×

சத்துணவில் விஷம் கலந்து குழந்தைகளை கொல்வேன் பெண் அமைப்பாளர் மிரட்டல் பணிமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு

வேலூர், அக். 12: வேலூரில் பணிமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘சத்துணவில் விஷம் கலந்து குழந்தைகளை கொல்வேன்’ என பெண் அமைப்பாளர் மிரட்டல் விடுத்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர், மக்கான் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருபவர் சரஸ்வதி. இவர் சரிவர உணவு சமைக்காமலும், தலைமை ஆசிரியையிடம் அடிக்கடி தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின்பேரில் சரஸ்வதியை, வி.எம்.செட்டித்ெ தருவில் உள்ள பள்ளிக்கு அண்மையில் பணிமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மக்கான் பள்ளிக்கு வேறு ஒரு பெண்ணை சத்துணவு அமைப்பாளராக நியமித்தனர்.

ஆனால், சரஸ்வதி பணி மாற்றம் செய்யப்பட்ட பள்ளிக்கு செல்லாமல் மீண்டும் மக்கான் பள்ளிக்கு வந்து புதிய அமைப்பாளரிடம் தகராறு செய்தாராம். மேலும், சத்துணவு பொருட்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டோர் ரூமை பூட்டி சாவியை எடுத்துச் சென்று விட்டாராம். இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிச்சாண்டி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை ஆய்வுக்கு வந்தனர். அங்கு பூட்டப்பட்டிருந்த சத்துணவு ஸ்டோர் ரூமின் பூட்டை உடைத்து சமையல் பணிகளை தொடங்க செய்தனர். இதையறிந்து அங்கு வந்த சரஸ்வதியிடம், பணிமாற்றம் செய்த இடத்திற்கு செல்லும்படி அறிவுரை கூறினர்.ஆனால், இதை ஏற்க மறுத்த சரஸ்வதி, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், தன்னை பணியிட மாற்றம் செய்ததற்காக சத்துணவில் விஷம் கலந்து குழந்தைகளை கொல்லப்போகிறேன்’ என மிரட்டல் விடுத்தாராம்.

இதனால் அதிர்ச்சியடைந்த அங்கு திரண்ட குழந்தைகளின் பெற்றோர், சரஸ்வதியை தட்டிக்கேட்டனர். இருப்பினும் சரஸ்வதி, வடக்கு போலீஸ் நிலையத்திற்கு சென்று, தலைமையாசிரியர் மீது புகார் கொடுத்தார். இதேபோல் பணி செய்யவிடாமல் தடுப்பதாக தலைமை ஆசிரியையும் சத்துணவு அமைப்பாளர் சரஸ்வதி மீது புகார் அளித்தார்.
இதுகுறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிச்சாண்டி கூறுகையில், ‘சம்பவம் குறித்து நேரடி ஆய்வு செய்து விசாரித்தோம். இதன் அறிக்கையை கலெக்டரிடம் விரைவில் சமர்ப்பித்து, சரஸ்வதியை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்போம்’ என்றார்.

Tags : protest ,children ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...