நன்றி குங்குமம் டாக்டர்
சித்த மருத்துவர் ஒய்.ஆர்.மானக்சா
மூல நோய் மருத்துவத்தில், ஹெமராய்ட்ஸ் (Haemorrhoides) அல்லது பைல்ஸ் (Piles) என்று குறிப்பிடப்படுகிறது. பெருங்குடலின் கடைசிப் பாகமான ரெக்டம் (Rectum) முதல் ஆசனவாய் (Anus) வரையுள்ள ரத்த நாளங்கள் புடைத்து வீங்கி வலியைத் தருவதைத்தான் மூலம் என்கின்றோம். ஆசன வாயில் உள்ள கோடு (Dentate line) போன்ற பகுதிக்கு மேலே தோன்றும் மூலம் உள்மூலம் என்றும், கோட்டிற்கு கீழே தோன்றும் மூலம் வெளிமூலம் என்றும் பிரிக்கப்படுகிறது. இதைப் பொறுத்துதான், மூல நோய் உள்மூலம், வெளிமூலம் என இரு வகைப்படுகிறது. சித்த மருத்துவத்தில் 21 வகை மூல நோய்கள் பற்றி சித்தர்களால் கூறப்பட்டுள்ளது.
மூல நோய் எதனால் ஏற்படுகின்றது?“அனில பித்த தொந்த மலாது மூலம் வராது” என்று தேரையர் சித்தரின் பாடலடி கூறுகின்றது. அதிகரித்த நாட்பட்ட அபான வாயுவின் அழுத்தம், உடல் சூடு, நாட்பட்ட மலச்சிக்கல், உடல் பருமன், பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் ஏற்படும் வயிற்றின் அழுத்தம், நாட்பட்ட கல்லீரல் நோய்கள், ஆசனவாய் அருகிலுள்ள தசைகளில் ஏற்படும் பலகீனம், தண்ணீர் குறைவாக குடிப்பது, எப்போதும் இருக்கை நிலையில் இருப்பது போன்ற காரணங்களினால் மூலநோய் ஏற்படுகின்றது.
மூல நோயின் நிலைகள் (Piles stages) *தரம் - I (Grade - I) : மலச்சிக்கலுடன், ஆசனவாய் சளிச்சவ்வு சற்று வீங்கிக் காணப்படும்.
*தரம் - II (Grade - II): மலம் கழிக்கும்போது ஒரு வீக்கம் தோன்றி, தானாகவே உள்ளே சென்றுவிடும்.
*தரம் - III (Grade- III): மலம் கழிக்கும்போது ஒரு புடைப்பு வெளியே வரும். அதை விரல்களினால் அழுத்திவிட்டால் உள்சென்று விடும்.
*தரம் - IV (Grade - IV): மலம் கழிக்க முக்கும்பொது ஒரு புடைப்பு வெளியே வரும். விரல் வைத்து அழுத்தினாலும், உள்ளே செல்லாமல் வெளியே புடைத்து வீங்கிக் காணப்படும். இதனால் மலம் கழிக்க, வெளியில் செல்ல, நடக்க சிரமமாகக் காணப்படும். உள்மூலப் பாதிப்புகளில் வலி பெரியளவில் இருக்காது. மலம் முக்கி வெளியே போகும் போது இரத்தம் வடிதல் காணப்படும். ஆனால், வெளிமூல நோயில் வலி தான் முக்கியக் குறிக்குணமே, என்னடா வாழ்க்கை என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு வலி காணப்படும்.
மூல நோய்க்கான பரிசோதனை முறைகள்: *விரல் பரிசோதனை முறை - நோயாளியைப் படுக்க வைத்து, ஆசனவாயில் ஆட்காட்டி விரலை உட்செலுத்தி பரிசோதித்துப் பார்ப்பது. இப்பரிசோதனை முறையில் உள்மூல பாதிப்புகள், ஆண்களில் புரோஸ்டேட்கோளம் வீங்கி உள்ளதா என்று கண்டறியலாம். வெளி மூலத்தை பார்வையிலேயே கண்டறியலாம்.
*புரோக்டோஸ்கோப்பி (Proctoscopy) - ஆசன வாய்க்குள் புரோக்டோஸ்கோப் கருவியை உட்செலுத்தி பரிசோதித்துப் பார்ப்பது. இதன் மூலம், உள்மூலம், சிராய்ப்புகள் ஏதாவது இருந்தால் கண்டுபிடிக்கலாம்.
*இன்னும் கொலனோஸ்கோப்பி, சிக்மாய்டோஸ்கோப்பி போன்று பல பரிசோதனை முறைகள் உள்ளன. இது மாதிரியான பரிசோதனைகளை தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம். ஆசனவாயில் இருந்து அடிக்கடி இரத்தம் வடிதல், உடல் எடை மெலிதல் போன்ற குறிகுணங்கள் ஏற்பட்டால், அவற்றை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மூல நோய்க்கு சித்த மருத்துவ தீர்வுகள்:
*துத்திக் கீரையுடன், சிறு வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசியவைத்து உண்ணலாம்.
*கருணைக் கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி, புளி சேர்த்து குழம்பாக வாரம் இருமுறை பயன்படுத்தி வரலாம்.
*பிரண்டைத் தண்டை துவையல், சூப்பாக செய்து பயன்படுத்தலாம்.
*முள்ளங்கிக்காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கீரைகள், கோவைக்காய் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
*சித்த மருத்துவ செய்மருந்துகளில் கருணைக் கிழங்கு லேகியம், நத்தைப் பற்பம், நாகபற்பம், கோப்பிரண்டைச் சூரணம் போன்றவைகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
*மருந்துகளினால் தீராத மூல நோய்க்கு சித்தர்கள் கூறியுள்ள பாரம்பரிய “காரநூல்” அறுவைசிகிச்சை மூலமாக தீர்வு காணலாம். காரநூல் என்பது உறுதியான லினன் நூலை, நாயுருவி உப்பு, மஞ்சள், உத்தாமணிப் பால், எருக்கம்பால் போன்றவைகளைக் கொண்டு முறைப்படி செய்து மூலம் பாதித்த பகுதிகளை அந்த நூலினால் இறுக்கிக்கட்டி விடும் முறை. இது அறுத்து புண்ணை ஆற்றும் இயல்புடையதால் நோயாளிக்கு எந்த பக்க விளைவுகளும் கிடையாது.
மூலம் நோய் வந்தவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் தடுப்பு முறைகள்: *உடல்சூடு குறைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் 6-7 மணிநேரம் தொடர்ச்சியாக தூங்க வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும்.
*கிழங்கு வகைகள் அடிக்கடி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். காரமான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
*நம்முடைய உடல் வெப்பநிலை 98.4டிகிரிF. கோழியின் உடல் வெப்பநிலை 107டிகிரிF. ஆகவே அடிக்கடி கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கோழி சாப்பிடும் போது உடலில் பித்தநாடி அதிகரித்து உடல் வெப்பம் கூடும்.
*இளநீர், தர்பூசணி சாறு, முலாம் பழச்சாறு, மோர் இவைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
*நார்ச்சத்து நிறைந்த ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யாப் பழம் மற்றும் வாழைப்பழம் உண்ண வேண்டும்.
*காலையில் நடைப் பயிற்சி, ஆசனவாய் தசைகளை உறுதிபடுத்தும் பயிற்சிகள் செய்ய வேண்டும்.
*முறை தவறாமல், சரியான முறையில் உணவு உண்ண வேண்டும். வயிற்றில் வாயு உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சீரகம், கொத்தமல்லி, ஓமம் இவைகளை சிறிதளவு எடுத்துக் கொதிக்க வைத்த தண்ணீரை காலை, இரவு குடித்து வர வேண்டும்.