நன்றி குங்குமம் டாக்டர்
அறுவைசிகிச்சையின் போது மட்டுமல்லாமல் திடீரென்றும் இந்த அபாயகரமான ரத்தக்கசிவு நிகழ்வதுண்டு. புராணத்தில் வரும் கண்ணப்ப நாயனார் கதையைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். திடீரென்று பரமசிவனின் கண்ணில் இருந்து ரத்தம் வடிந்ததைக் கண்டு துடித்துப்போனார் கண்ணப்ப நாயனார். இதைப் போல நமக்கு அருகில் இருக்கும் ஒருவரின் கண்ணுக்குள் இருந்து திடீரென்று ரத்தமாக வடிந்தால் எப்படி இருக்கும்? அவரும் சுற்றியுள்ளவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கி விடுவார்கள். அத்தகைய நிலையை என் கண் மருத்துவப்பணியின் போது இரண்டு முறை நான் சந்தித்திருக்கிறேன்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பாக என்னிடம் மாரியப்பனை அழைத்து வந்தனர். அவர் ஒரு மாற்றுத்திறனாளி. பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடுடன் பிறந்தவர். இருந்தும் சிறு சிறு வியாபாரங்கள் செய்து குடும்பத்திற்குத் தூணாக நிற்பவர். அவருடைய சகோதரிகளின் பிள்ளைகள் மாமாவுக்கு இப்படி என்றவுடன் பதறியபடி அழைத்து வந்தனர். இடது கண்ணின் கருவிழிப் பகுதியில் வெடிப்பு ஏற்பட்டு, அதன் உள்ளிருந்த உறுப்புகள் வெளியேறி, ரத்தம் வடிந்த நிலையில் வந்தார். ரத்தத்தை நிறுத்துவதற்கான சிகிச்சைகளைச் செய்து முடித்து, இந்த நிலைக்கான காரணத்தை நான் தேட, அந்த விடை மறு கண்ணில் கிடைத்தது. வலது கண்ணில் கண் அழுத்தநோய் அபாயகரமான அளவில் இருந்தது. உடனடியாக கண்ணழுத்தத்தைக் குறைப்பதற்கான சிகிச்சைகளைக் கொடுத்தோம். பின் பாதிக்கப்பட்ட கண்ணை முழுவதுமாக அகற்ற வேண்டியதாக இருந்தது. இந்த அறுவைசிகிச்சைக்குப் பின் கண்பகுதி பார்ப்பதற்கு ஒரு குகையைப் போல இருக்கும். சில வாரங்கள் கழித்து புண் ஆறியவுடன் ‘பொம்மைக் கண்’ (prosthetic eye) வைக்கலாம். அது பார்ப்பதற்கு கண் போன்று அமைப்பைக் கொடுக்குமே ஒழிய பார்வையை மீண்டும் வரவழைக்க இயலாது. சில நாட்கள் கழித்து பொம்மைக் கண் வைப்போம் வாருங்கள் என்ற அறிவுரையுடன் அவரை நாங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். தினமும் இரவில் கழற்றி சுத்தம் செய்துவிட்டு மறுநாள் காலையில் மாட்ட வேண்டியதாக இருக்கும் என்பதால் அவரால் அதை பராமரிக்க முடியாது, பொம்மைக் கண் தேவையில்லை என்று அவரும் உறவினர்களும் முடிவெடுத்துவிட்டனர். இன்று வரை அவரது வலது கண்ணில் கண்ணழுத்த நோய்க்கான மருந்தை மட்டும் தவறாமல் பயன்படுத்திவருகிறார். நலமாகவே இருக்கிறார்.இதேபோன்ற அறிகுறியுடன் மூன்றாண்டுகளுக்கு முன்பாக 70 வயது முதிய பெண்மணி ஒருவர் வந்தார். இவருக்கும் ஒரு கண்ணில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அது கொரோனா காலத்தைய ஆரம்பம். சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம், இதய நோய் போன்ற வேறு பிரச்சனைகளும் அவருக்கு இருந்தன. முந்தையவரை விட அதிக ரத்தப்போக்கு இருந்த காரணத்தால் அவசரமாகக் கண்ணை அகற்றினோம். இவருக்கும் அதே பிரச்சனை தான். மற்றொரு கண்ணில் அழுத்தம் அதிகமாக இருந்தது. கூடவே ரத்தஅழுத்தமும் மிக அதிகமாக இருந்தது. அவரை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்துவந்தோம். கொரோனா காலம் என்பதால் மருத்துவமனையில் தங்கியிருக்க உறவினர் விரும்பவில்லை. துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குச் சென்ற மூன்றாம் நாள் மாரடைப்பின் காரணமாக அவர் இறந்துபோனார். இரண்டு நோயாளிகளும் கண்ணழுத்த நோய் கண்டுபிடிக்கப் படாமல் இருந்ததும், கூடவே உயர் ரத்த அழுத்தம் இருந்ததும் திடீர் ரத்தக் கசிவுக்குக் காரணமாக இருந்தது.கண்புரை அறுவைசிகிச்சை, கண்ணழுத்தம் மற்றும் விழித்திரை பிரச்சனைகள் போன்றவற்றிற்கான அறுவைசிகிச்சைகளைச் செய்யும்போது நானூற்றில் ஒரு சதவீதமாக, கண் மருத்துவர்கள் இந்தப் பிரச்சனையை சந்திப்பதுண்டு. அதனால் அறுவை சிகிச்சைக்கு முன்னான பரிசோதனைகளை (pre operative evaluation) அதீத கவனத்துடன் செய்ய வேண்டியது அவசியம். நமது நாட்டில் கண்புரை அறுவைசிகிச்சை பரவலாக்கப்பட்ட காலத்தில், தொலைதூரங்களில் மருத்துவமனைகள் இல்லாத பகுதிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் ரயிலில் பயணித்து சிகிச்சை அளிப்பார்களாம். ரயில் பெட்டிகள் தற்காலிக ஆபரேஷன் தியேட்டர்களாக இயங்கியிருக்கின்றன. சுமார் 35 வருடங்களுக்கு முன்பாகக்கூட அத்தகைய முகாம்கள் நடந்ததாக மூத்த மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவக்குழு வேறு ஊரிலிருந்து பயணித்து வந்து ரயிலில் காத்திருக்க, ஒவ்வொரு ஊர் ரயில் நிலையத்திலும் காத்திருக்கும் ரயிலுக்கு நோயாளிகள் அழைத்து வரப்பட்டு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுமாம். அத்தகைய நேரங்களில் அவர்களுக்கு முன்பாகவே ரத்த அழுத்தம் சர்க்கரைநோய் போன்றவற்றை பரிசோதிக்க வாய்ப்புகள் இருந்திருக்காது. அதனால் அந்த நாட்களில் இந்த திடீர் ரத்தக் கசிவு பிரச்சனையும் அதிகமாக இருந்திருக்கிறது. இத்தகைய பின் விளைவுகளால் விளைந்த அறுவைசிகிச்சைக்கு எதிரான பயத்தையும் மனநிலையையும் மாற்றி, மிக கவனமான அறுவைசிகிச்சைக்கு முன் கவனிப்புகளைச் செய்வதும், அறுவைசிகிச்சைக்குத் தகுதியான (ideal patient selection) நோயாளியைக் கண்டறிவதும் கண் மருத்துவத்துறை சந்தித்த சவால்களாக இருந்தன.அறுவைசிகிச்சைக்கு முன்னான தயாரிப்பில் முக்கியமான கவனம் செலுத்த வேண்டும் என்பது ஒவ்வொரு கண் மருத்துவருக்கும் சொல்லித்தரப்படும் பாலபாடம். கண்ணழுத்தம் போன்ற பிரச்சனைகள் முன்னரே கண்டுபிடிக்கப்படாத சூழல் நோயாளிக்கு பெரிய பாதிப்பாய் அமைந்துவிடக் கூடும். கண்ணையே முற்றிலுமாக அகற்றிவிடக் கூடிய நிலை என்பது மருத்துவருக்கும் நோயாளிக்கும் மிகக் கடினமான ஒன்று. இத்தகைய அறுவைசிகிச்சைகளை Destructive procedures என்று அழைப்பார்கள். உதாரணமாக, பாதி அழுகிவிட்ட ஒரு காலை முழங்காலுக்குக் கீழே நீக்க வேண்டும் என்ற சூழல் வரும்பொழுது அதற்கு இரண்டு மருத்துவர்களின் ஒப்புதல் சட்டரீதியாக அவசியம். நான் சந்தித்த இரண்டு நோயாளிகளுக்கும் செய்யப்பட்ட Evisceration என்ற சிகிச்சைக்கும் அப்படியே. முதலாவதாக நான் குறிப்பிட்ட திரு. மாரியப்பனுக்கு பெரிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து அறுவைசிகிச்சை செய்தோம். அதனால் second opinion எளிதாகக் கிடைத்தது. இரண்டாவதாக நான் குறிப்பிட்ட முதிய பெண்மணிக்கு அதற்கான வாய்ப்பு இல்லை. லாக் டவுன் நேரம்; பெரு மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சைகள் நிறுத்தப்பட்டிருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இன்னொரு கண் மருத்துவரைப் பார்க்க முடியவில்லை.இன்னொரு கண் மருத்துவரின் ஒப்புதலுக்கு எங்கே போவது என்று நான் கையைப் பிசைந்து மூத்த பேராசிரியர் ஒருவரை தொலைபேசியில் அழைத்து ஆலோசனை கேட்டேன். நோயாளியின் நிலையை விளக்கி ஒரு பொது அறுவைசிகிச்சை நிபுணரிடமோ உங்கள் தலைமை மருத்துவ நிபுணரிடமோ ஒப்புதல் கையெழுத்து வாங்குங்கள், அவர் எந்தத் துறையை சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை என்றார். நிம்மதிப் பெருமூச்சு விட்டு அன்று பணியில் இருந்த ஒரு இளம் அறுவைசிகிச்சை நிபுணரையும் துணைக்கு வைத்துக் கொண்டு அந்தப் பெண்மணிக்கான சிகிச்சையை நடத்தி முடித்தேன். மேலே கூறிய காரணங்களைத் தவிர கண்பந்தின் அச்சுநீளம் அதிகமாக இருக்கும் Myopia நோயாளிகளுக்கும், கண் பந்தின் உள்ளே புற்றுக்கட்டிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கும் அறுவைசிகிச்சை செய்யும் போதும் இந்த நிலையை எதிர்பார்க்கலாம். அதனால் அவர்களுக்கு அதீத கவனத்துடன் அறுவைசிகிச்சை செய்ய வேண்டியது மிகவும் அவசியம். கண் அறுவைசிகிச்சையின் மிக அரிதானதொரு பக்க விளைவே இது. இன்றைய அறுவைசிகிச்சை வசதிகள் மூலம் ஆரம்பநிலை ரத்தக்கசிவை உடனடியாகக் கண்டறிந்தால் அதைக் கட்டுக்குள் கொண்டு வந்து, பார்வையை முழுவதும் காப்பாற்றி விட முடியும். எப்போதுமே வருமுன் காப்பது நல்லதுதானே! அதனால் இந்த அரிதிலும் அரிதான நிலையைக் கூட நம் அறியாமையை அகற்றினால் முற்றிலும் தவிர்த்து விடலாம்! 