ஃபிட்னெஸ் சீக்ரெட்-வாணி போஜன்

நன்றி குங்குமம் தோழி

தமிழ்  சின்னத்திரையின் நயன்தாரா என்று  செல்லமாக  அழைக்கப்படுபவர்  நடிகை  வாணிபோஜன். “தெய்வமகள்”  தொடரின்  மூலம்  தமிழ் ரசிகர்களுக்கு  அறிமுகமானவர் இவர். சீரியலில்  நடிக்க வருவதற்கு  முன்பு  விமானப் பணிப்பெண்ணாக மூன்று ஆண்டுகள்  பணிபுரிந்துள்ளார்.  மேலும்,  மாடலாக  பல  விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.  அதன்மூலமே  திரைத்துறை இவருக்கு  கைவரப்பெற்றது.  2020-இல்  “ஓ மை கடவுளே” படத்தின் மூலம்  பெரிய திரையில் கால்பதித்தார்.  

அதைத்தொடர்ந்து,  மலேசியா டூ  அம்னிசியா, மிரள்,  கேசினோ, சியான்  60, மகான்  போன்ற  படங்களில்  நடித்துள்ளார்.  தற்போது, லவ்,  காசிமேடு, தாழ் திறவா, பாயும்  ஒளி  நீ  எனக்கு,  பகைவனுக்குக் அருள்வாய், ஆர்யன்  என அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார். மேலும்,  தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு படங்களிலும்  நடித்துவரும்வாணி, தனது ஃபிட்னஸ்  குறித்து  நம்முடன்  பகிர்ந்துகொள்கிறார்:

உடற் பயிற்சி:  என்னை  பொருத்தவரை  ஜிம்முக்குப் போய்தான் நாம  பயங்கரமா ஃபிட்டாக  இருக்க வேண்டும் என்பது எல்லாம் இல்லை.  முடிந்தளவு   லிப்ட் பயன்படுத்தாமல், படிகளில்  ஏறி, இறங்குவது. முடிந்தளவு  பக்கத்தில் உள்ள  இடங்களுக்கு  நடந்து  செல்வது,  தினமும் அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி  செய்வது  போன்றவற்றை  கடைப்பிடித்தாலே  நாம் ஃப்ட்டாக  இருக்க முடியும்.

என்னுடைய  தினசரி பயிற்சிகளில்  யோகாவிற்கு  முக்கிய இடம் உண்டு. உடற்பயிற்சி  செய்வதை தவறினாலும், தினசரி யோகா  செய்வதை தவறவிடமாட்டேன்.  அதுபோன்று, பெரும்பாலும் சூர்யன் அஸ்தமனம் ஆகும் நேரமான  மாலை 4-5 மணி அளவில்தான்   யோகா  பயிற்சிக்கு ஒதுக்குவேன். டயட்: நான்  எப்போதும் டேஸ்ட்டுக்காக  சாப்பிடுபவள்  கிடையாது. உடலுக்கு  ஆரோக்கியம் தரும்  நல்ல உணவுகள்  எதுவாக இருந்தாலும் சாப்பிட்டுவிடுவேன்.  அது  கசப்பாக  இருந்தாலும் சரி. டயட்டில்  இது முக்கியமானது  என்று  நினைக்கிறேன்.  நமது உடல் ஆரோக்கியமானதாக  இருக்க வேண்டும் என்றால்  டேஸ்ட் பார்த்து சாப்பிடக் கூடாது.

மேலும், என்னுடைய  டயட்டீஷியன் அறிவுரைப்படி  தற்போது, காபி, கோதுமை , மைதா, போன்றவற்றை   சாப்பிடுவதை  நிறுத்திவிட்டேன். மேலும்,  பால் பொருள்களையும் குறைந்தளவே  எடுத்துக்கொள்கிறேன்.  காபிக்கு பதில்  தேன் கலந்த லெமன் ஜூஸ் அல்லது கீரின் டீ  எடுத்துக்கொள்கிறேன்.  காலை  உணவாக  ஓட்ஸ் கஞ்சி, பழங்கள்  போன்றவற்றை  எடுத்துக்கொள்கிறேன். முக்கால்வாசி  வெஜ் உணவைதான் விரும்பி சாப்பிடுவேன்.  நான்வெஜ்  எப்பவாவதுதான் சாப்பிடுவேன். அதில் மிகவும் பிடித்தது சிக்கன்தான்.

சவுத் இந்தியன் உணவுகள்  ரொம்ப பிடிக்கும். நார்த் இந்தியன்  ரெஸ்டாரண்ட்  போனால் கூட  சவுத் இந்தியன்  உணவு இருக்கா என்று மெனுகார்ட்டில் தேடுவேன். வீட்டில்  சமைத்து சாப்பிடுவதில்  ரசம் சாதம் ரொம்ப பிடிக்கும்.

மேலும்,  டயட்  என்று  எடுத்துக் கொண்டால்  அதில் மிக முக்கியமாக  கடைப்படிக்க வேண்டியது   நேரம் தவறாமல், சரியான  நேரத்துக்கு  சத்துக்கள்  நிறைந்த  உணவை  சாப்பிட வேண்டும். அதை மிகவும் சரியாக கடைப்பிடித்து வருகிறேன். உதாரணமாக, இரவு உணவைக் கூட 7.30- 8.00 மணிக்குள்  முடித்துவிடுவேன்.  அதுபோன்று சாப்பிட்டதும் போய்த் தூங்கச் செல்லாமல், சுமார் 2 மணி நேரம் கழித்துதான்      தூங்கச்செல்வேன். பெரிய அளவில் டயட்டோ, உடற்பயிற்சியோ  செய்ய  முடியாதவர்கள் கூட இரவு  உணவைச் சீக்கிரம்  சாப்பிடு

வதும்,  சாப்பிட்டு  முடித்து 2 மணி நேரம் கழித்து  தூங்குவதையும்  கடைப்பிடித்தாலே, பெரிய வித்தியாசத்தை  நிச்சயம்  உணர முடியும்.

பியூட்டி :   என்னுடைய ஸ்கின் பாதுகாப்பிற்காக, க்ளன்சர்,  டோனர், மாய்சுரைஸர் லோஷன், சன் ஸ்க்ரீன் போன்றவை  எப்போதும் மேக்கப் கிட்டில்  கட்டாயம்  இருக்கும்.  இதைத்தவிர  தினசரி  தேங்காய்  எண்ணெயை  பயன்படுத்துவேன். வாரத்தில்  இரண்டு  நாள்கள்  உடல் முழுவதும்  தேங்காய் எண்ணெயைத்  தடவிக் கொள்வதும்  உண்டு.

மற்றபடி  மேக்கப் என்று எடுத்துக் கொண்டால்  எனக்கு  லைட்  மேக்கப் செய்வதுதான்  மிகவும்  பிடித்தமானது.  அதுபோன்று, வெளி இடங்களுக்குப்  போகும்போது, தலைமுடி பவுன்ஸாக  இருப்பது ரொம்ப பிடிக்கும் அதற்காக ஹேர்  புரோட்க்டர் எல்லாம் போட்டுகிட்டு  ஹேர்  ஸ்ட்ரைட்டனிங்  செய்து  முடியை  லேசாக  பவுன்ஸாக  வைத்துக் கொள்வேன். இவ்வளவுதான் என்னுடைய பியூட்டி  ரகசியம். மற்றபடி,  ஸ்கின்னை  ட்ரை ஆகாமல்  பார்த்துக் கொண்டாலே ,  தோல்  பளபளப்பாகவும், அழகாகவும்  காட்சி அளிக்கும்.

தொகுப்பு : ஸ்ரீ தேவி குமரேசன்

Related Stories: