பொலிவான முகத்துக்கு சார்க்கோல் ஃபேஸ் மாஸ்க்!

நன்றி குங்குமம் டாக்டர்

பல்வேறு  சருமப் பராமரிப்புக்கான அழகுசாதன தயாரிப்புகளில், முக்கிய உட்பொருளாக ஆக்டிவேட்டட் சார்கோல்  (கரி) சேர்க்கப்படுகிறது.  இந்த ஆக்டிவேட்டட்  சார்க்கோல்  என்பது  கரித்துண்டுகளை  மிருதுவான பொடியாக்கி, அதனுடன்  ஒரு பங்கு கால்சியம் குளோரைடை சேர்த்து, அதனுடன் மூன்று பங்கு தண்ணீர்  கலந்து, விழுதாக்கி, அந்த விழுதை உலரவிட்டு, அது காய்ந்தவுடன், சுத்தமான தண்ணீரால் அலசி, ஓவனில் 225 டிகிரி வெப்பத்தில்  30 நிமிடங்கள் வேகவைத்து எடுப்பதே  ஆக்டிவேட்டட் சார்க்கோல் ஆகும்.  இந்த  ஆக்டிவேட்டட் சார்க்கோல் தற்போது  பல்வேறு பிராண்ட்களில் ஒரு  அழகு சாதனப்  பொருளாக கிடைக்கிறது. இதனை வாங்கி நாம் நேரடியாக பயன்படுத்தலாம்.

சார்க்கோல்  ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துவதால்  கிடைக்கும் நன்மைகள்:

சுற்றுச்சூழல் மாசு, சூரிய ஒளி, புற ஊதாக் கதிர்கள், வானிலை மாற்றம், உணவுப் பழக்கம், மன அழுத்தம், உறக்கமின்மை, அழகுக்காக  முகத்தில் பூசும் வேதிப்பொருட்கள் என்று பலவும் நாளடைவில்  முக அழகை கெடுக்கிறது.  அதிலிருந்து முகத்தை பாதுகாத்து  சருமத்தில் இருக்கும் நச்சுப்பொருட்கள்,  அழுக்கு, எண்ணெய்ப் பிசுக்கு போன்றவற்றை உறிஞ்சி விடுகிறது. இந்த நச்சுப்பொருட்கள், சருமத்தில் இருந்து அகற்றப்படும்போது, சருமம் பளபளப்பாக, பளிச்சென்று மாறி விடும். மேலும், இளம் வயதில்  ஏற்படும் முதிர்ச்சியையும்  இது தடுக்க உதவுகிறது. இதனால் சருமம் இளமையான தோற்றத்தில் காணப்படும்.

சார்க்கோல் ஃபேஸ் மாஸ்க்   முகத்தில் உள்ள  தேவைக்கதிகமான எண்ணெய்ப் பிசுக்கை உறிஞ்சிவிடுவதால்,  முகத்தில் பருக்களால் ஏற்பட்ட துவாரங்களையும் குறைத்து முகத்தைப்  பொலிவாக்குகிறது. சார்க்கோல் ஃபேஸ் மாஸ்குகளின் முக்கியமான பலன்களில் ஒன்று, அவை சிறந்த ஆன்டிபாக்டீரியல் பண்புகள் கொண்டவை. அவை சிறந்த ஆன்டிமைக்ரோபியல் பொருளாகவும் செயல்படக்கூடியவை என்பதே.

இதன் பொருள், சருமத்தில் ஏதேனும் நோய்த்தொற்றுகள், பாக்டீரியா அல்லது கிருமிகள் இருந்தால் அவையும் சார்கோல் ஃபேஸ் மாஸ்கைப் பயன்படுத்தும்போது அழிக்கப்படும். முகத்தில் ஏதேனும் தடிப்புகள் இருந்தால் அல்லது பூச்சிக் கடி இருந்தால், ஆக்டிவேட்டட் சார்க்கோல் ஃபேஸ்மாஸ்க் மட்டுமே அவற்றை சரிசெய்ய பல நேரங்களில் போதுமானதாக இருக்கும்.சார்க்கோல்  ஃபேஸ்மாஸ்க்கை வாரத்தில்,  இரண்டுமுறை பயன்படுத்தலாம். ஆனால், வறண்ட அல்லது செதில்களாக உதிரும் சருமம் இருப்பவர்கள், இதனை  அடிக்கடி பயன்படுத்தக்கூடாது.

தொகுப்பு : ரிஷி

Related Stories: