மலச்சிக்கல்

நன்றி குங்குமம் தோழி

சென்ற இதழில் மூலநோய் பற்றியும் அதற்கான காரணங்கள் மற்றும் ஆயுர்வேத தீர்வுகள் பற்றியும் விளக்கமாக எழுதியிருந்தேன். அதைத்தொடர்ந்து மூலநோய்க்கு முக்கியமான காரணமாக உள்ள மலச்சிக்கல் பற்றிய பல சந்தேகங்களை இப்போது பார்ப்போம்...மலச்சிக்கல் என்பது எல்லோரும் அறிந்த ஒரு நோயாக இருந்தாலும், அதில் ஒரு மருத்துவராக நான் அறிந்த நீங்கள் அறிந்திராத விஷயங்களை இன்று எழுதுகிறேன். நாள்பட்ட மலச்சிக்கல் என்பது சில வாரங்கள் அல்லது அதற்கும் மேலாக நீடிக்கும் கடினமான மலம் கழித்தல் எனக் கூறலாம்.

மலச்சிக்கலை கண்டுபிடிப்பது சிரமமான காரியம் இல்லை.  மலச்சிக்கல் என்பது பொதுவாகவே ஒரு வாரத்திற்கு மூன்றுக்கும் குறைவான மலம் கழிப்பது என்றானாலும் பல நோயாளிகள் உண்மையில் தினசரி மலம் கழித்துக் கொண்டிருந்தாலும் தங்களுக்கு கடினமான மலச்சிக்கல் இருப்பதாக கூறுவார்கள். அதற்கு காரணம் அவர்களால் இயல்பாக மலத்தை முழுமையாக வெளியேற்ற முடியவில்லை என்பதே ஆகும்.

ஆதிகாலத்திலிருந்து மிகவும் பொதுவாக காணப்படும் ஒரு நோய் என்று கூறினால், அது மலச்சிக்கல் எனலாம். நம் எல்லோருக்கும் எப்போதாவது மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படலாம். ஆனால் சிலருக்கு எப்பொழுதுமே அது ஒரு சிரமமாக ஆகிவிடக் கூடிய சந்தர்ப்பம் இருக்கும். இதற்காக அவர்கள் மிகவும் சிரமப்படுவதும் அதை நீக்குவதற்கு முயற்சிகள் எடுப்பதும் நம் வாழ்வில் நாம் அன்றாடம் பார்க்கும் அல்லது கேட்கும் ஒரு விஷயமாகவே இருக்கும். நம் வீட்டிலேயே நமது தாத்தாவோ பாட்டியோ இப்படி ஒரு பிரச்சனையில் இருந்து அதற்கு ஒரு விடை தெரியாமல் தவித்துக் கொண்டு அதனால் மனம் நொந்து வேதனை அடைந்து போவதை நாம் பார்த்திருக்கக் கூடும்.

நம் மலம் பொதுவாக முழுமையாக நமது குடல்களில் உருவாகி அது மல துவாரம் வழியாக வெளியில் வந்தவுடன் தண்ணீரில் மிதக்க வேண்டும். கழுவியவுடன் அம்மலமானது தண்ணீரில் கலங்கி உடைந்து போக வேண்டும். இதுதான் இயற்கையாக உணவு நன்கு ஜீரணித்து பின் மலம் வருவதற்கான அறிகுறியாகும்.

மலச்சிக்கல் என்பது பலருக்கு குடல் இயக்கத்தை தாண்டிய ஒரு பிரச்சினையாக இருக்கும். ஆயுர்வேதத்தின் படி உடலில் வாத மிகுதியினால் மலங்கள் காய்ந்து மலச்சிக்கல் ஏற்படுவதாக அறிகிறோம். பொதுவாக முடக்கு வாதம், ஒற்றைத் தலைவலி, மனச்சோர்வு, செயாடிகா (sciatica) போன்ற  நோய்கள் உள்ளவர்களுக்கு இந்த மலச்சிக்கலும் சேர்ந்தே காணப்படுவது வழக்கம். இவர்களுக்கு, இம்மலச்சிக்கலை போக்குவதற்கான உணவுகளையும் செயல்முறைகளையும் மருந்துகளையும் கொடுப்பதே அந்த முக்கியமான நோயை தவிர்க்கவும் குணப்படுத்தவும் பெரிதாக உதவுவதை என்னுடைய அனுபவத்தில் பார்க்கிறேன்.

காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக மலத்தை முழுமையாக கழிப்பது என்பது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். அப்படி செய்தோமேயானால் அந்நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருப்பதையும்  நமது பசி மண்டலம், செரிமான மண்டலம் சீராக இயங்குவதையும் பார்க்கலாம். அப்படி இயற்கையாக காலையில் மலம் கழிக்க முடியவில்லை என்றால் அன்று முழுவதும் உடல் சோர்வாகவும், அசதியாகவும், புத்துணர்வு இன்றியும் செயல்படுவது நாம் எல்லோரும் அறிந்து உணர்ந்த விஷயமே.

நாம் உண்ணும் உணவு வயிற்றிலும், சிறுகுடலிலும் பயணிக்கும் போது பல்வேறு அமிலங்களுக்கு ஆட்படுத்தப்பட்டு, அதில் இருந்து உடலுக்குத் தேவையான சத்துக்கள் எடுக்கப்படுகின்றது. தேவையான சத்துக்களைப் பிரித்தெடுத்த பின் மிஞ்சும் சக்கை, கழிவாக பெருங்குடலுக்கு வந்து சேர்கிறது. பெருங்குடலில் தண்ணீர் பெரும்பகுதி உறிஞ்சப்பட்டவுடன்,  மீதி உள்ளவை மலமாக வெளியேற்றப்படுகிறது.

நாம் உண்ணும் உணவு 18 மணி முதல் 24 மணி நேரத்திற்குள் மலமாகி வெளியேறுவதுதான் இயல்பு. சில காரணங்களால் நாம் உட்கொள்ளும் உணவு மலக்குடலில் தங்கிவிடுவதாலும், அதிலிருக்கும் தண்ணீர் மொத்தமாக உறிஞ்சப்படுவதாலும் மலம் இறுகி , மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. வலியுடன் மலங்கழிப்பதற்கு மலச்சிக்கலே பொதுவானக் காரணமாக அமைகிறது. கடும் மலச்சிக்கல் நோய் மலச்சிக்கல், வாயு வெளியேற்ற முடியாதநிலை மற்றும் மலக்கட்டு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

பெண்களுக்கு அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு மல வாயும் மூத்திர தாரையின் வெளிப்பக்கமும் (பிறப்புறுப்பும்) அருகருகே இருப்பதால் நாள்பட்ட மலச்சிக்கலின் போது மல துவாரத்திலிருந்து கிருமிகள் வெளிவர அதிக வாய்ப்புள்ளது, அக்கிருமிகள் பிறப்புறுப்பை சென்றடைந்து சிறுநீர் சம்பந்தப்பட்ட பல நோய்த்தொற்றுகளை உருவாக்க வாய்ப்பும் உள்ளது.  எனவேதான் எப்பொழுதுமே பெண்கள் மல வாயை கழுவும் போது அல்லது துடைக்கும் போது பின்பக்கமாக இருந்து கழுவ வேண்டும்.

பொதுவான காரணங்கள்

பெரியவர்களில் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு பின்வரும் காரணங்களை குறிப்பிடலாம்...

*இயற்கையிலேயே வாத உடல் அமைப்பு உள்ளவர்கள்.

*உணவுமுறையில் மாற்றம், காலம் தவறி சாப்பிடுவது.

*இரவு அதிகநேரம் கண்விழித்தல், பகல் உறக்கம், போதுமான தூக்கமின்மை. உடல் வெப்பம் போன்றவையும்.

*குறைந்த நார்ச்சத்துள்ள உணவுகள் மற்றும் உணவில் காய்கறிகள், கீரைகள், பழங்களை தவிர்த்தல்.

*உணவில் அதிகப்படியான கொழுப்புகள், காரமான, மசாலாக்கள் கலந்த உணவுகள், கிழங்கு வகைகள், அதிக மாமிசங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்.

*டென்ஷன், ஸ்ட்ரெஸ், உணர்ச்சிவசப்படுதல், படபடப்பு.

*மைதாவில் செய்யப்பட்ட உணவுகளான பிரெட், நான், புல்கா, பரோட்டா, பீட்ஸா, பிஸ்கெட், பர்கர், நூடுல்ஸ் அதிகமாக உட்கொள்ளுதல்.

*தேவையான அளவு நீர் மற்றும் திரவ உணவுகள் அருந்தாமல் இருப்பது; டீ, காபி மற்றும் குளிர்பானங்களை அடிக்கடி பருகுதல்.

*குறைந்த அளவு உடல் உழைப்பு அல்லது உடல் உழைப்பின்மை.

*இரும்பு, சுண்ணாம்பு சத்துள்ள மாத்திரைகள், ஆண்டாசிட் மற்றும் வலி நிவாரணிகள்.

*கட்டிகள், மகப்பேறு, உடல் பருமன் ஆகிய காரணங்களினால் அதிகமன அழுத்தம்.

*தினமும் ஒரே நேரத்தில் மலம் கழிக்க முற்படாதபொழுது.

*புகை பிடித்தல், மது அருந்துதல், அடிக்கடி நீண்டநேர பிரயாணம்.

*மலம்வரும் போது கழிக்காமல் அடக்கிவைத்துக் கொள்வது.

*நீர் அதிகமாக பருகாமல் இருக்கும் போதிலும் அல்லது உடலில் நீர் சத்து குறையும் போதும் காய்ச்சல், வாந்தி, மலச்சிக்கல் ஏற்படலாம்.

*நாட்பட்ட மலச்சிக்கல் இருப்பவர்கள் அடிக்கடி மலமிளக்கி மற்றும் பேதி மருந்துகளை சாப்பிடுவதாலும் இயற்கையாக தூண்டப்படும் மலக்கழிச்சல் உணர்வு தோன்றாமல் மலச்சிக்கல்

உண்டாகலாம்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல்

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பொதுவாக மூன்று வெவ்வேறு நிலைகளில் ஏற்படலாம்.

*ஃபார்முலா அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தொடங்கிய பிறகு (குழந்தையாக இருக்கும்போது).

*குழந்தை பருவத்தில் கழிவறை பயிற்சிக்கு முன்.

*பள்ளி தொடங்கிய உடனேயே (கால நேர உணவுப் பழக்க மாற்றங்களினால்).

பிறந்த பிறகு, பெரும்பாலான குழந்தைகள் ஒரு நாளைக்கு 4-5 மென்மையான திரவ குடல் இயக்கங்களை கடந்து செல்கின்றனர். பொதுவாக ஃபார்முலா ஃபுட் என்று அழைக்கப்படும் (பவுடர் பால்) சந்தைப்படுத்தப்படும் உணவுகளுடன் ஒப்பிடும்போது தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுக்கு அதிக குடல் இயக்கங்கள் இருக்கும். இரண்டு வயதிற்குள். நான்கு வயதிற்குள், ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு 1-2 குடல் இயக்கங்கள் வரை இருக்கலாம்.

பிற காரணங்கள்

*பொதுவாக முதுமையின் காரணமாக உணவுப் பழக்க வழக்கங்கள் மாறுவதாலும், தூக்கம் குறைவதாலும், உடல் உழைப்பு குறைவதாலும், மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. மூட்டுவலி, இடுப்புவலி உள்ள வயதானவர்கள் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பதாலும் அவர்களுக்கு மலச்சிக்கல்

வரலாம்.

*அது போல் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மலக்குடல் மேல் அழுத்தம் ஏற்படுவதாலும், மாதவிடாய் காலத்திலும் அதுக்கு முன் பின் சில நாட்களுக்கும் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மருத்துவக் காரணங்கள்

*மலச்சிக்கலினால் மூலம் வர வாய்ப்புகள் அதிகம். இம்மூல பிரச்சனையினால் மலச்சிக்கல் மேலும் தீவிரமடைய வாய்ப்புகள் அதிகம்.

*மலக்குடலுக்குறிய புற்றுநோய் கட்டியினால் ஏற்படும் அடைப்பு

*தைராய்டு போன்ற ஹார்மோன் நோய்கள்

*சர்க்கரை நோய், பித்தப்பை கற்கள், குடலிறக்கம் உள்ளிட்ட சில நோய்களால் பெருங்குடல் மிக மெதுவாக வேலை செய்தல்,

*பெருங்குடல், ஆசனவாய் இவற்றில் உள்ள தசைகளில் புண், கட்டி, சீழ், பௌத்திரம் போன்ற வியாதிகள் இருத்தல்.

*கிரகணி என்னும் IBS மற்றும் அதைச்சார்ந்த நோய்கள்.

அறிகுறிகள்

*மலம் கழிப்பதில் சிரமம்.

*மலம் முழுமையாக வெளியேறாத உணர்வு.

*வழக்கத்தை விட குறைவாக மலம் கழித்தல்.

*கட்டியான உலர்ந்த அல்லது கடினமான மலம்.

*அடிவயிற்றில் வலி மற்றும் தசைப்பிடிப்பு

*குமட்டல், பசியின்மை, தலைவலி மற்றும் உடல்நலம் குறைவாக இருப்பதான உணர்வு.

கவனம் தேவை

மலச்சிக்கலை ஆரம்ப காலங்களிலேயே கவனிக்காவிட்டால் அது பல தீவிரமான நோய்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு. உதாரணமாக செரிமானமின்மை, வாய்வுத் தொல்லை, வயிற்றுப்புசம், தலைவலி முதல் குடலிறக்கம், நெஞ்சுவலி, மலக்குடல் ரத்தப்போக்கு, குதபிளவு, மூலநோய் (பைல்ஸ்),  குடல் புற்றுநோய் வரை ஏற்பட வாய்ப்பு உண்டு, எனவே மலச்சிக்கலை உடனே கண்டறிந்து அதற்கான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்தல் மற்றும் மேற்கூறிய காரணங்களை அறவே தவிர்த்தல் ஆகியவை செயல்படுத்த வேண்டும். மேற்கூறிய காரணங்களை தவிர்க்காது மருந்துகளை மட்டும் சாப்பிட்டால் அது ஒரு நிரந்தர தீர்வை கொடுக்காது. மேலும் சில நாட்களில் மலச்சிக்கல் தீவிரமடையவும் வாய்ப்புண்டு.

ஆயுர்வேத சிகிச்சை முறை    

மலச்சிக்கல் ஆயுர்வேதத்தில் விபந்தம் என்ற தலைப்பில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தில் உள்புற மற்றும் வெளிப்புற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

*முதலில் நிதான பரிவர்ஜனம் என்னும் காரணிகளைத் தவிர்த்தல்:  ஒழுங்கற்ற உணவுப் பழக்கம், குறைந்த நார்ச்சத்து உணவு, மன அழுத்தம் மற்றும் குறைவான அளவு திரவம் உட்கொள்ளல் மற்றும் மேற்கூறிய அனைத்து காரணங்களையும் தவிர்க்க வேண்டும்.

*
வருடத்துக்கு இரண்டு முறை பேதிக்குச் சாப்பிட்டு வாய் முதல் ஆசனவாய்வரை உள்ள உணவுப் பாதையை முழுமையாகச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆயுர்வேதம் அறிவுரைக்கின்றது.

*சரியான நேரத்துக்குச் சத்தான அறுசுவை உணவை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். வயிற்றை அரைப் பங்கு உணவு, கால் பங்கு நீர், கால் பங்கு வெற்றிடமாக வைத்துக்கொள்ள

வேண்டும்.

*குடலுக்கு நன்மை செய்யக்கூடிய `புரோபயாடிக்’ கூறுகள் நிறைந்த மோரை அவ்வப்போது குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும். இள வெந்நீர், குடலின் அசைவுகளை அதிகரிக்க (Increases peristalsis) உதவும்.

*போதுமான தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலுக்கான முதல் மருந்து.

*குளிர்பானங்களை எப்போதும் அருந்தக் கூடாது.

*விளக்கெண்ணெய் அமைதியான மலமிளக்கி. விளக்கெண்ணெயை மலமிளக்கியாகக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உபயோகிக்கலாம்.

*இதிலெல்லாம் குணமாகவில்லை என்றால் அடுத்து சம்ஷோதன சிகிச்சை - பஞ்சகர்மா (சுத்திகரிப்பு சிகிச்சைகள்), பேதிக்கு கொடுப்பது அல்லது பீச்சு என்னும் வஸ்தி (எனிமா) சிகிச்சை செய்வது. பின் பலவர்த்தி (சப்போசிட்டரிகள்) பயன்படுத்துவது இந்நோயை முற்றிலுமாக குணமாக்கி வாழ்க்கை முழுவதும் மருந்துகள் உட்கொள்ளவேண்டும் என்ற நிலையை மாற்றும்.  

*மலச்சிக்கலுக்கு ஆயுர்வேதத்தில் குடல் சுத்தி செய்த பிறகு சில மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றது. இதை ஒரு மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு எடுத்துக் கொள்வது சிறந்த தீர்வாக இருக்கும்.

பிரசித்தி பெற்ற மருந்துகளான அவிபத்திகர சூரணம், திரிபலாச் சூரணம், கடுக்காய் சூரணம், கந்தர்வஹஸ்தாதி கசாயம், அபயாரிஸ்டம், ஹிங்குதிரிகுண தைலம், ஹிங்வாஷ்டக சூரணம்,

சுகுமார லேகியம் ஆகியவை நல்ல பலன் அளிக்கும் மருந்துகளாக விளங்குகின்றன.

தொகுப்பு : உஷா நாராயணன்

Related Stories: