கவுரி விரதம், விநாயகர் சதுர்த்தியையொட்டி கடை வீதிகளில் அலை மோதிய மக்கள் கூட்டம்

சேலம், செப்.12:கவுரி விரதம், விநாயகர் சதுர்த்தி விழாக்கள் அடுத்தடுத்து கொண்டாடப்படுவதால், சேலத்தில் உள்ள கடைவீதிகள் மற்றும் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.  நாடு முழுவதும் கவுரி விரத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், பூஜை பொருட்களை வாங்குவதற்காக, சேலத்தில் உள்ள கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நாளை(13ம் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்காக வீதிதோறும் விநாயகர் சிலைகளை வைத்து கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். ேமலும், வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபட ஏற்பாடு செய்து வருகின்றனர்.

சதுர்த்தி பூஜையில் வைத்து வழிபட தேவையான, கொண்டை கடலை, தேங்காய், பூ, பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வாங்க ஏராளமானோர் கடைவீதிகளில் குவிந்துள்ளனர். இதனால், சேலம் சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி, தேர்வீதி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதேபோல், விநாயகர் சிலை விற்பனையும் சூடுபிடித்துள்ளது. சேலம் கடைவீதி, முதல் மற்றும் 2வது அக்ரஹாரம், அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. அரை அடி முதல் 20 அடி உயரம் வரை பல விதமான விநாயகர் சிலைகளை பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். உயரத்திற்கு ஏற்ப ₹50 முதல் ₹15 ஆயிரம் வரை விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சதுர்த்தியன்று வைத்து பூஜிக்கப்படும் விநாயகர் சிலைகள், நீர்நிலைகளில் விஜர்சனம் செய்யப்படும். இதனால், சிலை கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.  

Related Stories: