ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அவகோடா!

நன்றி குங்குமம் தோழி

சத்துக்கள்  மிகுந்த  அவகோடா பழம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகச் சிறந்த பங்கு வகிக்கிறது.  இப்பழத்தின் சதைப் பகுதி நெய் சத்து மிகுந்துகாணப்படுவதால், நெய்ப்பழம்,  வெண்ணெய்ப்பழம்,  பட்டர் ஃப்ரூட் என்று பல பெயர்களிலும்  இது அழைக்கப்படுகிறது.இதில் நல்ல கொழுப்புகள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்துள்ளன.

வறண்ட சருமத்தினருக்கு இப்பழம் ஒரு வரப் பிரசாதம். எண்ணெய் சத்து மிகுந்த இப்பழம் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பிலும் முக்கிய இடம் வகிக்கின்றது.

சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்னைகளை தீர்க்க இந்த பழத்தை நாம் சாப்பிடலாம்.  இது சிறுநீரை அதிகளவில் உற்பத்திசெய்து சிறுநீர்ப்பாதையில் உள்ள கற்களின் அடைப்பை நீக்குகின்றது.உடலில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகின்றது.  செரிமான பிரச்னைகளையும் சரிசெய்யக்கூடியது. கெட்ட கொழுப்பை குறைப்பதால் நமக்கு உடல்நலம் மற்றும் உடற்பருமன் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.

 இதில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால், ரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்ததாகும். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.புற்றுநோய் போன்ற கொடிய நோய் தாக்கியவர்களுக்கு அவகோடா பழம் கொடுத்து வந்தால் அது நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கும்.

அவகோடா பழத்திலுள்ள சேர்மங்கள் ஆர்த்தரைடீஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்னைகளை சரிசெய்வதாக ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்த்தரைட்டீஸால் அவதிப்படுபவர்கள், இந்தப் பழத்தை  தொடர்ந்து  எடுத்துக் கொண்டால்,  மூட்டுவலி குறைந்துவிடும். மேலும், வயோதிகத்தால் மூட்டுப்பகுதிகளில் ஏற்படும்  எலும்பு தேய்மானம் போன்றவையும் ஏற்படாது.உடல் எடையைக் கூட்ட நினைப்பவர்களுக்கு  இப்பழம்  சிறந்ததாகும்.  தினமும்  1 டம்ளர் அவகோடா  மில்க் ஷேக்  எடுத்துக் கொண்டால்,  விரைவில்  உடல் எடை கூடுவதை நன்கு உணரலாம். கண்களின் பார்வைத் திறனை கூட்டும் சக்தி அவகோடாவுக்கு உண்டு. மேலும்,  கண்களில்  புரை வளர்வதையும்  கட்டுப்படுத்தப்படுகின்றது.

தொகுப்பு : தவநிதி

Related Stories: