புற்றுநோய்க்குப் பிந்தைய பராமரிப்பு! ஒரு கம்ப்ளீட் கைடு!

நன்றி குங்குமம் டாக்டர்

பிப்ரவரி 4 உலக புற்றுநோய் தினம்

இன்று உலகெங்கிலும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துக்கொண்டு வந்தாலும் ஒருபுறம் புற்றுநோயும் அதிகரித்துதான் வருகிறது. இதற்கு காரணம், நமது வாழ்வியல் முறை மாற்றங்களே என்று தெரிவிக்கிறது மருத்துவ உலகம். எனவே, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் பிப்ரவரி 4 -ஆம் தேதி உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும், பராமரித்துக்கொள்ள வேண்டும் என்று நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் புற்றுநோய் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற மூத்த மருத்துவர் எம்.ஏ. ராஜா:

புற்றுநோயிலிருந்து மீண்ட பிறகு அவர்களது வாழ்க்கை முறை எப்படி மாறும்..புற்றுநோயிலிருந்து முற்றிலும் குணமானவர்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று, முழுமையாக குணமாகிவிட்டவர்கள். மற்றொன்று சிகிச்சைக்கு பிறகு, திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் உள்ளவர்கள். எனவே, முழுமையாக குணமானவர்கள் வாழ்க்கை முறை வேறு மாதிரி இருக்கும். மீண்டும் வந்துவிடுமோ என்ற பயத்தில் இருப்பவர்களின் வாழ்க்கை முறை வேறுவிதமாக இருக்கும்.

முழுமையாக குணமானவர்களைப் பொருத்தவரை, அவர்கள் பூரணமாக குணமாகியிருந்தாலும், அவரது உறவினர்களாலும், சமூகத்தாலும் ஒதுக்கப்பட்டு, நோயிலிருந்து மீண்டாலும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். உதாரணமாக, ஒரு அம்மாவுக்கு புற்றுநோய் இருந்தால், கல்யான வயதிலிருக்கும் அவரது மகளுக்கு வருங்காலத்தில் புற்றுநோய் வந்துவிடுமோ என்ற பயத்தில் அந்தப் பெண்ணை திருமணம் செய்ய மறுக்கிறார்கள். அதுபோன்று, அவர்கள் வெளியிடங்களுக்குச் செல்லும்போது, அவர்களை வித்தியாசமாகப் பார்ப்பது, பணியிடங்களில் அவர்களுக்கு வேலை தர மறுப்பது போன்ற பிரச்னைகளை நிறைய சந்திக்கிறார்கள்.

இதனால், இவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடாமல் இருப்பதற்காக, புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்காக புணர்வாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை கேன்சர் சப்போர்ட் குரூப் என்று சொல்லுவோம். இதிலும் இரண்டு பிரிவு இருக்கிறது. அதில் ஒரு குரூப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை தீர்த்து வைத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவார்கள்.

இன்னொரு குரூப்பில் இருப்பவர்கள், புற்றுநோய் முற்றிய நிலையில், குணப்படுத்த முடியாத சூழலில் வாழ்பவர்களுக்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், ஆயுளை நீட்டிப்பதற்கும், நோயினால் ஏற்படும் பிரச்னைகளை முடிந்தளவு சரி செய்யவும் உதவுவார்கள். ஏனென்றால், முற்றிய நிலையில் இருப்பவர்களை பொருத்தவரை, ஒரு கட்டம் வரைதான் சிகிச்சை அளிக்க முடியும். அதன்பிறகு, சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுவிடும்.

அதனால், அவர்களுக்கு எந்த கட்டத்தில் என்ன மாதிரியான உதவிகள் தேவை என்பதை இவர்கள் அறிந்து அவர்களுக்கு உதவி செய்வார்கள்.பொதுவாக, ஏதாவது ஒரு நோய் வந்து, அதற்காக சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்ட பிறகு, மருத்துவமனைக்கும் நோயாளிக்கும் தொடர்பு இருக்காது. ஆனால், புற்று நோயிலிருந்து மீண்டவர்கள் அப்படியில்லை. அவர்களுக்கும், மருத்துவத்துறைக்கும் வாழ்நாள் உறவு என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், நோயிலிருந்து மீண்டவர்கள், அதன்பிறகு அவர்கள் வாழும் காலம் வரை மருத்துவமனையுடன் தொடர்பில் இருந்துதான் ஆக வேண்டும்.

மேலும், நோயாளி மட்டுமில்லாமல், அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் எங்களது தொடர்பில் இருப்பார்கள். ஏனென்றால், நோயாளியைவிட அவரது குடும்பத்தினர்தான் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்கள். அதனால் அவர்களுக்கும் மன ரீதியான ஆலோசனைகள் வழங்கி கவுன்சிலிங் கொடுப்போம். மேலும், நோயிலிருந்து மீண்டவர்களை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற கல்வியையும் போதிப்போம். அதனால், இது ஒரு பெரிய அளவிலான வழிமுறைகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

எந்த புற்றுநோயால் பாதித்தவர்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்…

ஒவ்வொரு புற்றுநோய்க்கும் அதிலிருந்து மீண்டவர்களுக்கு தகுந்தவாறு வழிமுறைகள் மாறும். பொதுவாக சொல்ல வேண்டும் என்றால், பூரணமாக குணமாகியிருந்தாலும், அவர்களுக்கும் வரும்காலத்தில், மீண்டும் வர வாய்ப்புள்ளது. எனவே, நோயிலிருந்து மீண்டவர்களுக்கு முதல் மூன்று வருடம் அதிக பாதுகாப்பு தேவை. ஏனென்றால், இந்த மூன்று ஆண்டுகளில்தான் மீண்டும் வருவதற்கு வாய்ப்பு அதிகம். அப்படி மூன்று ஆண்டுகளை கடந்துவிட்டால், அவர்கள் சற்று பயம் இல்லாமல் இருக்கலாம்.

அதனால், முதல் மூன்று வருடத்துக்கு ஒரு அட்டவணை போட்டுக் கொடுத்துவிடுவோம். அந்த அட்டவணையில் குறிப்பிட்டபடி குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் பரிசோதனைக்கு வந்து தங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இது நோய்க்கு தகுந்தவாறு மாறும். இடையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது அறிகுறிகள் ஏதும் தென்பட்டாலோ,  அவர்கள் உடனே எங்களை வந்து சந்திக்க வேண்டும். மேலும், இதில் அவர்களுக்கான உணவு முறைகள், உடற்பயிற்சி முறைகள் அனைத்தும் குறிப்பிட்டிருக்கும். அதன்படி அவர்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு மீண்டும் வருவதற்கான வாய்ப்பு குறைவு.

மற்றபடி, எந்த புற்றுநோயாக இருந்தாலும், பூரணமாக குணமானவர்கள் எல்லோரையும் போலவே நார்மலான வாழ்க்கை வாழமுடியும். அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்திருக்கலாம், சிறுவயதில் இருப்பவர்கள் வேலைக்குப் போகலாம். திருமணம் செய்து கொள்ளலாம். குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம். இவர்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது. சில குறிப்பிட்ட வகையைச் சார்ந்த புற்றுநோயாளிகளுக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கும். உதாரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு, அதனால் எதுவும் பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும்.  மற்றவர்கள் நார்மலான இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழமுடியும். அதற்கு தகுந்தபடி உடல் ரீதியாகவும் இவர்கள் நார்மலாகிவிடுவார்கள்.

புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான உணவுமுறைகள் என்னென்ன..

 உணவு முறையைப் பொருத்தவரை, சில உணவுகள் புற்றுநோயை வளர்க்கும் தன்மைக் கொண்டது. அவை, கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், சிகப்பு இறைச்சி உணவுகள் (இது குடல் சார்ந்த புற்றுநோயை வளர்க்கும் தன்மை உடையது), பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் போன்றவறறை இவர்கள் முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். இவையெல்லாம் புற்றுநோய்க்கு எதிரானது, வளர்க்கக் கூடியது.

 எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என்றால் அவை, இயற்கை உணவு, வீட்டில் சமைக்கும் உணவுகள், சிறுதானியங்கள் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள், கீரை உணவுகள், காய்கறிகள், பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாகவே, காய்கறிகளும், பழங்களும் அதிகம் உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு. அதுபோன்று, புகைப்பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம் இருந்தவர்கள், நமக்குதான் முற்றிலும் குணமாகிவிட்டதே என்று மீண்டும் அந்தப் பழக்கத்தை தொடரக் கூடாது. அது மிகமிக ஆபத்தானது.

புற்றுநோயிலிருந்து மீண்ட அனைவருமே உடற்பயிற்சி மேற்கொள்ளலாமா.. எதுவும் கட்டுப்பாடுகள் இருக்கிறதா…

எந்தவகை புற்றுநோயிலிருந்து மீண்டிருந்தாலும் அவர்கள் சிறு சிறு உடற்பயிற்சி செய்வதையும், நடைப்பயிற்சி செய்வதையும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அவர்கள், உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. கட்டுப்பாடுகள் என்றால், அது எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அல்லது புற்றுநோய் எலும்பு வரை பரவியிருந்தவர்கள், முக்கியமாக முதுகெலும்பு, தொடை தாங்கும் எலும்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது.

உதாரணமாக, படியேறுவது, பளுவான பொருட்களை தூக்குவது போன்றவற்றை இவர்கள் செய்யக் கூடாது. இவர்களால் மற்றவர்களைப் போன்று அனைத்து உடற்பயிற்சியையும் செய்யவும் முடியாது. எனவே, அவர்களுக்கு தகுந்த பயிற்சிகளை நாங்கள் கற்றுத் தந்துவிடுவோம். இவர்களை தவிர்த்து மற்றவர்கள் எல்லோருமே முடிந்தளவு உடற்பயிற்சி செய்வதுதான் நல்லது.

புற்று நோய் விழிப்புணர்வு குறித்த உங்கள் கருத்து என்ன…

புற்றுநோய் என்று இல்லை எந்தவொரு நோயாக இருந்தாலும், அது குறித்த விழிப்புணர்வுதான் மிக மிக முக்கியமான ஒன்று. எந்தவொரு நோய்க்கும் விழிப்புணர்வு இருந்தாலே, பெரும் அளவில் நோயை கட்டுப்படுத்திவிடலாம்.புற்றுநோயைப் பொருத்தவரை, பெரும்பாலானவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், எனக்கெல்லாம் புற்றுநோய் வராது என்று. அதனால் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டாலும், மெத்தனமாக இருப்பார்கள். ஆனால், அது உண்மையில்லை, பிறந்த குழந்தை முதல் தொன்னூறு வயது முதியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும், எந்த வயதிலும் புற்றுநோய் வரலாம். இந்த உண்மையை அவர்கள் உணர வேண்டும்.

எனவே, ஒவ்வொருவருமே, தங்களது உணவு பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும். முடிந்த வரை தினசரி, உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அலட்சியப்படுத்தாமல் உடனே அதற்கான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். சிலர் வெளியே சொல்ல பயந்து கொண்டு, மறைத்துவிடுவார்கள். மேலும் தங்களுக்குள்ளேயே வைத்து மன உளைச்சலுக்கும் ஆளாகிவிடுவார்கள். ஆனால், நோய் முற்றும் முன்பு கண்டுபிடித்துவிட்டால் முழுமையாக குணப்படுத்திவிடலாம் என்பதை இவர்கள் உணர வேண்டும்.

இப்போது இருக்கும் நவீன காலகட்டத்தில், எந்தவித புற்றுநோயாக இருந்தாலும் , ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்துவிட்டால் பூரணமாக குணப்படுத்திவிட முடியும். அதற்கான நவீன தொழில் நுட்பங்களும், மருத்துவ சிகிச்சை முறைகளும் நிறைய வந்துவிட்டன. அதனால், எந்த தயக்கமும் இல்லாமல், மக்கள் தங்களுக்குள்ள பிரச்னையை மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுவிட வேண்டும். இந்த விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டாலே, வருங்காலங்களில் புற்றுநோயினால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

Related Stories: