ஒரே நீடில்... அத்தனை நோய்களும் குளோஸ்!

நன்றி குங்குமம் தோழி

ஒருவரின் நாடித் துடிப்பை கணித்தே அவர்களின் உடலில் உள்ள பிரச்னைகள் குறித்து தெரிந்து கொள்ள முடியும் என்கிறார் அக்குபங்சர் ஸ்பெஷலிஸ்டான டாக்டர் உமா வெங்கடேஷ். இவர் சென்னை தி.நகரில் அக்குபங்சர் குறித்த சிகிச்சையினை அளித்து வருகிறார். குறிப்பாக இவரின் ‘பல்ஸ் பேலன்சிங்’ சிகிச்சை ஜலதோஷம் மட்டுமில்லாமல் கொடிய புற்றுநோய், மூட்டுவலி, முதுகுவலி என அனைத்து விதமான நோய்களுக்கும் ஒரு தீர்வாக அமைந்து வருகிறது. பல்ஸ் பேலன்சிங் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்து விவரித்தார் டாக்டர் உமா.

‘‘1986ல் அக்குபங்சர் சிகிச்சை குறித்து முறைப்படி படித்து பட்டம் பெற்றேன். அதன் பிறகு நான் சிகிச்சை அளிக்க ஆரம்பிச்சேன். அக்குபங்சர் என்பது நீடில் தெரபி. வலியுள்ள இடங்களில் ஊசிகள் மூலம் சிகிச்சை அளிப்பது. பொதுவாக என்னிடம் பலர் மூட்டு வலி, உடல் வலி போன்ற காரணத்தால் சிகிச்சை பெற வருவார்கள். அவர்களுக்கு அக்குபங்சர் மூலம் சிகிச்சை அளித்து வந்தேன்.

அந்த சமயத்தில் தான் ஏற்கனவே வலி மற்றும் நோய்களுடன் வருபவர்களை மேலும் ஊசிகளை உடலில் குத்தி வேதனைப்பட வைக்க வேண்டுமா என்று சிந்தித்தேன். காரணம், இந்த சிகிச்சையை பொறுத்தவரை ஒரு ஊசி கொண்ட சிகிச்சை அளிக்க மாட்டோம். வலி உள்ள இடத்தில் பல ஊசிகளை உடலில் குத்தி அதற்கு ஏற்ப தான் சிகிச்சை அளிப்போம். இது போல் பல ஊசிகளை கொண்டு சிகிச்சை அளிக்கும் முறையினை மாற்றினால் என்ன என்று எனக்கு தோன்றியது. ஒரே ஊசியைக் கொண்டு பிரச்னைகளை தீர்க்க நினைச்சேன்’’ என்றவர் மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

‘‘என் கணவர் சொந்தமாக தொழில் செய்து வந்தார். அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அது எங்களுக்கு பெரிய அளவில் இழப்பினை ஏற்படுத்தியது. இதனால் நான் மனதால் பாதிக்கப்பட்டேன். ஒரு மருத்துவராக என்னால் தோல்வியை எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் அதில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காக தியானம் மற்றும் யோகா போன்ற பயிற்சியினை மேற்கொண்டேன். அந்த சமயத்தில் தான் என் குருவிடம், நாடி பார்ப்பது என்பதைப் பற்றி முழுமையாக கற்றுக் கொண்டேன். அதன் பிறகு நாடியினை அடிப்படையாக வைத்து ‘பல்ஸ் பேலன்சிங்’ சிகிச்சை முறையினை பல ஆய்வுகளுக்கு பிறகு கண்டறிந்தேன். நம்முடைய நாடியைக் கொண்டு ஒருவரின் உடலில் என்ன பிரச்னை என்று கண்டறிய முடியும். இதனை சரி செய்தால் நம் உடலில் உள்ள பிரச்னையையும் சரி செய்ய முடியும்னு எனக்கு புரிய வந்தது.

ஆரம்பத்தில் நாடி பார்த்து நோய் கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிப்பது எனக்கு கடினமாகத்தான் இருந்தது. அதன் பிறகு பல நோயாளிகளின் பிரச்னைக்கு ஏற்ப நாடியின் துடிப்பினை கணித்தேன். நோயின் தன்மைக்கு ஏற்ப நோயாளியின் உடல் அமைப்பிற்கு ஏற்ப குணமாகும் காலம் வேண்டுமானால் குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கலாம்.  ஆனால், நிச்சயம் எனது ‘பல்ஸ் பேலன்ஸ்’ சிகிச்சை எந்த நோயையும் குணப்படுத்தி விடும் என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

இந்த சிகிச்சையினை குழந்தைகள் முதல் பெண்கள், ஆண்கள், நடுத்தர வயதுள்ளவர்கள், முதியோர்கள் என அனைவருக்கும் அளிக்கலாம். ஒரு பெண் கருவுற்று இருக்கிறாள் என்பதை நாடிக் கொண்டே கண்டறிய முடியும். அதே போல் தான் மற்ற நோய்களும். ஒருவரின் உடலில் நோயின் பாதிப்பு இருக்கும் போது, அவர்களின் நாடித் துடிப்பில் மாற்றம் தெரியும். அதனை சம நிலையில் துடிக்க வைப்பது தான் இந்த சிகிச்சையின் முக்கிய அம்சம். சிகிச்சைக்கு வருபவர்கள் காலையில் எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் தான் வரவேண்டும்.

தண்ணீர் மட்டும் குடித்துக் கொள்ளலாம்.  இது முதல் தடவை என்னிடம் சிகிச்சை பெற வரும்போது மட்டுமே இதனைக் கடைப்பிடிக்க வேண்டும். நம்முடைய உடலும், உணவும் பஞ்சபூதங்களால் உருவானது.  இயற்கையில் எதுவும் சமமாக இருக்காது. நம் உடலையும் பஞ்சபூதங்கள் ஆக்கிரமித்து இருக்கிறது. உடலின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு சக்தி பாதுகாக்கிறது.

நம்முடைய உடலில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட நோய்கள் உருவாகிறது. காரணம், நாம் சாப்பிடும் உணவு முறை. ஆதிமனிதன் உணவின்றி தான் வாழ்ந்தான்.  பிரபஞ்ச சக்தி அவனுக்கு உயிர் தந்தது.  ஆனால், மனிதன் படிப்படியாக சாப்பிடத் துவங்கி இப்போது விதவிதமான உணவுகளை சுவைப்பதால் தான் நோயின் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. அதனால் தான் எதுவுமே சாப்பிடாமல் வரச் சொல்கிறேன். அவர்களின் நாடியினைப் பார்த்து அதன் சக்தியின் அளவினை ஒரே ஒரு ஊசியினைக் கொண்டு சமன் படுத்துகிறேன். இதன் மூலம் உடலுல் உள்ள பிரச்னைகள் நீங்க உடலுக்கு முழுமையான சக்தி திரும்ப கிடைக்கிறது.

விளைவு ேநாயின் பாதிப்பும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை அவர்கள் இந்த சிகிச்சையினை மேற்கொள்ளலாம். நோயின் தன்மையை நாடிக் கொண்டு பார்த்து அதற்கு ஏற்ப பிரச்சனையை சரி செய்வேன். இதன் மூலம் நம் உடலில் உள்ள உறுப்புகளுக்கு இழந்த சக்தியினை மீட்டு எடுப்பதால், நோயின் தன்மையும் படிப்படியாக குறையும். இந்த சிகிச்சை மூலம் நம் உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரு தீர்வு காணமுடியும். இந்த சிகிச்சையில் ஈடுபடும் போது பத்திய சாப்பாடு தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் இரவு ஏழு மணிக்குள் இரவு உணவினை முடித்திடவேண்டும். காலை வேளையில் காய்கறி மற்றும் பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும்.

அதேபோல் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது.  சாப்பிட்டு முடிச்சு அரை மணிநேரம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும். எந்த உணவையும் நன்கு மென்று சாப்பிட வேண்டும். ஒருவர்  நியூரோஸ்தினியா என்னும் வினோத நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். சாப்பிட முடியாது.  எழுத முடியாது.  கை திரும்பி விடும்.  அவரின் பிரச்னையை மூன்றே மாதத்தில் குணப்படுத்தினேன். இன்று வரை ஆரோக்கியமாக இருக்கிறார். இந்த சிகிச்சை மூலம் ஒருவரின் உடலில் உள்ள அனைத்து பிரச்னையையும் குணமாக்க முடியும்’’ என்றார் அக்குபங்சர் நிபுணர் உமா வெங்கடேஷ்.

தொகுப்பு : விஜயா கண்ணன்

Related Stories: