உணவு ரகசியங்கள்-வைட்டமின் “பி” நிறைந்த உணவுகளும் குறைபாட்டு நோய்களும்

நன்றி குங்குமம் தோழி

உணவியல் நிபுணர் வண்டார்குழலி

உணவுகளில், சைவ மற்றும் அசைவ உணவுகள் இரண்டிலுமே ஒருவருக்கு ஒருநாளைக்குத் தேவையான அளவில் “பி”வைட்டமின்கள் கிடைக்கின்றன.“பி” வைட்டமின்கள் அனைத்துமே 1 மி.கி, 1.5  மி.கி, 30 மைக்ரோ கிராம், 10 மி.கி என்ற அளவிலேயே இருப்பதாலும்,  நீரில் கரைபவை என்பதாலும், உடலில் சேமித்து வைக்கப்படுவதில்லை. இதனால் பெரும்பாலும் நச்சுத்தன்மை அல்லது மிகை நிலையும் ஏற்படுவதில்லை. ஆனாலும், “பி” காம்ப்ளக்ஸ் மருந்தாகக் கொடுக்கும் நிலையில் ஒருநாளைக்கு 50 மி.கி அளவுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரே உணவில் பெரும்பான்மையான “பி” வைட்டமின்கள் இருக்கிறதென்றால் அது இறைச்சி உணவுதான். தயமின், ரிபோபிளேவின், நியாசின், பைரிடாக்ஸின் மற்றும் சயனோகோபாலமின் போன்ற 5 வகையான வைட்டமின்கள் ஒன்றாக இருக்கின்றன.

வைட்டமின் “பி” நிறைந்த உணவுகள்

தயமின் (B1) - மீன், பருப்புகள், பச்சைப் பட்டாணி, சூரியகாந்தி விதை போன்றவற்றில் தயமின் சத்து நிறைவாக இருப்பதுடன், குழந்தைகளின் இணை உணவுகளிலும் தானிய வகை நொறுக்குகளிலும் செறிவூட்டம் செய்யப்படுகிறது. ரிபோபிளேவின் (B2) - பால், பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்ற பால் பொருட்களில் முதன்மையாக இருக்கும் ரிபோபிளேவின் சத்து, காளான்களிலும் இருக்கிறது. மேலும், சோயாபீன்ஸ், பீன்ஸ், அடர்பச்சை கீரைகள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவற்றிலும் இருக்கிறது. இவைத் தவிர, ஆட்டு ஈரல், மீன்கள், முழுதானியங்கள், செறிவூட்டப்பட்ட உணவுகளிலும் போதுமான அளவு ரிபோபிளேவின் சத்து உள்ளது.

நியாசின் (B 3) - சைவ உணவுகளைவிட, அசைவ உணவுகளில் அதிகம் நியாசின் சத்து உள்ளது. குறிப்பாக, பெரிய மீன்கள், ஈரல், பிற இறைச்சி வகைகளில் நியாசின் நிறைவாக இருக்கிறது. தோல் நீக்கப்படாத தானியங்கள், கைக்குத்தல் அரிசி, செறிவூட்டம் செய்யப்பட்ட தானியவகை உணவுகள், பட்டாணி போன்றவற்றிலும் இந்த சத்து இருக்கிறது.

பான்டோதனிக் அமிலம் (B5) - கால்

நடைகளின் இறைச்சி, ஈரல், பெரிய மீன்கள் போன்றவை பான்டோதனிக் அமிலத்தைப் போதுமான அளவில் கொடுக்கின்றன. மேலும், முழு தானியங்கள், உருளைக்கிழங்கு, தக்காளி போன்றவற்றிலும் இந்த சத்து உள்ளது. இந்த வைட்டமின் “பி5”, பதப்படுத்தலின்போது விரைவாக அழிந்துவிடும் தன்மையைக் கொண்டிருப்பதால், அவ்வளவாக செறிவூட்டம் செய்யப்படுவதில்லை. எனவே, இயற்கையில் கிடைக்கும் சைவ மற்றும் அசைவ உணவுகளிலிருந்துதான் இந்த சத்தைப் பெறவேண்டும்.

பைரிடாக்ஸின் (B6) - பருப்பு வகைகளில் பைரிடாக்ஸின் இருந்தாலும், கொண்டைக்கடலையில் சற்று அதிகமாகவே இருக்கிறது. உருளைக்கிழங்கு மற்றும் வாழைப்பழத்தில் நிறைவான அளவு பைரிடாக்ஸின் இருக்கிறது. அசைவ உணவுகளில் ஈரல், மீன்கள் போன்றவற்றிலும் இந்த சத்து இருப்பதுடன், பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் போன்ற கொட்டை வகை உணவுகளிலும் பைரிடாக்ஸின் சத்து இருக்கிறது. இவை தவிர செறிவூட்டம் செய்யப்பட்ட தானியங்களிலும் இந்த சத்து இருக்கிறது.

பயோடின் (B7) - முழு தானியங்கள், கொட்டை உணவுகள், பால், இறைச்சி உணவுகள், மீன்கள் போன்றவற்றில் பயோடின் சத்து அதிகம் உள்ளது என்றாலும், முட்டை பயோடின் நிறைந்த பிரதான உணவாக இருக்கிறது. வாழைப்பழம் மற்றும் காளான் வகைகளிலும் இந்த சத்து உள்ளது.

ஃபோலிக் அமிலம் (B9) - பழங்களில் ஆரஞ்சு, தர்பூசணி வகைகள், பப்பாளி போன்றவற்றிலும், காய்களில் முட்டைகோசுஸ், வெண்டைக்காய், காலிஃப்ளவர், உருளை, பீட்ரூட் போன்றவற்றிலும் ஃபோலிக் அமிலம் இருக்கிறது. இருப்பினும், அடர் பச்சை காய்கள் மற்றும் கீரைகள் நிறைவான அளவில் போலிக் அமிலத்தைக் கொடுக்கின்றன. இவை  தவிர பீன்ஸ், பருப்புகள், கொட்டை உணவுகளிலும் இந்த சத்து இருக்கிறது.

சயனோகோபாலமின் (B12) - இந்த சத்து, மாமிச உணவுகளில் பிரதானமாகக் கிடைப்பதுடன், செறிவூட்டப்பட்ட தானிய உணவுகளிலும் அதிகம் கிடைக்கிறது. இதற்கு அடுத்தபடியாக தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பால் உணவுகளிலும் சயனோகோபாலமின் இருக்கிறது. சைவ உணவுகளில் சற்றே குறைவாகத்தான் இந்த சத்து இருக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது.

“பி”வகை வைட்டமின்களின் குறைபாட்டு நிலை “பி”வகை வைட்டமின்களின் குறைபாடு என்பது, இவ்வகை வைட்டமின் நிறைந்த பொருட்களை சரியான அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளாததால் வருகிறது என்று கூறுவதைவிட, அவை போதுமான அளவில் உடலால் உட்கிரகிக்கப்படாததால்தான் வருகிறது என்று கூறலாம். காரணம், நோய்க்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள், ஆல்கஹால் மற்றும் குடல் தொடர்பான நோய்கள் இருக்கும் நிலையில் வைட்டமின் “பி” வகைகள் பெரும்பாலும் உட்கிரகிக்கப்படுவதில்லை. இதன் காரணமாகத்தான், ஏதேனும் நோய்நிலை இருப்பின், அந்த நோய்க்கான குறிப்பிட்ட மருந்துகளுடன், வைட்டமின் “பி” வகைகள் அல்லது “பி” காம்ப்ளக்ஸ் மருந்துகள் தவறாமல் கொடுக்கப்படுகின்றன.

தயமின் (B1) - தொடர்ச்சியான தயமின் சத்து குறைபாட்டினால், “பெரிபெரி” (Beriberi) என்னும் நோய் ஏற்படுகிறது. இதன் அறிகுறிகளாக பசியின்மை, உடல் சோர்வு, குழப்பமான மனநிலை, நினைவிழப்பு, தசைகளில் தளர்ச்சிநிலை, கை கால்களில் நீர் கோர்த்து வீக்கமடைதல் போன்றவை காணப்படும். தயமின் சத்து  உட்கிரகிக்கப்படுவதே குறைவான அளவில்தான் என்பதால், பெரும்பாலும் மிகைநிலை ஏற்படுவது கிடையாது.

ரிபோபிளேவின் (B2) - வைட்டமின் “பி2” குறைபாட்டால், “ஏரிபோபிளேவினோஸிஸ்” என்னும் நிலை ஏற்படுகிறது. இதன் அறிகுறியாக, வாய் ஓரத்தில் சிவந்து புண் ஏற்படுதல், மூக்கின் இருபுறமும் தோல் அரிப்புடன் சிவந்து காயம் ஏற்படுதல், வறட்சியான தோல், வாய் உள்பகுதி மற்றும் நாக்கில் கொப்புளங்கள் மற்றும் அல்சர் என்று சொல்லக்கூடிய புண், உதடுகள் சிவந்து தடித்தல், தொண்டை அழற்சி, விரல்களில் சிரங்கு போன்றவை காணப்படும். முறையாகப் பரிசோதித்து, தேவையான அளவில் ரிபோபிளேவின் சத்தினை “பி காம்ப்ளக்ஸ்” மருந்துகள் மூலம் கொடுக்கும்போது, குறைபாட்டு நிலை சரிசெய்யப்படும்.

நியாசின் (B3) - தொடர்ச்சியாக நியாசின் அளவு குறைபாடாக இருக்கும் நிலையில், உடலில் தடிப்பு ஏற்பட்டு, தோல் உரிதல் இருக்கும். குறிப்பாகக் கோடையில் தோலில் சூரிய ஒளி படும்போது, இந்த அறிகுறிகள் அதிகமாகும். மேலும், நினைவிழப்பு, அவ்வப்போது தலைவலி, மயக்கம், சோர்வு நிலை, மன அழுத்தம் இருப்பதுடன், குமட்டல், வாந்தியும் ஏற்படும். இந்நிலையே “பெல்லக்ரா” எனப்படுகிறது.  

பான்டோதனிக் அமிலம் (B5) - இந்த “பி” வகை சத்து, பெரும்பாலும் அனைத்து உணவுகளிலிருந்தும் பெறப்படுவதால், குறைபாடு என்பது அரிதுதான். என்றாலும், பல்வேறு நோய்நிலைகளில், “பி காம்ப்ளக்ஸ்” சத்துக் குறைபாடு ஏற்படும்போது, குறிப்பாக இந்த சத்தும் உடலில் குறைந்துவிடுகிறது. இதன் அறிகுறியாக, உடல் சோர்வு, குமட்டல், தலைவலி, தசைவலி, தூக்கமின்மை, கை கால்களில் உணர்ச்சியின்மை தற்காலிகமாக ஏற்படுதல் போன்றவை காணப்படும். சற்று தீவிர நிலையில், இதயத்தின் சீரான இயக்கம் தடைபடுவதும் நிகழலாம்.

பைரிடாக்ஸின் (B6) - நாட்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு, நாட்பட்ட செரிமானப் பிரச்னைகள், தொடர்ச்சியான மதுப்பழக்கம், வலிப்பு நோய், தைராய்டு மிகைநிலை போன்றவற்றிற்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விளைவுகள், டயாலிசில் போன்றவற்றால் பைரிடாக்ஸின் குறைபாடு ஏற்படுகிறது. இந்த சத்தின் குறைபாட்டு நிலை அறிகுறிகளாக, தோல் நோய்கள், “Glossitis” என்னும் வீக்கமான மற்றும் சிவந்து தடித்த நாக்கு, உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசிதல் (cheilosis), குழப்பமான மனநிலை, நரம்பியல் சார்ந்த சிறு சிறு உபாதைகள் போன்றவை ஏற்படும்.

 

பயோடின் (B7) - பயோடின் சத்து குறைபாடு என்பது நேரடியாக உணவு வழியாக வருவதைவிட, “biotinidase” என்ற என்சைம் அல்லது நொதி குறைவாக இருக்கும் நிலையில், உணவிலிருக்கும் “பயோடின்” உட்கிரகிக்கப்படுவதும் குறைபாடாகி ஏற்படுவதுதான்.  இந்த நொதி குறைபாடு, ஒருவகையில் பிறவியிலேயே மரபணு குறைபாடாகக் கூட இருக்கலாம். உணவுமூலம் நடுத்தர வயதினருக்குக் குறைபாடு ஏற்படும்போது, கை கால் நடுக்கம், தோல் நோய்கள், உறுதியிழந்து அடிக்கடி உடைந்துவிடும் நகங்கள், மன அழுத்தம், சோம்பல்நிலை, அடிக்கடி கண்நோய் ஏற்படுதல், கண்கள், காது, மூக்கு, வாய், மலப்புழை போன்ற இடங்களைச் சுற்றிலும் சிவந்து எரிச்சலுடன் காணப்படுதல் போன்றவை அறிகுறிகளாக

இருக்கும்.

ஃபோலிக் அமிலம் (B 9) - ஃபோலிக் அமில சத்தின் குறைபாடு என்பது தனித்தும் ஏற்படுகிறது. மற்றொரு “பி” வைட்டமின் சயனோகோபாலமின் (பி 12) சத்துடன் இணைந்தும் ஏற்படுகிறது. இந்த இரண்டு சத்துக்களும் ஒன்றாகக் குறையும்போது, எலும்பு மஜ்ஜையில் உருவாகும் ரத்த சிவப்பணுக்கள், அசாதாரண நிலையில், அளவில் மிகப்பெரியதாக இருக்கும் நிலையில்,  ரத்த சோகையை ஏற்படுத்துகிறது. கருவுற்ற தாயின் உடலில் ஃபோலிக் அமிலம் மற்றும் குறைபாடானது, பிறக்கும் குழந்தையில் நரம்பு மண்டலம் உறுதியில்லாமல் இருப்பதும், குறிப்பாக “Spina bifida” என்னும் தண்டுவடத்தில் பாதிப்பும் ஏற்படுகிறது.

சயனோகோபாலமின் (B12) - கோதுமையில் இருக்கும் “குலூட்டன்” என்ற புரதம் ஏற்படுத்தும் ஒவ்வாமையால், சிறுகுடலில் சீராய்ப்பும், அழற்சியும் ஏற்பட்டு அதனால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். குலூட்டன் இருக்கும் உணவுகளை உண்பவர்களுக்கு வயிற்றுப்போக்கும் பிற உபாதைகளும் ஏற்படுவது “celiac” நோய் எனப்படும். இந்நிலையில் சயனோகோபாலமின் குடலால் உட்கிரகிக்கப்படுவது தடுக்கப்பட்டு, குறைபாடு ஏற்படும்போது, ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியும் குறைகிறது. இதன் காரணமாக ஏற்படும் ரத்தசோகை “pernicious anemia” எனப்படுகிறது. சயனோகோபாலமின் சத்துக் குறைபாட்டின் அறிகுறிகளாக வயிற்றுப்போக்கு, கால் கைகளில் வீக்கம், பல் ஈறுகளில் ரத்தக்கசிவு, நெஞ்செரிச்சல், தலைசுற்றல், பசியின்மை, வெளிரிய தோல், மூச்சிரைப்பு போன்றவை காணப்படும்.  

Related Stories: