கல்லார்க்கும் உதவும் வல்லாரை

நன்றி குங்குமம் தோழி

யோசன வல்லி என்றழைக்கப்படும் வல்லாரை நீர்நிலைகளுக்கு அருகிலும், தோட்டங்களிலும், படர்ந்து வளரக்கூடிய ஒரு சிறு செடி இனம். இதை அளவுடன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை அளிக்கும் காயகற்ப மூலிகை. இதிலுள்ள அமினோ அமிலங்கள் மூளையில் அசைட்டைல்கோலைன் சுரப்பை கட்டுப் படுத்துகிறது, இதனால் இது மூளையின் உயர் செயல்திறன் அலகான டெம்பரல் பகுதியிலுள்ள ஹிப்போகாம்பஸ் செல்களை வலுப்படுத்தி கற்கும் திறன், சமயோசித முடிவுகள் எடுத்தல் ஆகியவற்றை அதிகரித்து ஞாபக மறதியை நீக்குகிறது, இதனால் அல்சீமர் நோயாளிகளுக்கு நல்ல பலனைத் தருகிறது.இதனாலேயே ‘‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே” என்ற பழமொழி இதற்குண்டு.

தேரையர் சித்தர் அருளிய தன்னுடைய பொருட்பண்பு நூலில் வல்லாரையை பற்றி

‘‘அக்கர நோய் மாறும் அகலும் வயிற்றிழிவு

தக்கவிரத் தக்கடுப்புத் தானேகும்- பக்கத்தில்

எல்லாரை யுமருந்தென்றே உரைத்து நன்மனையுள்

வல்லாரையை வளர்த்து வை’’

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.வல்லாரையை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், ரத்த கழிச்சல், வயிற்று கடுப்பு,தொண்டை கம்மல், இவை நீங்கும். வல்லாரையில் காமா அமினோ பூட்டிரிக் அமிலம், ஆசியாடிக் அமிலம் இவைகள் உள்ளன, இவை மூளை செல்களை ஊக்கப்படுத்தி, மூளையின் செயல்பாட்டு திறனை அதிகரிக்கிறது.நூறு கிராம் வல்லாரையில் கார்போஹைட்ரேட் 7.5 விழுக்காடு புரதம் 3. 28% விழுக்காடு, கொழுப்பு 1.4 விழுக்காடு, நார்ச்சத்து 13.8 விழுக்காடு,பால்மிடிக் அமிலம், லினோலிக் அமிலம், லாரிக் அமிலம் உள்ளது. இதில் மெத்தியோனின் இருப்பதால் கல்லீரல் நோய்களை குணப்படுத்தும்.இரும்புச்சத்து5.4 மிகி, கால்சியம் -26.7 மிகி, மக்னீசியம் 16.4 மிகி, வைட்டமின் ஏ 0.8 மைக்ரோ கிராம், வைட்டமின் பி1 0.91 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 11 மிகி அளவில் உள்ளது.

வாய்ப் புண் குணமாக: வல்லாரை இலை ஐந்து முதல் ஆறு எடுத்து நான்கு முதல் ஐந்து மிளகு ஒரு சிறு திரி  பூண்டு இவைகளை சேர்த்தரைத்து காலை மாத்திரம் உணவில் மோருடன் உட்கொண்டு வர வாய்ப்புண், குடல் புண் முற்றிலும் நீங்கும் இதை 45 நாட்கள் கொடுக்க வேண்டும்.தினமும் காலையில் ஒன்று முதல் ஐந்து வல்லாரை இலைகளை மூன்று மிளகு சேர்த்து உண்டு வந்தால் அறிவுத்துலங்கும் ஞாபக சக்தி அதிகரிக்கும்,

இதை தேரையர் சித்தர் தன்னுடைய வெண்பாவில்;

‘‘வல்லாரைக் கற்பமுண வல்லாரை யார் நிகர்வார்

கல்லாரைப் போலக் கலங்காமல் -

வல்லாரைச்

சாறு மிலவணமுஞ் சாபத்திரி யுமுண்ணப்

பேருமடி வல்லைப் பிணி”

கூறியுள்ளார்.

இது உடலுக்கு நல்ல வலுவைத் தந்து உடலில் நோய் அணுகாதவாறு பாதுகாக்கும்.பெருவயிறு நீங்க: வல்லாரை சாற்றில் உப்பு சிறிதளவு சாதிப்பத்திரி பொடி சேர்த்து காலை இரவு இருவேளை கொடுக்க பெருவயிறு, கல்லீரல் பிணிகள் குணமடையும்.விதை வீக்கம் குணமடைய: வல்லாரை இலையை அரைத்து விரை வீக்கமுள்ள இடத்தில் பூசி வர வீக்கம் குறையும், கூடவே வல்லாரைச் சாறு நான்கு முதல் ஐந்து துளி வீதம் காலை, இரவு இரு வேளை உள்ளுக்கு கொடுக்க வேண்டும்.

குளிர் ஜுரம் நீங்க: வல்லாரை இலை, துளசி இலை, மிளகு, இவைகளை சம அளவாக சேர்த்தரைத்து அதில் 65 மில்லி கிராம் அளவு காலை, மாலை கொடுத்து வர எல்லா குளிர் சுரங்களும் நீங்கும்.

பல் மஞ்சள் நிறம் மறைய: வல்லாரைக் கீரையை நிழலில் உலர்த்தி அதை பொடித்து, அந்தப் பொடியை வைத்து காலை, மாலை இருவேளை பல் துலக்கி வர பற்களில் காணப்படும் மஞ்சள் நிறம் மறையும், பல்ஈறுகள் வலுப்படும்.

வல்லாரைக் கீரை துவையல்: வல்லாரை ஒரு கட்டு, சின்ன வெங்காயம் ஐந்து,  வரமிளகாய் மூன்று,ஒரு டீஸ்பூன் உளுந்தம் பருப்பு, சிறிது கொடம் புளி, சிறிதளவு தேங்காய்த் துருவல், தேவையான அளவு உப்பு.

நல்லெண்ணெய் வைத்து கடுகு தாளித்து அதில் வெங்காயம், வல்லாரை இலை, புளி,இவைகளை வதக்க வேண்டும் , சூடு ஆறிய பிறகு அரைத்து எடுக்க வேண்டும். இது சோற்றுடன் வைத்து சாப்பிட இட்லி, தோசை இவைகளுடன் வைத்து சாப்பிட உகந்தது, இதனால் ஞாபக சக்தி பெருகும், அறிவு துலங்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், வாய்ப் புண்கள், வயிற்றுப் புண்கள் குணமடையும்.

இரைப்பு நோய்,தொண்டைக் கம்மல் குணமடைய: வல்லாரை இலை-2 ஆடாதோடை இலை -2, திப்பிலி-2, தேன் இவைகளை சிதைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து காலை 30 மில்லி இரவு 30 மில்லி கொடுத்து வர இரைப்பு நோய், தொண்டை கம்மல் குணமடையும்.

தொகுப்பு : திலீபன் புகழ்

Related Stories: