குளிர்கால சரும வறட்சி... தீர்வுகள்!

நன்றி குங்குமம் தோழி

பொதுவாக, பனிக்காலம் தொடங்கிவிட்டாலே குளிர்ந்த காற்றானது, நமது  சருமத்தில்  உள்ள  ஈரப்பதத்தை  உறிந்து  கொண்டு,  சருமத்தை  வறட்சியாக்கிவிடும். இதனால்தான், நாம் குளித்துவிட்டு வந்ததும், கை, கால்களில் வெள்ளை வெள்ளையாக தெரிவதும், நகத்தில் லேசாக கீறினால் வெள்ளையாகக் கோடுவிழுவதும் நிகழ்கிறது. இதனால், தோல் வறண்டு, சருமம்  பொலிவிழந்து காட்சி தரும். மேலும், உதடு வெடிப்பு, பாத வெடிப்பு போன்றவையும்  ஏற்படும்.  அதிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும் எளிய வழிகள்  சிலவற்றை தெரிந்து கொள்வோம்:

சரும வறட்சி

சரும வறட்சியிலிருந்து பாதுகாக்க இந்த நான்கு பொருட்கள் இருந்தால் போதும்: அவை, தேங்காய் எண்ணெய், கற்றாழை (ஆலுவேரா)  ஜெல்,  விட்டமின்  ஈ  கேப்சூல். (டியூப்  மாத்திரை வடிவில்  இருக்கும்  விட்டமின் ஈ  சத்து  நிறைந்த  எண்ணெய்)   அடுத்து  கமலா  ஆரஞ்சு. இந்த  நான்கு பொருட்களை  வைத்து  நமது  தோல் வறட்சியைப் போக்கும் லோஷன்  ஒன்றை  தயார்  செய்து கொள்ளலாம். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்:

சுத்தமான  தேங்காய்  எண்ணெயை  பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது  வீட்டிலேயே  தேங்காய் எண்ணெயை  காய்ச்சிக் கொள்ளுங்கள். அடுத்து கற்றாழை  ஃப்ரெஷ்ஷாக  கிடைத்தால்   எடுத்து வந்து  அதன் உள்ளிருக்கும் சதைப் பகுதியை மட்டும்  எடுத்து  மூன்று அல்லது நான்கு முறை தண்ணீரில்  அலசிவிட்டு,  மிக்ஸியில் அடித்துக் கொள்ளலாம்.  அப்படி கற்றாழை கிடைக்கவில்லை என்றால்   கடைகளில்   ஆர்கானிக்  கற்றாழை  ஜெல்   கிடைக்கிறது  அதனை  வாங்கிக் கொள்ளலாம்.

பின்னர், தேங்காய் எண்ணெய் 100 கிராம் எடுத்தால்,  கற்றாழை ஜெல்  ஒரு  100 கிராம்  எடுத்துக்கொள்ள வேண்டும்.  இதனுடன் 4-5 விட்டமின் ஈ கேப்சூலில் இருக்கும் எண்ணெயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.  அதனுடன் 1 கமலா ஆரஞ்சு பழத்தின் சாறு சேர்க்கவும். இவை நான்கையும் ஒன்று சேர்த்து நன்றாக கலந்தால், லோஷன் பதத்திற்கு வந்துவிடும்.  இதனை ஒரு கண்ணாடி பாட்டலில் சேமித்து வைத்துக் கொண்டு, காலை குளித்தப் பிறகும், இரவில் தூங்க செல்வதற்கு முன்பு ஒரு  முறையும்  கை, கால்களில்  தடவிக்  கொண்டால்  சருமம்  ஈரப்பதத்துடன் இருக்கும்.

ஆரஞ்சு பழச்சாறு வேண்டாம் என்று நினைப்பவர்கள்.  தேங்காய் எண்ணெய், கற்றாழை, விட்டமின் ஈ எண்ணெய்  மூன்றை மட்டும் கலந்து வைத்துக்  கொண்டு,  காலை, மாலை  இருவேளை  கை, கால்களில்  தடவி வரலாம். ஆனால், பெண்கள்  தடவிக் கொள்வதாக இருந்தால், ஆரஞ்சு பழச்சாறு  சேர்ப்பது மிகவும்  பயன் உள்ளதாக  இருக்கும்.  உதாரணமாக,  குளிர்காற்றினால்  உடலில்   ஏற்படும் வறட்சியால்  தோல்  கருத்துப் போவது  சரியாகும். மேலும், இது நிறத்தை பாதுகாக்கவும்,  டல்லான  தோலை  ஃப்ரெஷ்ஷாக  வைத்திருக்கவும்  உதவும். ஆண்கள் மட்டும் தடவிக் கொள்வதாக இருந்தால், தேங்காய்  எண்ணெய்  மற்றும்  கற்றாழை  ஜெல் மட்டும் போதும். வெளியே போகும்போது, கை, கால்களில் தடவிக் கொண்டு போனால், குளிர்காற்றினால், ஏற்படும்  வறட்சியிலிருந்து தோல் வறண்டு விடாமல் பாதுகாக்கும்.

உதடு வெடிப்பு  

உதடு  வெடிப்புக்கு  தேங்காய்   எண்ணெயுடன்    சிறிது  தேன்  சேர்த்து  கலந்து   தினமும் உதட்டில் தடவி வரலாம்.  பெண்கள் தடவிக் கொள்வதாக  இருந்தால்,  பீட்ரூட் சாறு,  தேங்காய் எண்ணெய்,  தேன்  மூன்றையும்  கலந்து தடவி வரலாம்.  தினமும்  கலப்பதற்கு  நேரமில்லை  என்றால், கூடுதலாக  எடுத்து  கலந்து, அந்த  லோஷனை  ஒரு கண்ணாடி பாட்டலில் சேமித்து  வைத்துக் கொண்டு, தினமும்  சிறிதளவு  எடுத்து  தடவிக்  கொள்ளலாம்.  இது  உதட்டில்  வெடிப்பு  ஏற்படுவதை தடுக்கும்.  மேலும் உதட்டை ஈரப்பதமாக வைக்கவும், உதட்டின்  நிறத்தை  கூட்டவும்  பயன்படும்.  பீட்ரூட்  சாறு  வேண்டாம்  என்று  நினைப்பவர்கள், கமலா  ஆரஞ்சு  பழத்தின் சாற்றையே  பயன்படுத்தலாம். நல்ல  பாதுகாப்பு  கிடைக்கும்.

பாத வெடிப்பு

தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல்  கலந்த விழுதைப்  பாதவெடிப்புக்கும்  பயன்படுத்தலாம்.  வெளியே  போகும்போது   பாதங்களில்  இந்த ஜெல்லை தடவி  சிறிது நேரம்  வைத்திருந்து  பின்னர், கால்களில் சாக்ஸ்  போட்டுக் கொண்டு  போகலாம்.  இப்படி  செய்வதனால்  விரைவில்  பாத வெடிப்பு நீங்கி  பாதங்கள்  பாதுகாப்பாக  இருக்கும்.

பூஞ்சைத் தொற்று

இந்த  குளிர்காலச் சூழலில்  பொதுவாகவே, சருமத்தில்  பூஞ்சை  தொற்றுகள்  ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.  எனவே,  பூஞ்சை தொற்றிலிருந்து பாதுகாக்க,  தேங்காய் எண்ணெயை  மட்டுமே  பயன்படுத்தலாம்.  தேங்காய்  எண்ணெய் ஆன்டி பங்கலாகவும்  செயல்படுவதால்,  சருமத்தில்   பூஞ்சை  தொற்றுகள்  ஏற்படுவதை தடுக்கும்.  அப்படியே  பூஞ்சை   தொற்று ஏற்பட்டிருந்தாலும்,  தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து  பயன்படுத்தும்போது  நல்ல நிவாரணம்  கிடைக்கும்.

தொகுப்பு : ஸ்ரீ தேவி குமரேசன்

Related Stories: