சிறுநீரகங்கள் காப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர்

மனித உடலின் `கழிவுத் தொழிற்சாலை’ எனப்படுகிறது சிறுநீரகம். நீரைச் சேமிப்பது, கழிவுகளை வெளியேற்றுவது, சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குவது எனப் பல பணிகளைச் செய்யும் பொறுப்பு சிறுநீரகத்துக்கு உண்டு. கரு உருவான நான்காவது மாதத்திலிருந்து தன் பணியைத் தொடங்கி, மரணம்வரை இடைவிடாமல் செயல்படும் சிறுநீரகம், சீராக இயங்குவதில் பிரச்னை ஏற்பட்டால், மனிதன் உயிர் வாழ்வது சிக்கலாகிவிடும்.  

உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாத சிறுநீரகத்தின் சிறப்புகள், அதில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 2006-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தான் `உலக சிறுநீரக தினம்.’ இது, ஒவ்வோர் ஆண்டும் மார்ச், இரண்டாவது வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. ‘அனைவருக்குமான சிறுநீரக நலத்தை உறுதி செய்வோம்’ என்பது 2019-ம் ஆண்டு உலக சிறுநீரக தினத்தின் நோக்கமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. வயது, பாலினம், பொருளாதார நிலை என எந்தப் பாகுபாடும் இல்லாத, ஒட்டுமொத்த மனித இனத்தின் சிறுநீரக நலத்தை உறுதிசெய்ய வேண்டும் என்பதே இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக இருக்கிறது.

சிறுநீரக நலனை உறுதிசெய்ய வேண்டுமென்றால், அதன் பணிகள், அதைப் பராமரிக்கச் செய்யவேண்டியவை என்னென்ன என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சிறுநீரகத்தின் பணிகள், அதில் ஏற்படும் பாதிப்புகள், அதற்கான தீர்வுகள் குறித்தெல்லாம் விரிவாகப் பார்ப்போம்.“உள்ளங்கையில் அடங்குமளவுக்குச் சிறிய சிறுநீரகத்தின் பணி உடலுக்கு இன்றியமையாதது. உடலில் உற்பத்தியாகும் கழிவுகள், நச்சுகளை அகற்றி, ரத்தத்தைச் சுத்திகரிப்பதோடு, உடலில் நீரின் அளவைச் சமநிலையில் வைத்துக்கொள்ளும்.

ரத்தத்திலுள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களின் அளவைச் சீராகப் பராமரிப்பது, ரத்தத்தில் அமிலத் தன்மை மற்றும் காரத் தன்மையை (PH அளவு) சமநிலையில் வைத்திருப்பது என, சிறுநீரகத்தின் பணிகளைப் பட்டியலிடலாம். குறிப்பாக, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதுடன், ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

சிறுநீரகத்தைச் சரியாகப் பராமரிப்பதில் கவனம் செலுத்தாவிட்டால், இதில் கல் உருவாவதில் தொடங்கி சிறுநீரகச் செயலிழப்புவரை கடும் பாதிப்புகள் ஏற்படலாம். சிறுநீரகப் பாதிப்புகளைக் கண்டறிய வயிற்றில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்கப்படுகிறது.இந்தப் பரிசோதனை மூலம் சிறுநீரகத்தின் அளவு, வீக்கம், சிறுநீரகக்கல், புராஸ்டேட் வீக்கம், சிறுநீர்ப்பைக் கட்டி, சிறுநீர்ப் பாதையில் அடைப்பு போன்றவற்றை அறிந்துகொள்ளலாம். ஆனால், சிறுநீரகத்தின் செயல்பாடு 90 சதவிகிதமாகக் குறையும்வரைகூட பெரும்பாலானோருக்கு பாதிப்புக்கான எந்த அறிகுறியும் தெரியாது.

சில நோயாளிகளுக்கு சிறுநீர் அளவு எப்போதும்போல சரியாகவே இருக்கும். ஆனால், பரிசோதனை செய்து பார்த்தால், கிரியாட்டினின் (Creatinine), யூரிக் ஆசிட் (Uric Acid) அளவுகள் உயர்ந்திருக்கும். சிறுநீரகம் சரியாகச் செயல்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின் மற்றும் ஜி.எஃப்.ஆர் (GFR - Glomerular Filtration Rate) அளவுகளைப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். சிறுநீரில் புரதம் வெளியாதல் உள்ளிட்ட பிரச்னைகளை சிறுநீரைப் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் அறியலாம்.

இந்தப் பரிசோதனைகள் மூலம் சிறுநீரகப் பிரச்னைகளைக் கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ளலாம். சிறுநீரகப் பிரச்னைகளில் இன்றைக்குப் பலரின் உயிரிழப்புக்குக் காரணமாக இருப்பது சிறுநீரகச் செயலிழப்புதான். சிறுநீரகம், கழிவுகளை அகற்றும் திறனை இழப்பதையே `சிறுநீரகச் செயலிழப்பு’ (Kidney Failure) என்கிறோம். இதனால், உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகள் அதிகமாகி, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

இந்த பாதிப்பை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, திடீர் சிறுநீரகப் பாதிப்பு (Acute Kidney Injury). சிறுநீரகம் திடீரெனச் செயல்பாட்டை இழக்கும் இந்த பாதிப்பை உடனடியாகக் கண்டறிந்தால், உரிய சிகிச்சை மூலம் மீண்டும் இயங்கவைக்கும் வாய்ப்பிருக்கிறது. மற்றொன்று, நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease). இந்த வகை பாதிப்பில் சிறுநீரகம், ஒரே நாளில் இல்லாமல் பல நாட்களாகச் சிறிது சிறிதாகத் திறனை இழக்கும்; இது மிகவும் ஆபத்தானது. முற்றியநிலையில்தான் இதன் அறிகுறிகள் தெரியவரும். இந்த வகைச் சிறுநீரகப் பாதிப்புக்கு சிகிச்சை அளித்தாலும், மீண்டும் சிறுநீரகத்தைச் செயல்படவைக்க முடியாது. அதேபோல, மரபுரீதியாகத் தொடரும் சிறுநீரகப் பிரச்னை, பிறவியிலேயே குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்க முடியாது. மருந்துகளால் குணப்படுத்த முடியாத நிலை வரும்போதுதான் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

பொதுவாக, சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு, சிறுநீரகப் பாதை நோய்த்தொற்று, பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய், சில மருந்துகள் மற்றும் நச்சுகள், சிறுநீர்ப்பாதை அடைப்பு ஆகிய காரணங்களால் சிறுநீரகப் பாதிப்புகள் ஏற்படும். சில நேரங்களில் காரணமே இல்லாமலும் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படலாம். சிறுநீரகம் பாதித்ததற்கான அறிகுறிகள் வெளிப்பட்டு, மருத்துவரை நாடும்போது அறிகுறிகளுக்கு ஏற்ப முதலில் மருந்துகள் அளிக்கப்படும். குறிப்பிட்ட உணவு, முறையான உடற்பயிற்சி, தகுந்த மருத்துவப் பரிசோதனையைக் கடை பிடிப்பதன் மூலம் சிறுநீரகத்தின் நலனை உறுதிசெய்யலாம்” என்கிறார் கோபால கிருஷ்ணன்.

யாரெல்லாம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்?

சர்க்கரை நோயாளிகள்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்.

மரபுவழியாக சிறுநீரகப் பிரச்னை உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

சிறுநீரில் ரத்தம் கலந்துவரும் பிரச்னை உள்ளவர்கள்.

சிறுநீர் கழிப்பதில் சிக்கல் அல்லது

எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறும் பிரச்னை இருப்பவர்கள்.

இவை தவிர அடிவயிற்றில் வலி, முதுகுவலி மற்றும் வலியுடன் ரத்தம் வெளியேறுதல், பசியின்மை, அசதி, மூச்சு வாங்குதல், வாந்தி, கட்டுப்படுத்த முடியாத அளவு ரத்த அழுத்தம் போன்றவை இருந்தால், மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அத்துடன் மருத்துவரின் ஆலோசனைப்படி சிறுநீரகத்தின் செயல்பாட்டைக் கண்டறியும் பரிசோதனைகளையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.

சிறுநீரகப் பிரச்னைகளைத் தடுக்க...

ரத்தச் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டோர் ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கிரியாட்டினின் அளவு, ரத்தத்தில் ரத்த அணுக்கள் ஆகியவற்றைப் பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது, சிறுநீரகக்கல் உருவாவதைத் தடுக்கும்; சிறுநீர்ப்பாதையில் நோய் தொற்றும் வாய்ப்பையும் குறைக்கும்.

உடற்பயிற்சி செய்பவர்கள், `வார்ம்-அப்’ செய்யாமல் உடற்பயிற்சி செய்வதையும், புரோட்டீன் பவுடர்களை வாங்கிச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். புகைப் பழக்கம், மதுப் பழக்கம் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்; சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைக் குறைத்து, பாதிப்படையச் செய்யும். எனவே இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வலி நிவாரண மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும். நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகள் எடுத்துக்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தொகுப்பு : சரஸ்

Related Stories: