ஹெல்த்தி துவையல்கள் 5

நன்றி குங்குமம் டாக்டர்

வேப்பங் கொழுந்துத் துவையல்

தேவையானவை

வேப்பங் கொழுந்து - 1 கைப்பிடி

வெல்லம் - 1 துண்டு

உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 5 பல்

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

புளி - சிறிதளவு

 மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு வேப்பங்கொழுந்தை வதக்கிவிட்டு எடுத்து தனியாக வைத்துவிட்டு, பின்னர், உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். பின்னர், மிக்ஸி ஜாரில் வேப்பங்கொழுந்து, உளுந்தம் பருப்பு கலவை, வெல்லம், புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வேப்பங்கொழுந்து துவையல் தயார்.

பலன்கள்: வாரத்தில் இருமுறை இந்த துவையல் செய்து சாப்பிட்டு வர, வயிற்றில் உள்ள கிருமிகள் அழியும். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும். பித்தம் தணியும்.

நெல்லிக்காய்த் துவையல்

தேவையானவை:

கொட்டை நீக்கிய நெல்லிக்காய் துண்டுகள் - 1 கிண்ணம்

காய்ந்த மிளகாய் - 3

 கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விடாமல் கடலைப் பருப்பை இளவறுப்பாக வறுத்துக்கொள்ளவும். பருப்பு சிவந்து வந்ததும் காய்ந்த மிளகாயை லேசாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர், வறுத்த பருப்புடன் எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்து, அதனை தாளித்துக் கொள்ளவும். நெல்லிக்காய் துவையல் தயார்.

பலன்: சிறுநீர்ப் பாதை தொற்று, நீர்க் கடுப்பு, மலச்சிக்கல் நீங்கும். பித்தம் தணியும். உடல்சூடு குறையும். இளநரை மாறும். தலைமுடி நன்கு வளரும்.

பொடுதலைத் துவையல்

தேவையானவை

பொடுதலை இலை - 1 கப்

காய்ந்த மிளகாய் - 3

பச்சரிசி - 1 தேக்கரண்டி

பூண்டு - 3 பல்

புளி - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் , பச்சரிசியை வறுத்துக் கொள்ளவும். பின்னர், சிறிதளவு எண்ணெய்விட்டு, பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். பின்னர், ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துள்ள பொடுதலை இலையை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அனைத்தையும் வதக்கிய பின், அவற்றுடன் உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். சுவையான பொடுதலை துவையல் தயார்.

பலன்கள்: மூல வியாதியால் அவதி படுபவர்கள் தயிர் சாதத்துடன் இந்தத் துவையலைச் சேர்த்து சாப்பிட்டு வர, ரத்தமூலம் கட்டுப்படும். மேலும், ஆசன வாய் அரிப்பு, கடுப்பு, கட்டிகள் குணமாகும்.

வல்லாரைத் துவையல்

தேவையானவை:

வல்லாரை கீரை - 1 கிண்ணம்

சீரகம் - அரை தேக்கரண்டி

 பூண்டு - 5 பல்

காய்ந்த மிளகாய் - 3

உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

உப்பு, புளி - சிறிதளவு

 எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு, உளுந்தம் பருப்பு மிளகாய், பூண்டு சீரகம் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதே எண்ணெயில் வல்லாரைக் கீரையையும் வதக்கி எடுத்துக்கொள்ளவும். பின்னர் அவற்றுடன் உப்பு, புளி சேர்த்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். ஆரோக்கியமான வல்லாரைத் துவையல் தயார்.

பலன்கள்: வாரம் இருமுறை இந்த துவையலை சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி நோய் குணமாகும். உடல் சூடு தணியும், ரத்தம் சுத்தியாகும். குழந்தைகளுக்கு கொடுத்து வர நினைவாற்றல் பெருகும்.

கொள்ளுத் துவையல்

தேவையானவை

கொள்ளு - 1 கிண்ணம்

 பூண்டு - 3 பல்

காய்ந்த மிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு, புளி - தேவைக்கேற்ப.

செய்முறை: முதலில் வாணலியில் கொள்ளை வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர், காய்ந்த மிளகாய், பூண்டு வதக்கி எடுத்துக்கொள்ளவும். அதனுடன் மற்ற எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். கொள்ளுத் துவையல் தயார்.

பலன்கள்: உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைக்கும். உடல் பருமன் குறையும், சிறுநீரகக் கற்களை கரைக்கும் தன்மை கொண்டது. வாய்வு தொல்லை நீங்கும்.

தொகுப்பு : வசந்தா மாரிமுத்து

Related Stories: