக்கம் அடைதல்.இரண்டாவதாக, புரிந்துகொள்ளும் திறன் மற்றும் கற்றுக்கொள்ளும் திறன் குறைதல், கவனமின்மை, ஞாபகமறதி, தர்க்கபூர்வமாக சிந்திக்க இயலாமை, போன்ற அன்றாட வாழ்க்கைக்கான தேவை சார்ந்த சிக்கல்கள். மூன்றாவதாக, பயம் , மரணபயம், தனிமை, தன்னிரக்கம், அவநம்பிக்கை போன்ற உணர்ச்சிகள் சார்ந்த தளத்தில் உருவாகும் நோய்க்கூறு. நான்காவதாக , சுய ஆளுமை மற்றும் பிறரை அணுகும் முறையில் ஏற்படும் சிக்கல்கள். இப்படியாக நான்கு நிலைகளில் பாதிக்கப்படும் ஒருவருக்கு நடுவயது என்பது ஒரு வாய்ப்பு, இழந்த அனைத்து நலன்களையும் முழுவதுமாக மீட்க முடியாவிட்டாலும், மீதமிருக்கும் ஐம்பது அறுபது வருட வாழ்வை ஆரோக்யமான உடலும், உள்ளமும் கொண்டதாக மாற்றிக்கொள்ளலாம். அதற்கான மிகச்சரியான ஒரு வாழ்வியல் திட்டத்தை தொடங்குவதும் அவசியம்.உணவுக் கட்டுப்பாடு மட்டுமோ, ஆசனப் பயிற்சிகள் அல்லது உடற்பயிற்சிக் கூடங்களில் செய்யப்படும் தீவிரப் பயிற்சிகளோ, மருந்து மாத்திரைகளோ இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் சார்ந்திருப்பதை விட, உடல், மனம், ஆற்றல், குணாதிசயம், என அனைத்தையும் ஒருங்கிணைத்து மிகச்சிறப்பான ஒரு வாழ்வியல் முறையாக இருத்தல் மிகவும் அவசியம். நம்மில் பெரும்பாலானவர்கள், எல்லோரும் சொல்கிறார்கள் என, நடை பயிற்சியை மட்டும் செய்துவிட்டு, உணவு, உறக்கம், மனம், சார்ந்த மற்ற முக்கியமான விசயங்களைக் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிடுவோம். அது எந்த வகையிலும் பலனளிப்பதில்லை. ஆகவே, உங்களுக்கே உரித்தான ஒரு சரியான திட்டத்தை தேர்ந்தெடுங்கள். அதில் யோகம் , ஆயுர்வேதம் மருத்துவம், உடலியல் என அனைத்து அம்சங்களும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, மேலே குறிப்பிட்ட நம் வாழ்வின் ஆறு உருமாற்றங்களில், கடைசி மூன்று நிலைகளிலும், வாதம் மற்றும் பித்த தோஷத்தால் அதீதமான நோய்மையும், முதுமையும் உண்டாகிறது என்பது ஆயுர்வேதத்தின் கருத்து. ஆக, நீங்கள் ஒரு பயிற்சித் திட்டத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது வாத, பித்த தோஷத்தை சமன் செய்யக்கூடிய பயிற்சியாகவும் எடுத்துக்கொள்ளும் உணவும் அதை சார்ந்ததாகவும், இருத்தல் அவசியம். யோக்ப பயிற்சிகளில் ‘‘ஷட் கர்மா’’ எனப்படும் ஆறுவகை சுத்திகரிப்பு முறைகளும், வாதப் பித்தத்தை சமன்செய்யும் ஐந்து வகையான முத்திரைகளும், ‘‘பவன் முக்தாசனம்’’ எனும் எட்டு இணைப்புகளுக்குமான பயிற்சிகள் என ஒரு பாடத்திட்டம் உள்ளது ,ஆயுர்வேதத்தில் சில முக்கியமான லேகியங்கள் முதுமையை ஆரோக்கியத்துடன் நடத்துவதற்கு உதவியாக இருப்பவை, லேகியம் என்பதற்கே புத்துயிரியூட்டல் என்றே பொருள்.அதில் ‘‘ச்யவன ப்ராசனம் ‘‘ எனும் லேகியமே முக்கியமான பங்கு வகிக்கிறது, மருத்துவரின் ஆலோசனைப்படி நடுவயது முதல் தொடர்ந்து எடுத்துக்கொள்வது, வாத, பித்ததால் ஏற்படும் முதுமை சார் நோய்களை சமாளிக்க உதவும், கட்டுரையில் முதலில் சொன்னது போல, ‘ச்யவன முனிவரிலிருந்து இன்று வரை உபயோகத்திலும், பலனளிப்பதிலும் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது. சுவாமி சத்யானந்த சரஸ்வதி தனது எண்பது வருட வாழ்வை நான்காக பகுத்துச் சொல்கிறார், முதல் இருபது வருடங்கள் ஒரு மாணவனாக, இளைஞனாகத் தேடலில் இருக்கிறார் , அடுத்த இருபது வருடங்கள் தனது குருநாதரைக் கண்டடைதல் மற்றும் குருசேவையில் ஈடுபடுத்திக்கொள்கிறார், மூன்றாவது இருபது வருடத்தை உலகம் முழுவதும் சுற்றி யோகக்கலையைப் பரப்புவதில் மும்மரமாக செயல்படுகிறார், கடைசி இருபது வருடங்களை துறவியாக வாழ்ந்து முடிக்கிறார். அவர் முன்வைக்கும் ஒரு முக்கியமான கருத்து , முதுமையில் நோய்மை இல்லாமல் இருத்தல் என்பது. ஆகவே அவர் ‘‘இச்சா ம்ருத்யு’’ எனும் மரணத்தைத் தனது விருப்பத்தேர்வாக தேர்ந்தெடுக்கிறார். நோய்மையுடன் இந்த வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பவில்லை ஆகவே ‘‘அஜய முகூர்த்தம்’’ எனும் ஒரு குறிப்பிட்ட நாளில், தனது சீடர்கள் புடைசூழ இறுதி மூச்சை வெளியிடுகிறார்.இந்த நிகழ்வை பற்றி அவருடைய சீடர் சுவாமி சத்சங்கி அவர்கள் குறிப்பிடுகையில், ‘‘எங்கள் குருநாதர் வாழ்வதற்கு மட்டுமல்ல, இனிமையாக மரணிக்கவும் பாதை வகுத்துத் தந்துள்ளார்’’ என பெருமிதத்துடன் சொல்வதுண்டு.
ஏகபாதாசனம்இந்த பகுதியில் ‘ ஏக பாதாசனம் ‘‘எனும் சமநிலை பேணும் பயிற்சியைக் காணலாம். இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து, மூச்சை மெதுவாக உள்ளிழுத்தவாறு கைகளை மேல்நோக்கி உயர்த்தவும், மெதுவாக மூச்சை வெளியிட்டுக்கொண்டே, முன்புறமாக குனியவும், அதே வேளையில் வலது காலை பின்புறமாக உயர்த்தவும், முன்னால் நீட்டிய கையும் பின்னால் உயர்த்திய காலும் ஒரே நேர்க்கோட்டில் வருவது போல வைத்துக்கொள்ளவும். பின்னர் நேராக நிமிர்ந்து இடது காலுக்கும் இதேபோல செய்யவும். நரம்பு மண்டலம் மற்றும் தசைநாண்களில் மிகச்சிறந்த உறுதியை தரவல்லது இந்த பயிற்சி.