இன்னல் தரும் இன்சுலின் எதிர்ப்பு நிலை... ஈசியாக தவிர்க்க எளிய வழி!

நன்றி குங்குமம் தோழி

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

‘இன்சுலின்’ என்ற வார்த்தையை நாற்பது வருடங்களுக்கு முன்னால் யாரிடமாவது கேட்டிருந்தால் தெரியாது என்றிருப்பார்கள். வெகு சிலருக்கு மட்டுமே இது சர்க்கரை நோயுடன் தொடர்புடைய சொல் எனத் தெரியும். ஆனால், இன்று பல இளைய வயதினர்களிடம் இந்த மருத்துவச் சொல் பதிந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.அப்படிப்பட்ட இன்சுலின் உற்பத்தியில் வரும் மாறுதல்கள், அதனால் ஏற்படும் விளைவுகள், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியெல்லாம் இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

இன்சுலின்...

இரைப்பையின் பக்கத்தில் கணையம் (pancreas) என்ற உறுப்பு உள்ளது. இதன் பிரதானச் செயல் இன்சுலின் எனும் ‘இயக்கு நீரை’ (Harmone) சுரப்பதுதான். இந்த ஹார்மோனின் வேலை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதுதான். அதாவது, நாம் சாப்பிடும் உணவில் உள்ள சர்க்கரை சத்துதான் நாம் இயங்க எரிபொருளாக (சக்தியாக) உதவுகிறது. இந்த சர்க்கரை குடலில் இருந்து ரத்தத்தில் கலந்து அதன் வழியாக நம் உடல் முழுவதிலும் உள்ள செல்களுக்குச் சென்று சேர்ந்து எரிபொருளாக நமக்கு பயன்படும். இந்தச் செயல்முறையில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை செல்கள் உரிந்து எடுத்துக்கொள்ள இன்சுலின் பயன்படுகிறது.

இன்சுலின் எதிர்ப்பு நிலை...

‘Insulin Resistance’ என ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்த எதிர்ப்பு நிலையில் தசைகள், கல்லீரல் போன்ற உறுப்புகளில் உள்ள செல்களால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை எடுத்துக்கொள்ள முடியாது. அதாவது, இன்சுலினிற்கு எதிர்ப்பாக இருக்கும். இதனால் ரத்தத்தில் ஒரு பக்கம் சர்க்கரை அளவு அதிகமாகிக் கொண்டே போகும். இன்னொரு பக்கம் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் அதனைக் கட்டுப்படுத்த கணையம் இன்சுலினை மேலும் அதிக அளவு உற்பத்தி செய்துகொண்டிருக்கும்.

இன்சுலின் எதிர்ப்புநிலை தொடர்ந்து நீடித்தால் அதிகப்படியான இன்சுலினை கணையம் தினமும் சுரக்க நேரிடும் என்பதால், ஒருகட்டத்தில் கணையமானது சோர்ந்துபோய் இன்சுலின் உற்பத்தியை குறைத்துக்கொள்ளும். இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்கடங்காமல் அதிகரித்து சர்க்கரை நோய் வரக்கூடும். எனவே இந்த எதிர்ப்பு நிலையை சர்க்கரை நோய்க்கான முன்அறிகுறியாக  எடுத்துக்கொண்டு கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

ஆய்வுகள் சொல்வது...

*சமீபத்திய ஆய்வு ஒன்றில் அமெரிக்காவில் மூன்றில் ஒருவருக்கும், இந்தியாவில் பத்தில் ஒருவருக்கும் இந்தப் பிரச்சினை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

*முன்பெல்லாம் ஆண்களின் எண்ணிக்கையே அதிகமாய் இருந்த நிலையில், இப்போது பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது (அதிலும் குறிப்பாக, 20 வயது முதல் 30 வயது வரையிலான பெண்கள்).

*மேலும், 30 சதவிகித தம்பதியினருக்கு இதன் காரணமாக கரு உருவாவதில் தாமதமாவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அறிகுறிகள்...

*கழுத்தைச் சுற்றி, முழங்கை போன்ற இடங்களில் கருப்பாக இருப்பது.

*சீரற்ற மாதவிடாய்.

*முகப்பரு தோன்றுவது.

*பொலிவற்ற முகம்.

*முடி உதிர்வு.

*சமச்சீரற்ற மனநிலை (Moodswings).

*உடல்சோர்வு.

*உடல் எடை அதிகரிப்பது.

*சர்க்கரை சத்து சார்ந்த பொருட்கள் மீது அதீத விருப்பம் தோன்றுவது.

*உடல் வலி.

காரணங்கள்...

இதுதான் காரணமென இன்னும் கண்டறியவில்லை. ஆனால், ஆபத்துக்காரணிகளாக கீழே உள்ளவை இருக்கின்றன.

*குடும்பத்தில் ஏற்கெனவே யாருக்காவது சர்க்கரை நோய் இருப்பது.

*உடல் பருமன் (பி.எம்.ஐ 19 - 25க்கு மேல்)

*அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது.

*உடல் உழைப்பு இல்லாத பணி செய்வது.

*போதிய தூக்கம் இல்லாமை.

*ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிப்பது.

*வயிற்றைச் சுற்றி அதிக உடல் எடை.

விளைவுகள்...

*ஒழுங்கற்ற மாதவிடாய்.

*பி.சி.ஓ.டி.

*கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய்.

*கரு தரிப்பதில் சிரமம்.

*கரு கலைய அதிக வாய்ப்புகள்.

*குறைப் பிரசவம்.

*கருவில் உள்ள குழந்தைக்கு ஏதேனும் உடல் நலக் கோளாறு ஏற்படுவது.

*அதிக உடல் எடை.

*எதிர்காலத்தில் சர்க்கரை நோய்.

கண்டறியும் முறை...

மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள்

இருந்தால், உடனடியாக அருகில் இருக்கும் இயன்முறை மருத்துவர் அல்லது பொது மருத்துவரிடம் சென்று உடலினை பரிசோதிக்க வேண்டும். கூடவே, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு, HbA1C அளவு போன்றவற்றை  ரத்த பரிசோதனையின் மூலமாக பரிசோதித்து தெரிந்துகொள்ளலாம்.

தீர்வுகள்...

இதற்கான மருந்துகள் இதுதான் என எதுவும் இல்லை என்பதால், என்னவெல்லாம் ஆபத்துக் காரணிகளாக இருக்கிறதோ, அதில் எதையெல்லாம் நம்மால் மாற்றமுடியுமோ அதனைச் செய்தால் 95% இந்த எதிர்ப்பு நிலைப்பாட்டை கட்டுக்குள் கொண்டுவர முடியும். உதாரணமாக, மரபணுவால் வரும் பாதிப்பை நம்மால் சரி செய்ய முடியாது. ஆனால், உடல் எடையை குறைப்பது, ஆரோக்கியமாக உண்பது போன்றவற்றை செய்தால் பலன் நிச்சயம்.

இயன்முறை மருத்துவம்...

*மேலே சொன்னவற்றில் மிக முக்கியமானது உடற்பயிற்சி. தசைகளை உறுதியாக்க உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும். இதனால் தசைகள் உறுதியாவதோடு, அதிக கொழுப்பு சேராது.

*மேலும், இதய - நுரையீரலின் தாங்கும் ஆற்றலை (Cardio Vascular Endurance) அதிகரிக்க ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவற்றால் உடலில் படிந்திருக்கும் கொழுப்புகள் கரையும். கூடவே, ரத்த ஓட்டம், தூக்கம், பசி, மன நலம் எல்லாம் சீராய் இருக்கும் என்பதால், கூடுதலாக கொழுப்பு சேராமல் தடுக்கும்.

*மிக முக்கியமாக அருகில் உள்ள இயன்முறை மருத்துவ மையத்திற்கோ, உடற்பயிற்சி கூடத்தில் உள்ள இயன்முறை மருத்துவரிடமோ சென்று ஆலோசனை பெற்று, தசைகளைப் பரிசோதித்து, அதற்கேற்ப அவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளையே மேற்கொள்ள வேண்டும்.

வரும் முன் காக்க...

*போதிய அளவு தூக்கம்.

*அதிகம் தொலைபேசி பயன்படுத்தாமல் இருப்பது.

*காய்கள் மற்றும் பழங்கள் மிகுதியாக எடுத்துக் கொள்வது.

*வெளி உணவுகளை தவிர்ப்பது.

*எண்ணெய் தின்பண்டங்கள் விஷயத்தில் கூடுதல் அக்கறையோடு இருப்பது.

*மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம், கோபம் ஆகியவற்றை அவ்வப்போது கவனித்து சரி செய்வது.

*தேவையான உடற்பயிற்சி மேற்கொள்வது.

*வெண்ணிற உணவுப் பொருட்களான சோறு, சர்க்கரை, உப்பு, மைதா போன்றவற்றைக் குறைப்பது.

மொத்தத்தில் எதையும் அளவோடு உட்கொண்டு, போதிய உடற்பயிற்சிகளை செய்தால் இன்சுலின் ஹார்மோன் மட்டுமல்ல... மற்ற எல்லா ஹார்மோன்களும் நம் கட்டுக்குள்தான் இருக்கும் என்பதை, நம் மனதில் அழுந்த இந்தத் தை திருநாளில் பதித்துக்கொள்வோம்.

Related Stories: