பாதங்கள் பராமரிப்பு… பெடிக்யூர் டெக்னிக்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

கால்களில் அனைவருக்கும் வரும் பெரிய தொல்லையே வெடிப்புகள்தான். காலில் ஏற்படும் வெடிப்புகளை நாம் பித்த வெடிப்பு என்று சொல்கிறோம். ஆனால் வெளிநாடுகளில் தோல் வறட்சியினால்தான் வெடிப்பு வருகிறது என்று சொல்கிறார்கள். பொதுவாக, செருப்பு அணியாமல் நடப்பவர்கள், அதிக எடை உள்ளவர்கள், தோல் வறட்சி உள்ளவர்கள், அதிக அழுக்கான இடங்களில் நடப்பவர்கள், தோட்ட வேலை செய்பவர்கள் போன்றோருக்கு அதிகளவில் கால் வெடிப்பு ஏற்படுகிறது.

 இந்த வெடிப்புகளை எப்படி நீக்குவது என்று பார்க்கலாம்:பொதுவாக, கால்கள் பராமரிப்பில் பெடிக்யூர் நல்ல பயனை தரும். மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ பெடிக்யூர் செய்துவந்தால், கால்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் அழகாக இருக்கும்.பெடிக்யூர் செய்வதற்கு முன்பு கால் நகங்களை எல்லாம் ஷேப் செய்துவிடுவது நல்லது. அதற்காக ஒட்ட வெட்ட வேண்டிய அவசியமில்லை, காலில் நகங்கள் சிறிதளவு இருந்தால்தான் கால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

காலில் நகங்களை வளர்க்கும்போது, எப்போதும் ஸ்கோயர் ஷேப்பையே கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும். இந்த பெடிக்யூர் முறை எல்லாம் அந்த காலத்திலிருந்தே இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா.. ஆம் பீர்க்கன் நாரிலிருந்து ப்யூமிஸ் கல் வரை பாட்டி காலங்களில் இருந்தே ஸ்க்ரப் செய்வதற்கென்றே பயன்படுத்தி உள்ளனர். அந்த காலங்களில் பாத்ரூம்களில் கால்களை தேய்க்கவென்றே சின்னதாக சொர சொரப்பான கல் வைத்திருப்பார்கள். அந்த கல்லிற்கு பதிலாகதான் நாம் இப்போது ப்யூமிஸ் கல், ஸ்க்ரப்பர் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம்..

கால்களுக்கு ரெகுலரான ஸ்க்ரப்பிங், மாய்ச்சுரைசிங் ( தேங்காய் எண்ணெய் தடவுதல்) செய்வதன் மூலம் அந்த காலத்தில் பித்த வெடிப்புகளை நீக்கிக் கொண்டார்கள்.அந்த காலம் போல இப்போது நம்மால் தண்ணீரில் ஊறியபடி கால்களை வைத்துக்கொண்டு அதிகநேரம் செலவழித்து, துணியெல்லாம் துவைத்துப் பிறகு குளிப்பதற்கு எல்லாம் நேரம் இல்லை. அவசியமும் இல்லை. அதனால், கால்கள் நெடுநேரம் தண்ணீரில் ஊறுவதற்கு வாய்ப்பில்லை.

இதற்கு மாற்றாகத்தான் தற்போது பெடிக்யூர் செய்கிறார்கள். அதனால் வீட்டிலேயே பெடிக்யூர் செய்ய நினைப்பவர்கள், அதற்காக தலைகுளிக்கும் நாளை தேர்ந்தெடுத்தால் நல்லது. நாம் குளித்து முடிக்கும்போது நமது கால்கள் தண்ணீரில் நன்றாக ஊறியிருக்கும்.  சளித் தொந்தரவு, சைனஸ் உள்ளவர்கள் ஒரு பக்கெட் சுடுதண்ணீரில் லிக்விட் சோப் கலந்து அதில் கால்களை ஊறவைக்கலாம். கால்களை தேய்க்கவென்றே கடைகளில் ஸ்டீலில் செய்த கைப்பிடி உள்ள ஃபுட் ஸ்க்ரப்பர் விற்கிறார்கள். இதனைக் கொண்டு இறந்த செல்களையும், வெடிப்புகளையும் எளிதாக நீக்கலாம். எங்கெங்கு வெடிப்பு, அழுக்கு இருக்கிறதோ, அங்கேயெல்லாம் இந்த ஸ்கரப்பரால் நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். அதிக வெடிப்பு உள்ளவர்களுக்கு இதுவே சிறந்தது. மற்றவர்கள் ப்யூமிஸ் கல் உபயோகிக்கலாம்.

பெடி எக் என்று இருப்பதையும் கூட ஸ்க்ரப் செய்ய உபயோகிக்கலாம். ஆனால் ஈரமான கால்களுக்கு இது சரிவராது.சிலருக்குக் காலில் மிகவும் கடினமான ஆங்காங்கே முடிச்சு போலத் தோல் கடினத்தன்மையுடன் இருக்கும். இவர்கள் மெனிக்யூரில் சொன்ன கார்ன் பிளேட் வாங்கி அதனைக்கொண்டு அந்த தோல்களை நீக்கிக்கொள்ளலாம்.

பிறகு பெடிக்யூர் கிட் அல்லது நெயில் கட்டரில் (கொக்கிப்போன்று வளைந்திருக்கும், முனை கொஞ்சம் கூர்மையாக இருக்கும்) அதனைக்கொண்டு நக இடுக்குகளில் உள்ள அழுக்கினை நீக்கலாம்.பிறகு கால்களில் சோப் கொண்டு தேய்த்து, கால்கள் தேய்பதற்கென்றே பிரஷ்கள் உள்ளன அதனைக்கொண்டு நன்றாகத் தேய்க்க வேண்டும். பின்னர், கால்களை நன்றாகத் துடைத்துவிட்டு, மாய்ச்சுரைசிங் க்ரீமை கால், விரல் இடுக்கு என்று எல்லா இடங்களிலும் தேய்த்து லேசான மசாஜ் செய்து வந்தால் கால்கள் பட்டுபோல் இருக்கும். பிறகு, கால்கள் உலர்ந்ததும், நெயில் பாலிஷ் போட்டுக்கொள்ள அழகாக இருக்கும்.

கால்களில் அதிகமான வெடிப்பு உள்ளவர்கள், வெடிப்பு நீங்க ஆயின்மென்ட் உபயோகிக்கும்போது, இரவு தூங்குவதற்கு முன் நன்றாக கால்களைச் சுத்தும் செய்துவிட்டு, பின்னர் வெடிப்புகளில் அந்த மருந்துகளைத் தடவிவிட்டு, சாக்ஸ் அணிந்துகொண்டு உறங்க்ச சென்றால் நல்ல பலன் கிடைக்கும். இல்லாவிட்டால், பயன்படுத்தும் மருந்துகள் எல்லாம் படுக்கையில் ஒட்டிக்கொண்டு படுக்கை பாழாவதோடு, மருந்தும் வீணாகும். மேலும், கால்கள் சரியாகவும் நாளாகும். பொதுவாக, கால்களின் பராமரிப்பினை மாதம் இரண்டு முறை செய்து வந்தாலே, கால்கள் அழகான தோற்றத்தில் இருக்கும்.

தொகுப்பு : பி.பரத்

Related Stories: