×

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவி உள்பட 3 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதி

மேலும் பலர் காய்ச்சலால் பாதிப்பு
நாகர்கோவில், அக்.18 :  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் மேலும் 3 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.  நாகர்கோவில் வடக்கு சற்குண வீதி நர்ஸ் லேன் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை ஒருவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதே போல் கோட்டார் வட்டவிளையை சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவரும், ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் தற்போது நாகர்கோலிலில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் குடும்பத்தாருக்கும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பதை மருத்துவ பணியாளர்கள் கண்காணித்தனர். இந்த நிலையில் ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த பெண்ணின் குழந்தையான 5ம் வகுப்பு மாணவி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதே போல் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த மேலும் 2 பேர் தொடர் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.  இவர்கள் 3 பேரும் தற்போது பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களின் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தற்போது சாதாரண வார்டில் உள்ளனர். பரிசோதனை முடிவு வந்த பின்னர் நோய் தாக்கி இருப்பின் பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுவார்கள் என தெரிகிறது. இதற்கிடையே காய்ச்சல் பாதித்து வருகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள், பெண்கள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதித்து உள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே நாகர்கோவில் நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் தலைமையில், தொற்று நோய் பரவுவதை தடுக்க மாணவ, மாணவிகள் கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் கைகளை கழுவுவதன் அவசியம் குறித்து டாக்டர் கிங்சால் மாணவ, மாணவிகளுக்கு விளக்கினார்.

Tags : student ,Assaripallam Government Medical College ,
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...