×

நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்காததால் கலெக்டர், டிஆர்ஓ கார் ஜப்தி முயற்சி: பேச்சுவார்த்தையில் 2 மாத கால அவகாசம்

வேலூர், அக்.16: நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்காததால் வேலூர் கலெக்டர், டிஆர்ஓ காரை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்ய முயன்றதால், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. சமரச பேச்சுவார்த்தையில், 2 மாத காலம் அவகாசம் பெறப்பட்டது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆண்டியப்பனூரில் அணை கட்டுவதற்காக 2001ம் ஆண்டு 330 பேரிடம் இருந்து 200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி அதற்கான இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் இழப்பீடு போதவில்லை எனக்கூறி வாணியம்பாடி கோர்ட்டில் நில உரிமையாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு திருப்பத்தூர் கோர்ட்டிலும் நடந்து வந்தது. மேலும் கடந்த 2013ம் ஆண்டு வேலூர் நில ஆர்ஜித சிறப்பு நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், நிலம் கொடுத்தவர்களுக்கு மொத்தம் ₹40 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என 2015ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

ஆனால் இழப்பீடு வழங்கவில்லை. இதனால் கலெக்டர் காரை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் வேலூர் நில ஆர்ஜித சிறப்பு நீதிமன்றத்தில் நிலம் இழந்தவர்கள், ‘நிறைவேற்றுதல் மனு’ தாக்கல் செய்தனர். அதன்படி, தற்போது வட்டியுடன் சேர்த்து ₹60 கோடி வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இல்லாவிட்டால் கலெக்டர், டிஆர்ஓ வாகனங்கள், அலுவலகத்தில் உள்ள கணினிகள், மேஜை உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து உத்தரவு நகலுடன் கோர்ட் அமீனா பூங்கோதை, வழக்கறிஞர்கள் ரவிக்குமார், ஊழியர்கள் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, கலெக்டர் மற்றும் டிஆர்ஓ காரை ஜப்தி செய்ய முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டிஎஸ்பிக்கள் தரன் (வேலூர்), லோகநாதன் (காட்பாடி) அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோர்ட் உத்தரவை நிறைவேற்ற கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 2 மாதங்கள் அவகாசம் கேட்டனர். இதை ஏற்று ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

Tags : Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...